2 Mar 2018

எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் எங்கள் குழந்தாய்!

குறளதிகாரம் - 7.5 - விகடபாரதி
எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் எங்கள் குழந்தாய்!
            எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் என்பார் பாரதி.
            இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்பர் நம் ஆன்றோர்கள்.
            இன்னாமை இன்பம் எனக் கொளின் என்று துன்பத்தையே இன்பமாகக் கொள்ளுதல் குறித்து வள்ளுவரும் சொல்வார்.
            வள்ளுவர் இப்படிச் சொல்வதால்...
            உண்மையில் இன்பம்தான் இன்பமா? துன்பம்தான் இன்பமா? எது இன்பம்?
            இன்பம் வரும் போது மகிழ்வதும், துன்பம் வரும் போது துவள்வதும் என்ன வாழ்வு இது?
            வாழ்வு எப்போதும் இன்பமாக, துன்பம் வந்த பொழுதும் இன்பமாக இருக்க வழியேதும் இருக்காதோ?
            வழியில்லாமல் இருக்குமோ என்ன?
            துன்பம் நேர்மைகயில் யாழ் எடுத்து மீட்டி எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா? என்று கேட்பாரே பாரதிதாசன்.
            யாழை மீட்டினாலே துன்பம் போகும் என்றால், அந்த யாழை விட இனிய குழந்தையின் மொழி கேட்டால் (இதுவும் வள்ளுவர் சொன்னதுதான் - குழலை விட மழலை விட இனிது என்று) துன்பம் போன இடம் தெரியாமல் போய் விடும்.
            துன்பத்தை எதிர்கொள்ள, எப்பேர்ப்பட்ட துன்பத்தையும் இன்பமாகக் கருதிக் கொள்வது ஒரு வழி. இது எல்லாருக்கும் சாத்தியமாவதில்லை.
            மற்றொரு வழி, எந்தத் துன்பம் வந்த போதும், குழந்தைகளோடு கொஞ்சிக் குலாவி மகிழ்வது மற்றொரு வழி.
            நமது முதல் பாரதப் பிரதமர் நேரு அவர்கள் இரண்டாவது வழியையே கை கொண்டார். குழந்தைகளோடு தம்மை ஒன்றறப் பிணைத்துக் கொண்ட தலைவர் அவர்.
            பல அரசியல் நெருக்கடிகளால் ஏற்பட்ட மனத்துன்பங்களையும், மனத் துயர்களையும் அவர் குழந்தைகளோடு கொஞ்சிக் குலாவி விளையாடித் தணித்துக் கொண்டார் நேரு.
            நமது அறிவுஞானி அப்துல் கலாம் அவர்களும் குழந்தைகளை அதிகம் சந்திப்பதையும், அவர்களோடு உரையாடுவதையும் மிக அதிகமாக விரும்பினார். குழந்தைகளின் பிரபஞ்ச சக்தி அப்படிப்பட்டது. அவர்கள் அடையும் வியப்பும், உற்சாகமும் காண்பவருக்கும் தொற்றிக் கொள்ளும்.
            குழந்தைகள் அன்றலர்ந்த மலர்களாக இருக்கிறார்கள். அம்மலர்களுக்கு துன்ப அலைகளை ஈர்த்து அழிக்கும் ஆற்றல் இருக்கிறது.
            நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி என்பார் கண்ணதாசன். தெய்வத்தின் சந்நிதியில் துன்பங்கள் விலகி நிம்மதி வருவதாக அவரது கருத்துப் புலப்பாடு அமைந்துள்ளது. ஆண்டவன் சந்நிதிக்கும் போயும் நிம்மதியில்லாமல் வருபவர்கள் இருக்கிறார்கள். ஆண்டவன் சந்நிதி நிம்மதி தருகிறதோ இல்லையோ, குழந்தையும் தெய்வம் ஒன்று என்பார்களே, அப்படி தெய்வங்களாகிய குழந்தைகளோடு கொஞ்சுவதிலும், குலாவுவதிலும், அவர்களின் மழலை மொழி கேட்டலிலும் நிம்மதி அடையாதவர்கள் எவரும் இல்லை. நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி என்பதை விட குழந்தைகளின் சந்நிதி என்பதே எல்லாருக்கும் பொருத்தமாக அமையும்.
            எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்ற பாரதி கண்ணனைக் குழந்தையாகக் கொஞ்சுகிறார். கண்ணம்மாவைக் குழந்தை தெய்வமாகக் கொண்டாடுகிறார்.
            தமிழ் மொழியே 'பிள்ளைத் தமிழ்' பாடிக் களிப்புறுகிறது எனும் போது பிள்ளைகள் தரும் இன்பத்தை என்ன என்பது!
            மழலைகளைக் கொஞ்சிக் குலாவுவதும், அவர்தம் மழலை மொழி கேட்பதும் இன்பம், இன்பம், இன்பம், இன்பம்,...!
            எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் எங்கள் குழந்தாய்!
            வள்ளுவர் இதை,
            மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர் சொற் கேட்டல் இன்பம் செவிக்கு என்கிறார்.
            குழந்தைகளைக் கொஞ்சிக் குலாவுதலே மெய் தீண்டல்.
            அவர்தம் மழலை மொழி கேட்டலே சொற் கேட்டல்.
            இன்னொரு வகையில் அவர்களின் சொல்லுக்கு செவி கொடுப்பது என்ற வகையில் - அவர்களின் சொல்லுக்கும் மதிப்பளித்துக் கேட்பது என்ற நுண்பொருள் கொண்டால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குழந்தைகளின் உரிமையையும் பேசியிருக்கிறார் வள்ளுவர்!
            உண்மைதான்! குழந்தைகளின் சொல்லுக்கு மதிப்பளித்துக் கேட்பது நாகரிகத்தின் உயர்ந்த நிலை, பண்பாட்டின் உச்சம். அப்படிப்பட்ட உலகில் இன்பத்தைத் தவிர துன்பம் துளியளவேனும் இருக்க முடியாது.
            எங்கே குழந்தைகளின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து, குழந்தைகள் கொண்டாடப்படுகிறார்களோ, அந்த உலகமே கொண்டாட்ட மயமாகத்தான் இருக்கும். கொண்டாட்டப் பூமியில் துன்பத்துக்கு வேலை ஏது? சகலமும் இன்ப மயம்தானே!

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...