7 Apr 2018

போடா! பூமி சின்ன பந்து!


குறளதிகாரம் - 11.1 - விகடபாரதி
போடா! பூமி சின்ன பந்து!
            சிலுவைகளைச் சுமக்கச் செய்ததைத் தவிர நாம் என்ன பெரிதாக உதவி விட்டோம் இயேசு பிரானுக்கு? அவர் இந்த உலகம் முழுமைக்கான அன்பைத் தந்தார். நாம் எந்த உதவியும் செய்யாமல் அவர் நமக்கு செய்த உதவி அன்பும், மன்னிப்பும்.
            துப்பாக்கிக் குண்டைப் பரிசளித்ததைத் தவிர நாம் என்ன பெரிதாக உதவி செய்து விட்டோம் காந்தி அடிகளுக்கு? அவர் நம் நாடு முழுமைக்கான சுதந்திரத்தைப் பெற்று தந்தார். நாம் எந்த உதவியும் செய்யாமல் அவர் நமக்கு செய்த உதவி சுதந்திரமும், சகிப்புத்தன்மையும்.
            எளியோர்க்கு நிதி கேட்ட போது காறி உமிழ்ந்ததைத் தவிர நாம் என்ன பெரிதாக உதவி செய்து விட்டோம் அன்னை தெரசாவுக்கு? அவர் நம் தேசம் முழுமைக்கான எளியோர் மற்றும் இயலாதோர்க்கான கருணையைத் தந்தார். நாம் எந்த உதவியும் செய்யாமல் அவர் நமக்கு செய்த உதவி கருணையும், மனிதாபிமானமும்.
            உலகம் உருண்டை எனச் சொன்ன கலிலியோவுக்கு நாம் தந்த உதவி புறக்கணிப்புத்தானே.
            உலகத் தொழிலாளர்களுக்கான மூலதனத்தை எழுதிய கார்ல் மார்க்ஸ்க்கு நாம் தந்த உதவி ஏழ்மைதானே.
            அடிமைத்தனத்தை அழிக்கப் புறப்பட்ட லிங்கனுக்கு நாம் தந்த உதவி துப்பாக்கிக் குண்டுதானே.
            சமூக சமத்துவத்தை முன்னிறுத்திய அம்பேத்காருக்கு நாம் தந்த உதவி எதிர்ப்புகள்தானே.
            பகுத்தறிவை வளர்க்கப் பாடுபட்ட பெரியாருக்கு நாம் தந்த உதவி செருப்புகள்தானே.
            இப்படி இந்த உலகம் புறக்கணிப்பு, ஏழ்மை, துப்பாக்கிக் குண்டு, எதிர்ப்பு, இழிவு என்று எதைத் தந்தாலும் அதைப் பொருட்படுத்தாது, இந்த உலகம் உய்ய உயர்ந்த கருத்துகளைத் தந்து, அந்த உயர்ந்த கருத்துகளுக்காகப் பாடுபட்டுத் தம்மையே தியாகம் செய்த அந்த மனிதப் புனிதர்களின் உதவிக்கு ஈடாக எதை ஆற்றுவது?
            இயல்பாகவே மனிதர்களில் பலர் உதவி செய்யும் மனப்பான்மை அற்றவர்கள் என்பதை வள்ளுவர் உணர்ந்தார் போலும். செய்யாமல் செய்த உதவிக்கு என்றுதான் செய்நன்றியறிதல் என்ற அதிகாரத்தைத் துவங்குகிறார். அதாவது நாம் ஒரு உதவியும் செய்யாமல் இருக்கு நமக்கு செய்யப்பட்ட உதவிக்கு என்பது அதன் விளக்கம்.
            அந்த உதவிக்கு எதை ஈடாகக் கொடுப்பது?
            கைப்பிடி மண் கொடுக்கக் கூட யோசிக்கும் மனிதர்கள் இருக்கும் உலகம் அல்லவா இது! பொது காரியத்துக்காக துண்டு நிலம் கொடுக்க வெகுண்டு பேசும் மனிதர்கள் வாழும் நிலம் அல்லவா இது!
            ஆக மண் பெரிதுதான். நிலம் பெரிதுதான். செய்யாமல் செய்த உதவிக்கு மண்ணாலும், நிலத்தாலும் ஆன வையகத்தையே ஈடாகக் கொடுத்து விடலாமா?
            நாம் ஒரு உதவியும் செய்யாமல் இருக்க, நமக்கு உதவி செய்யப்பட்டு இருக்கிறதே! வையகம் மட்டும் போதுமா என்ன?
            நிலவில் இடம் வாங்கி, அடுத்து செவ்வாய் கிரகத்தில் ப்ளாட் போடத் துடிக்கும் மனிதர்கள் வாழும் பூமி அல்லவா இது!
            ஆகவே செய்யாமல் செய்த உதவிக்கு வையகத்தோடு சேர்த்து, நிலவையும், செவ்வாயையும் அது போன்ற இன்ன பிறவற்றையும் உள்ளடக்கிய வானகத்தையும் வையகத்தோடு சேர்த்துக் கொடுத்து விடலாமா?
            ம்ஹூம்!
            எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும், வானகமும் போதாது என்றுதானே தோன்றுகிறது!
            வள்ளுவரும் அதைத்தான் சொல்கிறார், செய்யாமல் செய்த உதவிக்கு வையகத்தையும், வானகத்தையும் கொடுத்தாலும் அதற்கு இணையான உதவியை ஆற்றல் அரிது என்று.
            செய்யாமல் செய்த உதவியை உலகம் மறப்பதில்லை. அப்படி உதவி செய்தவர்களை மகாத்மாக்களாக, அடிகளாக, புனிதப் பிரான்களாக, மனித குலத்தை உய்விக்க வந்த தலைவர்களாக உலகம் என்று நினைவில் வைத்திருக்கிறது.
            அவர்கள் செய்த உதவிக்கு வையகத்தையும், வானகத்தையும் ஈடாகக் கொடுத்தாலும் பதிலுதவி ஆற்ற முடியாது எனும் நிலையில் உலகம் என் செய்யும்? காலம் முழுவதும் தங்கள் நினைவுகளால் போற்றுவதைத் தவிர வேறு இந்த உலகுக்கு ஏது வழி?
            செய்யாமல் செய்த உதவிக்கு அவர்கள் உலகோர் நினைவில் என்றும் வாழ்கிறார்கள். உலக மனிதர்களின் நெஞ்சில் நீங்காமல் இடம் பிடித்து நிற்கிறார்கள்.    அதைத் தவிர வேறு மார்க்கமில்லை.
            ஏனென்றால்,
            செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.
            தெய்வத்தால் ஆகாது எனினும் என்று சொல்லிய தெய்வப் புலவர்தான் இந்த ஒன்றில் மட்டும் வையகத்தையும், வானகத்தையும் கொடுத்து முயன்றாலும் ஈடு கொடுப்பது அரிது என்கிறார்.
            செய்நன்றியைப் பொருத்த மட்டில் அதற்கு ஈடுகொடுக்க நினைத்தால், 'போடா! பூமி சின்ன பந்து! வானம் சின்ன கைகுட்டை!' என்பதாக எண்ணுகிறார் போலும் வள்ளுவர்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...