குறளதிகாரம் - 9.1 - விகடபாரதி
வந்தாரை வாழ வை!
வாழ்வது எதற்கு?
வாழும் வரை மற்றவர்களை வாழ வைப்பதற்கு!
சுவாசிப்பது
எதற்கு? சுவாசிக்கும் வரை நம்மைச் சூழ்ந்துள்ளோர்களை சுதந்திரமாய்ச் சுவாசிக்கச் செய்வதற்கு!
உண்பது எதற்கு?
அன்பில் உள்ளோர்க்கும், அண்டி உள்ளோர்க்கும் உழைப்பதற்காகச் சக்தி கொள்வதற்கு!
உடுத்துவது
எதற்கு? சுற்றம் சூழ உடுத்தி மகிழச் செய்து அவர்களின் மகிழ்வை உடுத்தி மகிழ்வதற்கு!
வீடு கொள்வது
எதற்கு? உறவாய் இருப்போர்க்கும், புதிததாய் வருவோர்க்கும் வீடாய் துணை நிற்பதற்கு.!
சேர்ப்பது
எதற்கு? பொதுநலத்தோடு இருந்து பொருள் சேர்க்காமல் விட்டோர்க்கு வழங்குவதற்கு!
வாழ்வது,
சுவாசிப்பது, உண்பது, உடுப்பது, வீடு கொள்வது, பொருள் சேர்ப்பது எல்லாம் தனக்கென
நினைப்போர் உளர். அவை தனக்கானவைகள் என்று தோற்றம் தரும் பிறர்க்கானவைகள். அவைகள்
இல்லாமல் வாழ்க்கை இல்லை. அந்தத் தனக்கானவைகள் மற்றவர்களுக்கே. மற்றவர்களுக்காகவே அந்தத்
தனக்கானவைகளைச் செய்து கொள்ளப்படுகிறது.
தனக்காக வாழ்வது,
தனக்காகச் சுவாசிப்பது, தனக்காக உண்பது, தனக்காக உடுப்பது, தனக்காக வீடு கொள்வது,
தனக்காகப் பொருள் கொள்வது உலகில் இல்லை. மனிதர் தனிமையில் வாழ்கின்ற பிராணி இல்லை.
இவைகள் எல்லாம்
தம் இல்லத்தில் உள்ளோர்க்காக, தம் அன்பு உள்ளத்தில் உள்ளோர்க்காக, உறவில், சுற்றத்தில்,
நட்பில், நேசத்தில் உள்ளோர்க்காக, இல்லை என்று தேடி வருவோர்களுக்காக.
தமக்கென மட்டும்
வாழ்ந்து, தாம் மட்டும் அனுபவித்து இருப்போரும் இறக்கும் போது அவைகளை எடுத்துச் செல்ல
முடிவதில்லை. பிறரிடம் விட்டு விட்டேச் செல்ல முடிகிறது. அவைகள் இறந்த பின்னே அதுவாக
வழங்கப்படுவதை விட, இருக்கும் போதே தாமாக வழங்கும் போது இல்லம் சிறப்படைகிறது.
ஆக, இல்லை
என்று இல்லாமல் வழங்கிக் கொண்டு இருப்பதற்காகவே இல்லம்.
அதற்காகவே
சங்கத் தமிழன் பொருள் தேடி, உயிரினும் மேலாகத் தேடியத் தலைவியை விட்டும் செல்கிறான்.
தலைவனே எல்லாம்
என்று வரும் தலைவி, தலைவன் தேடி வரும் பொருளுக்காகவா அவனைப் பிரிய சம்மதிப்பாள்?
இங்கே பிரிவு
என்பது கூட இல்லம் தேடி வந்தோர்க்கு இல்லை என்று சொல்லி விடக் கூடாது என்பதற்காகப்
பொருள் தேடிச் செல்வதற்காகத்தான் நிகழ்கிறது. இல்லத் தலைவியும் உள்ளத் துயர் தாங்கிக்
கொண்டு தலைவனின் பிரிவுக்கு இணங்குகிறாள்.
இப்படி தமக்கெனப்
பொருள் சேர்க்காமல் இல்லம் தேடி வந்தோரை வெறுங்கையோடு அனுப்பி விடக் கூடாதே என்பதற்காகப்
பொருள் சேர்த்தோர் சங்கத் தமிழர்.
