4 Apr 2018

தனக்குத் தானே பேசிக் கொள்வதன் மர்ம முடிச்சுகள்!


தனக்குத் தானே பேசிக் கொள்வதன் மர்ம முடிச்சுகள்!
            நீங்கள் பாட்டுக்குச் சும்மா இருந்தாலும் சிம்மை மாற்ற வைத்து செல்பேசியை வீணடிக்க செய்து தேவையில்லாத நெருக்கடிகளைக் கொடுத்து விடுகிறது உலகம்.
            என்னமோ தாம்தான் இந்த உலகத்தில் ரொம்ப சரியாக வேலை பார்ப்பது போலவும் மற்றவர்கள் எல்லாம் அபத்தமாக வேலை பார்ப்பது போலவும் நடந்து கொள்கிற எஸ்.கே.க்களால் நிரம்பியது இவ்வுலகம்.
            நீங்கள் நினைப்பதையெல்லாம் பேசி விட முடியாது. எழுதி விடலாம். பாதிப்பு கம்மி. பேசுவது எப்போதும் ஆபத்தானது. முகத்தை முறித்து விடக் கூடியது. அதே நேரத்தில் மனதுக்கும் ஒரு வடிகால் வேண்டும். பேசாமலே இருந்த விட முடியாது. மனதுக்குள் எழுத்து வடிவில் பேசிக் கொள்ள வேண்டும். பேச்சு வடிவில் பேசி ஆபத்தைத் தேர்ந்து கொண்டு விடக் கூடாது. மனதை அப்படித்தான் இலகுவாக வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வேறு வழியில்லை. நெஞ்காலமாக ரகசியமாக எஸ்.கே. கடைபிடித்த இந்த முறையை இப்போது நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். ஓர்
            செய்வதிலெல்லாம் பெரிய தவறு ஒன்று இருக்கிறது. ஒருவர் மாறி விட்டார் என்று நினைத்து பழைய மாதிரி செய்ய முயற்சிப்பதுதான். எவரும் மாறுவதில்லை. மாறியது போல நடிக்கத்தான் செய்கிறார். நாமும் அவர் மாறி விட்டதை நம்புவது போல நடிக்கத்தான் வேண்டுமே தவிர, மாறி விட்டார் என்று நினைத்து எதையாவது செய்து சிக்கிக் கொள்ளக் கூடாது. எவரது குணமும் அவ்வளவு சீக்கிரத்தில் மாறி விடக் கூடியதன்று.
            நினைத்துப் பாருங்கள், எஸ்.கே.வைக் காலில் விழ வைத்தவரின் காலே இல்லாமல் செத்தார் ஒரு காலத்தில். அவர் காலையே அறுத்து எடுக்க வேண்டியதாயிற்று. உடன் எஸ்.கே.வை கூலிப்படை அளவுக்குக் கற்பனை செய்து விடாதீர்கள். சர்க்கரை நோயால் கால் அறுத்து எடுக்கப்பட்டது என்பதுதான் விசயம். மற்றபடி அரிவாளைத் தூக்கக் கூட தெம்பில்லாதவர் எஸ்.கே. எஸ்.கே.வைக் கண்டபடி வார்த்தைகளால் ஏசியவர்கள் தொண்டை குடையப்பட்டு பேச வக்கில்லாமல் கிடக்கிறார்கள். எஸ்.கே.வை எதிர்த்தவர்கள் இந்தப் பூமியில் படாத அவஸ்தைகளைப் படுகிறார்கள், படுவார்கள். எஸ்.கே.வைச் சித்திரவதைச் செய்தவர்கள் சித்திரவதை இல்லாமல் செத்து விட முடியுமா? அந்த நம்பிக்கையில்தான் எஸ்.கே. துன்பங்களைப் பொருத்துக் கொள்கிறார். மோசமானப் பொறுமைதான். எஸ்.கே. என்னதான் செய்வார்?
            இந்த மோசமான அனுபவங்களுக்கு எல்லாம் மிகுந்த நன்றிகளைச் சொல்ல விழைகிறார் எஸ்.கே. ஏனென்றால் அவைகள் மிக அழகான எழுத்தை அவருக்குத் தந்திருக்கின்றன.
            எழுத எழுத மிருதுவாகிறதே மனம். எழுத எழுத உடைகிறதே இறுக்கம் கொண்ட மனம். எழுத எழுத ஏதோ ரசவாதம் நிகழத்தான் செய்கின்றது. கோபம் என்ற பித்தளையிலிருந்து பொறுமை என்ற தங்கத்துக்கு மனம் மாறுகிறது.
            எஸ்.கே.வுக்கு பஞ்ச் டயலாக் பேச வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. பேசினால் செத்தார். அதனால்தான் எழுதி மகிழ்கிறார் அவர்.
            அது என்ன தான் மட்டும் இஷ்டப்படி பேசலாம். மற்றவர்கள் அப்படிப் பேசினால் குமைந்து போனால் அது எப்படி? எஸ்.கே. தனக்குத் தானே பஞ்ச் அடித்துக் கொள்வது மூலம் அதைத் தணித்துக் கொள்கிறார்.
            சில நிலைமைகளில் அவ்வளவு நுணுக்கி நுணுக்கியும் கேள்வி கேட்கக் கூடாதுதான். அது அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் அல்ல. தன் பயத்தை எப்படியாவது போக்கிக் கொள்ள வேண்டும் என்ற பேராசையில். அதற்காக உங்கள் பயத்தை பிறர்க்கு ஏன் கடத்த வேண்டும்?
            வாழ்க்கையில் ரொம்ப பேசக் கூடாது என்பதை பல்வேறு அனுபவங்களில் உணர்ந்திருக்கிறார் எஸ்.கே. அதை சொந்த மக்களிடமும் எஸ்.கே. உணர்ந்தது அண்மையில்தான்.
            இவ்வளவு மோசமாக அவரது மக்கள் பேசி அவர் பார்த்ததில்லை. எந்த வேலையையும் செய்ய ஆர்வமில்லாமல், சோம்பல் படுவதற்கு சப்பைக் கட்டுக் கட்டும் வகையில் சவ சண்டித்தனமாக பேசி எந்த மக்களையும் அவர் இதுவரை சந்தித்ததில்லை. அவர்களை ஒருவாறாக பல பருவங்கள் வரை சமாளித்து வைத்து இருந்தார் எஸ்.கே. அப்போது ஒருவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார் என்பதற்காக அப்படிச் செய்யப் போய் அது விபரீதமாகச் சென்று முடிகிறது எஸ்.கே.வுக்கு. எது தன்னுடையது இல்லையோ அதை தயவுசெய்து கடைபிடிக்காதவர் எஸ்.கே. அது ஆபத்தில்தான் சென்று முடியும், ஆபத்தோடுதான் அது முடிச்சு போடும் என்பதை அனுபவத்தால் அறிந்தவர் அவர்.
            ஆகையால்தான் யாருடன் பேச முடியும் எஸ்.கே.வால்? தன்னுடன் பேச யார் இருக்கிறார் தன்னுடைய எழுத்தைத் தவிர எஸ்.கே.வுக்கு!
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...