4 Apr 2018

இப்போதும் எப்போதும் இன்பம் வேண்டுமா?


குறளதிகாரம் - 10.8 - விகடபாரதி
இப்போதும் எப்போதும் இன்பம் வேண்டுமா?
            மனிதன் மகத்தான சல்லிப் பயல் என்பார் ஜி.நாகராஜன்.
            பெருமைப்படும் வகையில் நடந்து கொள்ளும் மனிதர்கள்தான் சிறுமைப்படும் வகையிலும் நடந்து கொள்கிறார்கள்.
            மனிதர்கள் தமக்குள் இருக்கும் சிறுமைத்தனங்களை எல்லாம் களைந்து விட்டால் மனிதம் என்பதன் பூரணத்துவம் பெறுவர்.
            பிறருடன் சண்டையிட, விரோதம் பாராட்டப் பெரிய காரணங்கள் எதுவும் தேவை இல்லை, அதற்கு அற்பத்தனமான காரணங்களே போதும் என்பது அறிஞர் பெருமக்களின் மொழி.
            அற்பத்தனமானக் காரணங்களே, அற்பத்தனமான சொற்களைப் பேச வைக்கின்றன.
            அற்பத்தனமானச் சொற்களே அற்பத்தனமான விரோதங்களை உருவாக்குகின்றன.
            அற்பத்தனமான விரோதங்களே அற்பத்தனமான சண்டைகளில் வந்து முடிகின்றன.
            எல்லாம் அற்பத்தனம்தான். சண்டையில் வந்து முடியும் போது அது ஒரு பிரமாண்ட காரணத்திலிருந்து முளைத்தது போலத் தோற்றம் தரும்.
            அமைதியை விரும்பும் இடத்து இன்சொற்கள் நல்ல பதில். இன்சொற்கள் இயலாத இடத்தில் மெளனம் நல்ல பதில்.
            கோபமானச் சொற்கள், வசைச் சொற்கள் காரியம் சாதிப்பது போல தெரிந்தாலும் அது ஆழமான மனவடுக்களை உருவாக்கி விடுவது உண்மை.
            கோபத்தில் சொல்லும் சொற்களும்,
            குரோதம் மற்றும் விரோதத்தில் சொல்லும் சொற்களும்,
            பொறாமை தாளாமல் சொல்லும் சொற்களும்,
            பிறரை ஏளனம் செய்யும் வகையில் சொல்லும் சொற்களும்,
            மனம் பொறுக்காது மனக் கட்டுபாடின்றிச் சொல்லும் சொற்களும்,
            மதி மயங்கி மதிப்பற்ற வகையில் சொல்லும் சொற்களும்
சிறுமையானச் சொற்களே. சிறுமையானச் சொற்கள் சிறுமைத்தனத்தையே விதைக்கின்றன. சுரையொன்றை விதைத்தால் முளை விடுவது வேறொன்றாக இருக்காது.
            சொற்களுக்கு வலிமை உண்டு. இன்பத்தைத் தரும் வலிமையும், துன்பத்தைத் தரும் வலிமையும் சொற்களுக்கு இருக்கிறது.
            ஒரு சொல் வாழ்க்கையை மாற்றவும் கூடும். ஒரு சொல் வாழ்க்கையை வீழ்த்தவும் கூடும்.
            சொற்கள் இன்பத்தைத் தரும் போதுதான் விரும்பப்படுகின்றன. துன்பத்தைத் தரும் சொற்கள் வெறுக்கப்படுகின்றன.
            சொற்களில் இன்சொற்களே இன்பத்தைத் தருகின்றன. வன்சொற்கள் மறக்க முடியாதத் துன்பத்தையே தருகின்றன.
            வன்சொற்களைக் கேட்டவர்களால் அவ்வளவு எளிதில் அவைகளை மறக்க முடிவதில்லை. அது நினைவின் சுவர்களுக்குள் அடிக்கப்பட்ட பந்து போல் மோதி மோதி எதிர்விளைவை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. சொற்கள் இப்படித்தான் எதிர் மனப்பான்மையை உருவாக்குகிறது. விரோத உணர்வைக் கட்டமைக்கிறது. சண்டையிடத் தூண்டுகிறது.
            சொற்கள் சிறுமைத்தனங்கள் அற்றதாக இருப்பது என்பது தாகம் தீரத் தரும் தண்ணீர் துளி கூட நஞ்சற்று இருப்பது போல முக்கியம். இனியச் சொற்களுக்கே அத்தகையச் சிறப்பும், பெருமையும் இருக்கின்றன.
            இனியச் சொற்களே இன்பத்தைத் தருகின்றன இப்போதும், எப்போதும்.
            எத்தனை முறை நினைத்தாலும் நினைக்க நினைக்க இனிப்பவை இனியச் சொற்களே. மறுமுறை மறுமுறை மறுமுறை என்று எத்தனை முறை மறுபடியும் மறுபடியும் மறுபடியும் நினைத்தாலும் அத்தனை மறுமையிலும் இன்பம் தருவது இனியச் சொற்கள்தான்.
            பின்னர் எப்போது நினைத்தாலும் இன்பம் தரும். இல்லை இப்போதே நினைத்தாலும் இன்பம் தரும். அதாவது கேட்கும் பொழுதிலும் இன்பம் தரும். கேட்ட பின்பும் இன்பம் தரும்.
            இனியச் சொற்கள் மறுபடியும் நினைக்கும் மறுமையிலும் இன்பம் தரும். கேட்கப்படும் இப்போதான இம்மையிலும் இன்பம் தரும்.
            இதைத்தான் வள்ளுவர்,
            சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் என்கிறார்.
            உலகில் உள்ள எத்தனையோ இப்போது இன்பம் தந்தால், பிற்பாடு இன்பம் தராது. உடலின் இளமை அப்படிப்பட்டது, இளமையில் இன்பம் தரும் உடல் முதுமையில் துன்பமாக அமைவதைப் போல.
            பிற்பாடு இன்பம் தரும் எத்தனையோ அனுபவிக்கும் இக்காலத்து இன்பம் தராது, கற்கும் காலத்துக் கசப்பாகத் தோன்றும் கல்வி பிற்காலத்து இன்பம் தருவதைப் போல.
            கேட்கும் இக்காலத்தும், கேட்ட பின் நினைத்துப் பார்க்கும் எக்காலத்தும் இன்பம் தருபவை இனியச் சொற்களே. கேட்கும் இம்மைக் காலத்து என்பதைத் தாண்டியும், பிற்பாடு நினைத்துப் பார்க்கும் மறுமை காலத்தும் இன்பம் தருபவை இனியச் சொற்கள்.
            இன்பம் தரும் இனியச் சொற்களே நம் பேச்சு முறையாகட்டும். இனியச் சொற்கள் தரும் இன்பமே நம் வாழ்க்கை முறையாகட்டும்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...