10 Apr 2018

உதவியில் ஏது சிறியது பெரியது?


குறளதிகாரம் - 11.4 - விகடபாரதி
உதவியில் ஏது சிறியது பெரியது?
            மனிதர்களில் உயர்வு, தாழ்வு இருப்பது போல,
            உயிர்களில் சிறியது, பெரியது இருப்பது போல,
            உதவியில் சிறியது, பெரியது உண்டா?
            செய்யாமல் செய்த உதவி பூமியையும், வானையும் விட பெரியது.
            காலத்தே செய்த உதவி பூமியை விட பெரியது.
            பயன் கருதாது செய்த உதவி கடலை விட பெரியது.
            உதவி என்பது பூமி, வான், கடலை விட பெரியதாகவே இருக்கிறது. உதவியில் சிறிய உதவி என்பது ஏது?
            ஒருவேளை செய்யப்பட்ட உதவி உண்மையிலேயே அளவில் வடிவில் உருவில் சிறிய உதவியாக இருந்தால் அது சிறிய உதவிதானே! ஆயினும் உதவியில் சிறிய உதவி என்பது இல்லை. சிறிய உதவியாக செய்தாலும் அது பெரிய உதவியாக ஆகி விடுகிறது.
            வலையில் அகப்பட்ட சிங்கத்தை வலை நரம்புகளைக் கடித்து அறுத்துக் காப்பாற்றிய சுண்டெலியின் உதவி சுண்டெலிக்குச் சிறியதாக இருக்கலாம். சிங்கத்துக்குப் பெரிய உதவி.
            ஓர் அவசர அறுவைச் சிகிச்சையின் போது ஒரு குறிப்பிட்ட வகை ரத்தம் அவசியம் தேவைப்படும் நிலையில் அவ்வகை ரத்தத்தை வழங்க முன்வருபவருக்கு அது சிறிய உதவியாகத் தெரியலாம். இரத்ததைப் பெறும் நிலையில் இருப்பவருக்கு அது பெரிய உதவி.
            வாகனத்தில் சிறிய அளவில் கொடுக்கப்படும் ஆக்ஸிலேட்டர் பெரிய அளவில் விசையை வெளிப்படுத்தச் செய்து வாகனத்தை விரைவு படுத்துவது போல, சிறிய அளவிலான உதவி பெரிய அளவிலான மாற்றத்தை உண்டு பண்ணி விடுவதால் உதவியில் சிறிய உதவி என்பதே இல்லாமல் போகிறது.
            ஓர் ஏழைப் பிள்ளையின் கல்விக்கு உதவுவது சிறிய உதவியாக இருக்கலாம். அப்பிள்ளைப் படித்துச் சான்றோராக மாறும் போது அவ்வுதவியை விட பெரிய உதவி வேறென்ன இருக்க முடியும்!
            ஒரு சிறிய உதவி பெரிய மாற்றங்களை விதைக்கிறது, மாபெரும் ஒரு பயணம் எடுத்து வைக்கும் ஒரு சிறு அடியில் ஆரம்பிப்பதைப் போல.
            பெரிய ஆலமரம் சிறிய விதையில் முளை விடுவதைப் போலத்தான் ஒரு சிறிய உதவியில் பெரிய மாற்றங்கள் முளை விடுகின்றன.
            பயன் தரக் கூடிய எந்த ஒரு சிறிய உதவியும் சிறிய உதவியாக இருக்க முடியாது. அது பெரிய உதவியாக உருமாறி விடுகிறது.
            உதவியின் பயனை அறிந்தவர்கள் எதையும் சிறிய உதவியாகக் கருதுவதில்லை. அதைப் பெரிய உதவியாகவே நோக்குகிறார்கள்.
            சிறு துரும்பும் பல் குத்த உதவும்தானே!
            ஆபத்தில் செய்யப்படும் சிறிய உதவியும் பெரிய உதவிதானே!
            உதவியின் பயனை நோக்குமிடத்து உலகில் சிறிய உதவிகள் என்று எதுவும் இல்லை. பூமியை விட, வானை விட, கடலை விட பெரிய உதவிகள்தான் இருக்கின்றன.
            உதவிகளில் உயர்வு தாழ்வுகள் இல்லை. உயர்வு மட்டுமே இருக்கிறது.
            தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்.
            தினையளவு உதவியும் பனையளவாகத் தெரியும் என்று வள்ளுவரே கூறி விட்டப் பிறகு இனியும் உதவிகளைச் சிறிய உதவி என்று எந்த உதவியையாவது சிறுமை படுத்த முடியுமா? ஒவ்வொரு உதவியையும் பெரிய உதவி என்று பெருமைபடுத்தத்தான் முடியும் அன்றோ!
            சிறிய வெளிச்சம் போதும் பெரிய இருட்டை விரட்ட.
            சிறிய உதவி போதும் பெரிய மாற்றத்தை உண்டு பண்ண.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...