18 Apr 2018

மாபெரும் புத்திசாலித்தனத்தின் பாதை


மாபெரும் புத்திசாலித்தனத்தின் பாதை
            போகின்றப் போக்கைப் பார்த்தால் எஸ்.கே.வுக்கு எல்லாரிடமும் எதிர்ப்பு உருவாகி விடும் போலிருக்கிறது. எதிர் கேள்விகள் கேட்டால் எல்லாரும் திருந்தி விடுவார்கள் என்று நினைக்கிறார். ஆனால் சாக்ரடீஸ்க்கு என்ன நேர்ந்தது என்பதை மறந்து விடுகிறார்.
            அவரவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வதில்தான் வாழ்தல் என்பது அடங்கியிருக்கிறது. இங்கு எல்லாரும் அப்படித்தான். அவரவர் ஒரு மனநிலை கொண்டு வாழ்கிறார். யாரையும் இப்படி ஒரு மனநிலையில்தான் இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது.
            எஸ்.கே.வே என்ன நினைக்கிறார், ஓர் எதிர் நடவடிக்கை எடுத்தால் அதற்குப் பயந்து அவர் மாறி விடுவார் என்று நினைக்கிறார். நிலைமை இன்னும் விபரீதம் ஆனால்... அதாவது பயப்படுவதற்குப் பதில் அவரும் எதிர்க்க ஆரம்பித்து விட்டால், அவரை அந்நிலையிலிருந்து பயப்படுத்துவதற்கு எஸ்.கே. இன்னும் அதி தீவிரமாக எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். இதற்கு ஒரு முடிவே இருக்காது. தொடர்ந்து கொண்டே இருக்கும்.
            ஆகவேத்தான் சொல்லப்படுவது என்னவென்றால்... யாரையும் மாற்ற முயல வேண்டாம். மாற்ற வேண்டும் என்று நினைக்கும் போது எதாவது நடவடிக்கை தேவைபடுகிறது. யாரையும் மாற்ற வேண்டாம் எனும் போது எந்த நடவடிக்கையும் தேவையில்லை. எஸ்.கே. பாட்டுக்குப் பேசாமல் இருந்து கொள்ளலாம்.
            அதனால்தான் ஒரு நிகழ்வை ஏற்றுக் கொள்ளும் போது எஸ்.கே. எளிமையாகிறார். ஏற்றுக் கொள்ள மறுக்கும் போது மனதளவில் கடுமையாகிறார்.
            அதே போல யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவும் கூடாது. அப்படி எதிர்பார்க்கும் போது அவரிடம் அது கிடைக்காத ஒரு சூழ்நிலை ஏற்படும் போது அவரை நிர்பந்தபடுத்த வேண்டிய நிலை ஏற்படும். யாரும் கட்டாயத்துக்கு உட்பட மாட்டார்கள். ஆனால் கட்டாயத்துக்கு உட்படுத்த முயலும் போது ஒருவருக்கொருவர் எதிர்த்துக் கொண்டு மீண்டும் ஓர் இக்கட்டான சூழ்நிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
            ஆகவேத்தான் சொல்லப்படுவது என்னவென்றால்...
            அவர் அப்படி பேசுகிறார் என்றால், அப்படியே பேசட்டும்.
            அவர் அப்படிச் செயல்படுகிறார் என்றால், அப்படியே செயல்படட்டும்.
            அவர் அப்படி ஒரு மனநிலையில் இருக்கிறார் என்றால், அப்படியே இருக்கட்டும்.
            அவரை மாற்றி எஸ்.கே.வுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. அவரை மாற்றுவதற்காக எஸ்.கே. சக்தியை நாம் விரயமாக்க வேண்டிய அவசியமும் இல்லை.
            எஸ்.கே. தம் மனநிலையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் எதையும் ஒரு கட்டாயமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. நன்றாக வளையத் தெரிந்திருக்க வேண்டும். காற்றடிக்கும் போது வளைந்து கொள்ள வேண்டும். காற்றடிக்காத போது நிமிர்ந்து நிற்க வேண்டும். இது கோழைத்தனம் ஆகாது. எப்போது எப்படி இருக்க வேண்டும் என்கின்ற புத்திசாலித்தனம் ஆகும்.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...