2 Mar 2018

வாழ்க்கை மனமும், மன வாழ்க்கையும்...

வாழ்க்கை மனமும், மன வாழ்க்கையும்...
            இன்று வாழ்க்கை குறித்தும், மனம் குறித்தும் எழுவது என முடிவெடுத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தான் எஸ்.கே.
            கீழே நீங்கள் படிப்பவைகள் அவன் எழுதி நீங்கள் பார்ப்பவைகளே.
            வாழ்க்கை நிலையற்றது என்றால் வாழ்க்கை நிலையற்றது என்பதன்று. வாழ்க்கைக் குறித்து மனம் கொள்ளும் கருத்துகள்தான் நிலையற்றது.
            வாழ்க்கைக் குறித்து மனம் கொள்ளும் கருத்துகள் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்கிறது. ஏன் நிமிடத்துக்கு நிமிடம் கூட மாறிக் கொண்டு இருக்கிறது. அதனால் மனதில் எழும் எந்த எண்ணங்களின் அடிப்படையிலும் முடிவுகளை மேற்கொள்ள வேண்டியதில்லை.
            வாழ்க்கையை இயல்பாக அதன் போக்கில் விட்டு விடுவது நல்லது. வாழ்க்கைக் குறித்து எந்த முடிவை மேற்கொண்டாலும் அதை அப்படியே விட்டு விடலாம். விட்டு விட்ட ஒன்றை மனம் தொடுவதில்லை. அதில் குறுக்கிட்டு அநாவசியமாக எண்ண அலைகளை உருவாக்க வேண்டியதில்லை.
            எண்ண அலைகள் எழுந்து ஒரு கட்டத்தில் தானே அடங்கி விடும். அப்படிப்பட்ட எண்ண அலைகளுக்கு அடிமைப்பட வேண்டியதில்லை.
            மற்றவைகளைப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்லை. எப்போதும் அவைகள் அப்படித்தான். போட்டு டார்ச்சர் செய்வதற்கானவை.
            சில விசயங்கள் மனதைப் பாதிக்கவில்லை என்று போலியாக நினைத்துக் கொள்ள முடியாது. மனதை அவைகள் பாதிக்கத்தான் செய்கின்றன. பாதிக்கவில்லை என்று தன்னைத் தானே இவ்விசயத்தில் ஏமாற்றிக் கொள்ள முடியாது.
            அவைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதன் மூலமே மனதை உயர்த்த முடியும் அல்லது இல்லாமல் அடிக்க முடியும்.
            மனிதர்கள் ஒவ்வொருவரும் தாம் நினைப்பதே சரியானதென நினைப்பவர்கள். யாரையும் இவ்விசயத்தில் மாற்றி விட முடியாது. அதில் குறுக்கிட்டால் குறுக்கிடுபவர்களுக்கு சங்குதான்.
            பொறுமையாக இருப்பது ஒன்றுதான் மனிதர்களை மாற்றும் மகத்தானச் செயல். யாரும் எந்த மனநிலையில் நிலைத்து நின்று விட முடியாது. குறிப்பிட்டக் காலத்திற்குப் பின் எல்லாரும் தங்களின் மனநிலையிலிருந்து இறங்கி வந்துதான் ஆக வேண்டும். அப்போதுதான் அந்தப் பொறுமை எப்படிப் பயன்பட்டது என்பதை உணர முடியும்.
            ஒன்றில் உள்ள விசயங்களை எதிர்மறையாக அணுகுவதுதான் அதில் உள்ள பிரச்சனையே.
            ஒரு வகையில் நடக்கும் ஒன்றைப் போல நடக்காமல் இருக்கும் ஒன்றும் நல்லதே. எது நடக்கவில்லையோ அது மிகவும் நல்லது. அதற்காக நன்றி சொல்வதும் ஏற்றதே.
            இது ஒரு வகையான நேர்மறை அணுகுதல். நடக்காத ஒன்றுக்காகக் கவனம் செலுத்திக் காலம் செலுத்துவதை விட, நடக்கக் கூடிய ஒன்றில் அடுத்தடுத்து கவனம் செலுத்தி முன்னே செல்ல இது வகையாக இருக்கும். இப்படி நிறைய விசயங்களை நடத்திக் கொண்டே போனால் நடக்காது என்று கைவிட்ட விசயங்கள் கூட ஒரு நாளில் நடப்பதைக் கண்ணாரக் காணக் கூடும்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...