10 Apr 2018

செங்காந்தள் அறிவுத் திருவிழா - 6


செங்காந்தள் அறிவுத் திருவிழா - 6
            மாணவர்களை நோக்கிய செங்காந்தள் அறிவுத் திருவிழா எனும் புத்தகக் கண்காட்சி ஒரு லட்சம் புத்தகங்களை மாணவர்களின் கைகளில் கொண்டு சேர்க்கும் இலக்கு உடையதாகும்.
            செங்காந்தளின் ஆறாவது அறிவுத் திருவிழா, திருவாரூர் மாவட்டம், கோட்டூர், கலைவாணி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 07.04.2018 (சனி) மற்றும் 08.04.2018 (ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.
            முதன் முதலாக தனியார் பள்ளியில் நடைபெற்ற செங்காந்தளின் அறிவுத் திருவிழா இதுவாகும்.
            அது மட்டுமல்லாது முதன் முதலாக இரண்டு நாட்கள் நடைபெற்ற அறிவுத் திருவிழாவும் இதுவேயாகும்.
            கலைவாணிப் பள்ளியின் விளையாட்டு விழாவோடு இணைந்து நடைபெற்ற வகையில் விளையாட்டு விழாவோடு இணைந்து நடைபெற்ற முதல் அறிவுத் திருவிழாவும் இதுவாகும்.
            மாணவர்களும் பெற்றோர்களும் கொண்டாடித் தீர்த்த வகையில் ஒரு திருவிழாவின் கொண்டாட்டத்தை அனைவரது முகத்திலும் இத்திருவிழாவில் காண முடிந்தது. புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்ட மாணவர்கள் எவரும் ஒரு புத்தகத்தோடு நிறைவடைந்து விடாமல் இன்னொன்று இன்னொன்று என்று வாங்குவதில் அடங்காத ஆசையோடு இருந்ததை இத்திருவிழாவில் காண முடிந்தது.
            பொம்மை கேட்டு அழுது அடம் பிடித்த குழந்தைக்கு ஒரு பொம்மையை வாங்கிக் கொடுத்தால், அக்குழந்தை இன்னொரு பொம்மையைக் காட்டி அதையும் வாங்கித் தருமாறு அடம் பிடிப்பது போல ஒவ்வொரு மாணவரும் தங்கள் பெற்றோர்களிடம் அடம் பிடித்துப் புத்தகங்களை வாங்கித் தருமாறு சொன்னது இத்திருவிழாவில் காணக் கிடைத்த புதியக் காட்சியாகும்.
            இதையெல்லாம் வாங்கித் தந்தால் நீ படிப்பாயா? என்று கேட்ட தந்தைக்கு ஒரு மாணவர், வாங்கித் தந்தால்தானே படிக்க முடியும் என்று பதில் அளித்தது பேராச்சரியமாய் இருந்தது.
            மாணவர்கள் தேனீக்கள் போல் புத்தகங்களை மொய்க்க விரும்புகிறார்கள். தேனீக்கள் மொய்க்க மலர் இல்லாமல் போனால் தேனீக்கள் என்ன செய்யும்?
            மாணவர்கள் புத்தகங்களை விரும்பும் போது அவர்கள் வாங்குவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்?
            மாணவர்கள் புத்தகங்களை விரும்புகிறார்கள். அவர்களின் பெரு விருப்பத்தைத் தணிக்கும் வகையில் புத்தகங்கள் அவர்கள் முன் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அதைத்தான் அறிவுத் திருவிழா பள்ளிகள் தோறும் செய்து வருகிறது.
            இவ்வாறாவது அறிவுத் திருவிழாவில் பெற்றோர்களும், மாணவர்களுமாய்ச் சேர்ந்து 429 புத்தகங்களை அள்ளிச் சென்றுள்ளனர்.
            அறிவுத் திருவிழாவின் இலக்கான ஒரு லட்சம் புத்தகங்கள் என்பதில் இன்னும் 97,928 புத்தகங்களை மாணவர்களின் கரங்களில் கொண்டு சேர்க்க வேண்டிய நிலையில், ஆறாவது அறிவுத் திருவிழாவில் கொண்டு சேர்க்கப்பட்ட 429 புத்தகங்களைக் கணக்கில் கொண்டால், 97,928 - 429 = 97,499. இன்னும் 97,499 புத்தகங்களைப் பிஞ்சு கரங்களில் கொண்டு சேர்க்க கரம் கோர்ப்போம். அறிவுலக கனவுக்கான உரம் சேர்ப்போம்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...