ஒவ்வொரு
இல்லமும் அப்போது சங்கத் தமிழ் அரசரின் அரசவை போல் இருந்திருக்கிறது. சங்கத் தமிழ்
அரசரின் அரசவையில்தானே அண்டி வந்த புலவர் பரிசில் பெறாமல் திரும்பியிருக்க மாட்டார்.
பொருளைச்
சேர்ப்பதெல்லாம் பொருளை வழங்கி வருவோரையெல்லாம் உறவாய், நட்பாய்ச் சேர்த்துக் கொள்வதற்குத்தான்.
இப்படி இதற்காகவே
பொருள் சேர்க்க வேண்டும்.
இல்லத்தில்
இருப்பது பொருள் சேர்க்கவே. அப்படிப் பொருள் சேர்ப்பது தேவை என்று யார் வந்தாலும்,
அவர் உறவாய், நட்பாய், சுற்றமாய் இல்லாமல் புதிதாய் இருந்தாலும், அவர் தேவை என்னவோ
அதைத் தீர்த்து அனுப்பவே. இதையே விருந்தோம்பல் என்கிறார் வள்ளுவர்.
புதிதாய்
நம்பி வந்தோரை ஓம்பிக் காத்தல் விருந்தோம்பல்.
அவர் ஆதரவற்றவராய்
அகதியாய் வந்திருக்கலாம்.
அவர் நாதியற்றவராய்
அனாதையாய் வந்திருக்கலாம்.
அவர் வக்கற்றவராய்
கையேந்தி வந்திருக்கலாம்.
பொருள் இருந்தும்
ஆறுதலான அன்பான ஒரு சொல்லுக்காகவும் வந்திருக்கலாம்.
அவரின் அடிப்படைத்
தேவை என்னவோ அதைத் தீர்த்து அனுப்புவதே சரியான விருந்தோம்பல். அதற்கு இல்லத்தில்
சேர்த்து வைத்த பொருள் பயன்படலாம். இல்லத்தில் நூல்களாய்ச் சேர்த்து வைத்த அறிவு பயன்படலாம்.
இல்லத்தில் உறவுகளாய் இருப்போரின் ஆறுதலானச் சொற்கள், அரவணைப்பான மொழிகள் தேவைப்படலாம்.
இல்லம் என்பது
சேர்த்த வைத்தப் பொருள், அறிவு நூல்கள், உறவுகள் என்பதனால் ஆனது. இவைகளை ஓம்புதல்களால்
ஆனது.
அப்படி இல்லத்தில்
இருந்து, இல்லத்தில் ஓம்பிய பொருளால், நூல்களால், உறவுகளால் இல்லம் நாடி புதிதாய்
வந்தோருக்கு விருந்தோம்பல் செய்வதற்கே இல்வாழ்க்கை.
தலைவன் இணைவது
தலைவிக்காக, தலைவி இணைவது தலைவனுக்காக என்பது போலத் தோன்றினாலும், இருவரும் இணைவது
இப்படி இருந்தோம்பி இல்வாழ்வதற்காகவே என்பதை வள்ளுவர் தெளிவுபடுத்துகிறார் இவ்வாறாக,
இருந்து ஓம்பி
இல்வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு என்று.
ஆக, தமக்கென
செய்வது போலத் தோன்றினாலும் அது தமக்கில்லை, பிறர்க்காகவே, இந்தச் சமூகத்துக்காகவே,
இந்த உலகத்துக்காகவே. இப்படி சுயநலமாய்த் துவங்கிப் பொதுநலமாய் விரிவதே இல்வாழ்வு.
சுருங்கச்
சொல்லின் இல்லம் தேடி புதிதாய் வந்தோரையும் உறவாய் எண்ணி வாழ வைப்பதே விருந்தோம்பல்.
வந்தாரை வாழ
வைக்கும் தமிழகம் என்று சும்மாவா சொன்னார்கள்!
அந்த விருந்தோம்பல்தானே
தமிழர்களின் பண்பாடு!
இந்தப் பண்பாடே
உலகின் பண்பாடாக ஆக வேண்டும் என்று தன் இனத்துக்கு அப்படி ஒரு பண்பாட்டைப் பயிற்றுவித்து,
உலகுக்கும் அது தெரிய வேண்டும் என்பதற்காக குறளாக எழுதி திருக்குறள் எனும் நூலாகப்
படைத்துச் சென்ற பொதுமறைப் பெரியோன்தானே திருவள்ளுவர்!
*****
No comments:
Post a Comment