7 Apr 2018

செங்காந்தள் அறிவுத் திருவிழா - 5


செங்காந்தள் அறிவுத் திருவிழா - 5
            செங்காந்தள் அறிவுத் திருவிழா மாணவர்களை நோக்கிய புத்தக இயக்கமாகும். ஒரு லட்சம் புத்தகங்களைப் பிஞ்சுக் கரங்களில் கொண்டு சேர்ப்பது அறிவுத் திருவிழாவின் இலக்காகும்.
            அவ்விலக்கின் படி செங்காந்தள் பள்ளிகள் தோறும் அறிவுத் திருவிழா எனும் புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
            செங்காந்தளின் ஐந்தாவது அறிவுத் திருவிழா 05.04.2018 (வியாழன்) அன்று திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், கீரங்குடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
            மூன்றாவது அறிவுத் திருவிழாகத் திட்டமிடப்பட்ட கீரங்குடிப் பள்ளியின் அறிவுத் திருவிழா கல்வித்துறைப் பார்வையிடல்கள் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டு ஐந்தாவது அறிவுத் திருவிழாவாக அரங்கேறியது.
            அவ்வகையில் தள்ளி வைக்கப்பட்டு தனிச்சிறப்போடு நடைபெற்ற முதல் அறிவுத்திருவிழா இதுவாகும்.
            முழுக்க முழுக்க மாணவர்களே புத்தக அரங்கத்தை நிர்மாணித்து, புத்தகங்களைக் காட்சிக்கு ஏற்றபடி அடுக்கி, மாணவர்களே கண்காட்சியை வழிநடத்தி, மாணவர்களே புத்தகங்களுக்கானத் தொகையையும் பெற்று - மாணவர்களால் மாணவர்களுக்காக மாணவர்களே நடத்திய அறிவுத் திருவிழாவாக நிகழப்பெற்ற முதல் வகை அறிவுத் திருவிழாவும் இதுவேயாகும்.
            அறிவுத் திருவிழாவில் திருவிழாவின் கொண்டாட்டத்தோடு காகிதக் கலை எனும் ஓரிகேமி நிகழ்த்து அரங்கும், ஓவியம் வரைய கற்றுக் கொள்வதற்கான பயிற்சி அரங்கும், சிறார்களுக்கான கதைச் சொல்லல் அரங்கும் இடம்பெற்ற முதல் வகை அறிவுத் திருவிழாவும் இதுவேயாகும்.
            அறிவுத் திருவிழா என்பதனுள் புத்தகக் கண்காட்சி என்பதையும் தாண்டி வாசிப்பு அரங்கம், சொற்பொழிவு அரங்கம், காகிதக் கலை பயில்வு அரங்கம், ஓவியப் பயிற்சி அரங்கம், கதை சொல்லல் அரங்கம் எனப் பலவித அரங்கங்களையும் உருவாக்கி திருவிழாவுக்கான அனைத்துப் பின்னணிகளையும் உருவாக்க முடியும் என்பதை அறிவுத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்குப் புரிய வைத்த வகையில் ஐந்தாவது அறிவுத்திருவிழா ஒரு பேரறிவுப் பெருவிழா ஆகும்.
            அறிவுத் திருவிழாவின் இலக்காம் ஒரு லட்சம் புத்தகங்கள் எனும் இலக்கில் 98,468 புத்தகங்களைக் கொண்டு சேர்க்க வேண்டிய நிலையில் ஐந்தாவது அறிவுத் திருவிழாவில் 540 புத்தகங்களை மாணவர்கள் ஆர்வமுடன் அள்ளிச் சென்றுள்ளனர். ஆக 98,468 - 540 = 97,928. இன்னும் 97,928 புத்தகங்களைப் பிஞ்சு கரங்களில் கொண்டு சேர்க்க கரம் கோர்ப்போம்! புத்தக அறிவைப் பிஞ்சுகளின் சிரம் சேர்ப்போம்!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...