11 Apr 2018

உதவியை அளக்கும் அளவுகோல்


குறளதிகாரம் - 11.5 - விகடபாரதி
உதவியை அளக்கும் அளவுகோல்
            உதவியில் சிறியது எது? பெரியது எது? உதவியில் எல்லாமே பெரியது. சிறியது என்பது எதுவுமில்லை.
            பொருள் அளவைப் பொருத்து,
            செய்யப்பட்ட அளவைப் பொருத்து சிறியது, பெரியது என்று செய்யப்பட்ட வேறுபடுத்த முடியாது.
            ஆனால்,
            உதவியைப் பெற்றவர் அதாவது உதவி யாருக்கு செய்யப்பட்டதோ அவர் உதவியைச் சிறியது என்றோ, பெரியது என்றோ பார்க்கலாம் அல்லவா!
            அதற்கு வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.
            உதவியைப் பெற்றவர் செய்யப்பட்ட உதவியைச் சிறியது, பெரியது என்று பார்க்கலாம்.
            செய்யப்பட்ட உதவியைச் சிறியது என்று பார்ப்பவர் சிறியவர். குணத்தால் சிறியபவர்.
            செய்யப்பட்ட உதவிச் சிறியதாக இருந்தாலும் அதைப் பெரியதாகப் பார்ப்பவர் பெரியவர். குணத்தால் பெரியவர்.
            பெற்ற உதவியைச் சிறியது என்று சொல்பவர் குணத்தில் சிறியவரே. பெற்ற சிறு உதவியையும் பெரியது என்று காண்பவர் குணத்தில் பெரியவர்.
            உதவி சிறியதா, பெரியதா என்பதை அவரவர் குணமே தீர்மானிக்கிறது.
            பெருங்குணம் எதையும் பெரிய உதவியாகப் பார்க்கிறது. சிறிய குணம் பெரிய உதவியையும் சிறிய உதவியாகப் பார்க்கிறது.
            குணம் உதவியை அளவிடுகிறது.
            உயர்ந்த குணம் உயர்வாகவும், குறுகிய மனம் குறைவாகவும் உதவியை அளவிடுகிறது.
            பத்து ரூபாய் மதிப்பில் செய்யப்படும் உதவியைச் சிறியதாகவும், ஆயிரம் ரூபாய் மதிப்பில் செய்யப்படும் உதவியைப் பெரியதாகவும் அளவிட்டால் அங்கு அளவிடப்பட்டது உதவியின் அளவு அல்ல, குணத்தின் அளவு.
            அரிதின் முயன்று செய்யப்படும் உதவி பெரியது என்றோ, எளிமையாகச் செய்யப்படும் உதவி சிறியது என்றோ கருதுவதற்கில்லை. அப்படிக் கருதச் செய்வது ஒருவரது குணத்தின் அளவே.
            குணக் குன்றுகள் சிறிய உதவியையும் பெரியதாக மதிப்பிடுகிறார்கள். குணத்தில் குன்றியவர்கள் பெரிய உதவியையும் சிறியதாக மதிப்பிடுகிறார்கள்.
            பெறப்பட்ட உதவியின் உயர்வை, உதவியைப் பெற்றவரின் குணமே தீர்மானிக்கிறது.
            செய்யப்பட்ட உதவியின் மேன்மையை, உதவியைப் பெற்றவரின் பண்பே அனுமானிக்கிறது.
            நிகழ்த்தப்பட்ட உதவியின் சிறப்பை, உதவியைப் பெற்றவரின் சால்பே முடிவே செய்கிறது.
            பன்றிகளின் முன் முத்துகளை இறைப்பது பன்றிக்கு செய்யும் உயர்ந்த உதவியாகாது. பன்றிகளுக்கு முத்துகள் தேவையுமில்லை. முத்துகளை எறிந்தவர்களை பன்றிகள் தாக்காமல் செல்வதுமில்லை.
            அவரவர் குணமே, பண்பே, சால்பே அவரவர்க்குச் செய்யப்படும் உதவியின் உயர்வை, மேன்மையைச் சிறப்பைத் தீர்மானிக்கிறது.
            இழிந்தோர்க்குச் செய்யப்படும் உதவி மிக உயர்ந்ததாக இருந்த போதிலும் இழிவாகவும், உயர்ந்தோர்க்குச் செய்யப்படும் உதவி மிக சிறியதாக இருந்த போதிலும் உயர்வாகவும் நோக்கப்படுகிறது.
            உதவியைச் சிறியதாகவும், பெரியதாகவும் பார்ப்பது உதவியைப் பெறுபவரின் குணமே. உதவியில் சிறியது என்பதோ, பெரியது என்பதோ எதுவுமில்லை. எல்லா உதவிகளும் பெரியது மட்டுமே.
            இது சிறியது, இது பெரியது என்று உதவியை வகைபடுத்துவது உதவியைப் பெறுபவரின் பண்பே. பண்பாளர்களுக்கு செய்யப்படும் உதவி பெரியதாகவும், பண்பற்றவர்களுக்குச் செய்யப்படும் உதவி சிறியதாகவும் உருமாறி விடுகிறது.
            அனைத்து உதவிகளும் ஒரே அளவு, பெரிய அளவு மட்டுமே உடையது. உதவியைப் பெற்றவரின் சால்பு உதவியை சிறியதாகவோ, பெரியதாகவோ தீர்மானிக்கலாம். அது ஒரு தோற்றம் மட்டுமே. மாயத் தோற்றம்! அவரவர் குணத்திற்கேற்பத் தோன்றும் தோற்றம். அவரவர் பண்பிற்கேற்ப தோன்றும் தோற்றம். அவரவர் சால்பிற்கேற்ப தோன்றும் தோற்றம்.
            உதவிகள் எப்போதும் உயர்ந்தவைகளே.
            ஒருவர் குணம் உயர்வாக இருந்தால், பண்பு உயர்வாக இருந்தால், சால்பு உயர்வாக இருந்தால் உதவிகள் எப்போதும் உயர்வாகவே தோற்றம் தரும். மாறாக குணத்தில், பண்பில், சால்பில் தாழ்வாக இருப்போருக்குச் செய்யப்படும் உதவிகள் தாழ்வாகவே தோற்றம் தரும்.
            அது அவரவர் குணத்தின் பிரதிபலிப்பே அன்றி உதவியின் உண்மையான அளவு அன்று. உதவியின் உண்மையான அளவு எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கிறது.
            உதவி வரைத்து அன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.
            உதவியை அளக்க முடியாது. அவரவர் குணத்தால், பண்பால், சால்பின் அளவால் உதவியை அளப்பது போலத் தோன்றலாம். அது அவரவர் குணத்தின், பண்பின், சால்பின் அளவே அன்றி உதவியின் அளவு அன்று.
            உதவி எப்போதும் உயர்ந்தது, பெரியது, சிறந்தது.
            அவரவர் சால்பு எனும் குணம் எனும் பண்பு அதைப் பெரிதாகவோ, சிறியதாகவோ காட்டலாம். ஆம் காட்டலாம். அது ஒரு தோற்றம். அவரவர் குணத்தின் தோற்றம், பண்பின் தோற்றம், சால்பின் தோற்றம். உதவியின் தோற்றம் உயர்வைத் தவிர வேறில்லை. உதவியின் எல்லை எப்போதும் உயர்வின் எல்லை.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...