1 Apr 2018

செய்கூலி, சேதாரம் அற்ற நகைகள் வாங்குவது எப்படி?


குறளதிகாரம் - 10.5 - விகடபாரதி
செய்கூலி, சேதாரம் அற்ற நகைகள் வாங்குவது எப்படி?
            வாழ்க்கையில் எது அழகு?
            வாழ்க்கையே அழகுதான்.
            உள்ளதை உள்ளபடி கண்டால் வாழ்க்கை அழகு.
            இல்லாததை இருக்கும்படி காண முயலும் போதுதான் வாழ்க்கை அழகற்றதாகி விடுகிறது.
            பிறக்கும் போது செருக்கும், சினமும் யார் மனதிலும் இருப்பதில்லை. வன்சொல்லும் வாயிலிருந்து பிறப்பதில்லை.
            வளர வளர மனிதர் தலையில் செருக்கை ஏற்றிக் கொள்கிறார். நெஞ்சில் சினத்தை சுமக்கத் துவங்குகிறார். வாய் வன்சொல் வழங்குவதை வழக்கமாக்கிக் கொள்கிறார்.
            குழந்தைமையில் அதன் கபடமற்றத் தன்மையால் அழகாக இருக்கும் முகம் செருக்கை ஏற்றிக் கொள்வதால், சினத்தைச் சுமக்கத் துவங்குவதால், வன்சொல் வழங்குவதால் அதன் கபடத் தன்மையால் அழகற்றதாக மாறத் துவங்குகிறது.
            அழகற்ற முகத்தைத் தாங்கும் உடலை தங்கத்தைக் கொண்டு, வெள்ளியைக் கொண்டு, முத்துகளைக் கொண்டு, வைர வைடூரியங்களைக் கொண்டு ஆபரணங்கள் செய்து உடலில் அணிந்து ஆடம்பரத் தோற்றத்தைக் கொண்டு வந்து அதன் மூலம் முகத்தை அழகாகக் காட்ட முயலுவதுண்டு.
            ஆடம்பரத்தால், வெளித்தோற்றத்தால் வரும் அழகு அகத்தை அழகுபடுத்துவதில்லை. அதனால் அகம் மேலும் குப்பைக் கூளமாகிறது.
            உண்மையான அழகு என்பது அகத்தின் அழகாலும், அதன் விளைவாக மிளிரும் முகத்தின் அழகாலும் உண்டாகிறது. அவ்வழகே அணி.
            அவ்வணியைப் பெற அகத்தில் பணிவும், முகத்தில் இருக்கும் வாயில் இன்சொல்லும் இருந்தால் போதும்.
            அகத்தில் பணிவு இருந்தால் போதும் அதுவே அழகு. அதுவே அணி. அகத்துக்கு அருகே தங்க நகைகளையோ, முத்து மாலைகளையோ, வைர அட்டிகையையோ தொங்கி விடச் செய்து அழகு காட்டத் தேவையில்லை. பணிவின் அழகின் முன் அணிகளின் அழகு பட்டுப் போகும். ஏனென்றால் பணிவே பட்டுப் போகாத அணி.
            முகத்தில் இருக்கும் வாயில் பிறப்பது இன்சொல்லாக இருந்தால் முகத்துக்கு அதுவே அழகு. அதுவே அணி. முகத்துக்கு முகபூச்சோ, கண்ணுக்கு கண் மையோ, தலைமுடிக்குச் சாயமோ, காதுக்கு காதணியோ, மூக்குக்கு மூக்கணியோ, தலைக்குக் கிரீடமோ அணிந்து அழகு செய்ய வேண்டியதில்லை. இன்சொல்லே முகத்தின் முத்தான அணி. முத்துக்கள் ஒளி மங்கலாம். இன்சொற்கள் அப்படியல்ல, ஒளி மங்காது, அழகு குன்றாது.
            அகத்தில் பணிவும், முகத்தில் இன்சொல்லும் அழகு. அஃதே அணி.
            அதாவது
            உள்ளத்தில் அடக்கமும், சொல்லில் இனிமையும் அழகு. அஃதே அணி.
            இப்படி பணிவையும், இன்சொல்லையும் இயல்பாகக் கொண்டிருந்தால் நகைகள் அணியும் இயல்பே தேவையில்லை.
            பணிவையும், இன்சொல்லையும் பழக்கமாக, வழக்கமாகக் கொண்டிருந்தால் ஆபரணங்கள் சூடும் பழக்கமும், வழக்கமும் தேவையில்லை.
            பணிவையும், இன்சொல்லையும் கொண்டிருக்கும் மனிதருக்கு அழகு செய்ய வேண்டிய அவசியமில்லை. அவைகளே அழகு. அவைகளே அணி. அவைகளை அணிகளாய் அணிவதே மானுடத்தின் தலையாயப் பணி.
            பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற என்கிறார் வள்ளுவர்.
            பணிவும், இன்சொல்லும் இருக்க வேறு அணிகள் எதற்கு?
            தங்கத்தையும், வைரத்தையும் அணிகளாக அணிந்தால் கள்வர்கள் உருவாகலாம் அல்லவா!
            பணிவையும், இன்சொல்லையும் அணிகளாக அணிந்தால் நல்லவர்கள் மட்டுமேதான் உருவாகுவார்கள் அல்லவா!
            மேலும் சேதாரம் இல்லாத நகைகளா? செய்கூலி இல்லாத அணிகளா? வரிகள் இல்லாத ஆபரணங்களா? கள்வர் பயமில்லாத விலை உயர்ந்தப் பொருட்களா?
            சேதாரம் இல்லாத நகைகள் பணிவும், இன்சொல்லும்.
            செய்கூலி இல்லாத அணிகள் பணிவும், இன்சொல்லும்.
            வரிகள் இல்லாத ஆபரணங்கள் பணிவும் இன்சொல்லும்.
            கள்வர் பயமில்லாத விலை உயர்ந்தப் பொருட்கள் பணிவும் இன்சொல்லும்.
            செய்கூலி, சேதாரம் இல்லாத நகைகளை வாங்க விரும்புபவர்கள் அதை வாங்க வேண்டியதில்லை. பணிவை நெஞ்சிலும், இன்சொல்லை நாவிலும் தாங்கிக் கொண்டாலே போதும். அணிகளை அணிந்து கொண்டதை விட தனியாக தணியாத அழகு பெறுவர்.
            சேதாரம், செய்கூலி, வரிகள் மற்றும் கள்வர் பயமில்லாத பணிவையும், இன்சொல்லையுமே அணிகளாக அணியட்டும் உலகம். தணியட்டும் கலகம்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...