திருட்டுத் தேங்காய் - சிறுகதை - விகடபாரதி
தனபால் தேங்காய் திருட்டில்தான்
முதலில் பிடிபட்டான். சின்ன பண்ணை வீட்டில் இருந்த மரங்களில் நடுராத்திரியில் ஏறி தேங்காய்
பறித்ததை மோப்பம் பிடித்து எப்படியோ பிடித்து விட்டார்கள்.
அவன் ஏறிய மரத்திலேயே
அவனை கட்டி வைத்திருந்தார்கள். வழக்கமாக மாரியம்மன் கோயில் வேப்ப மரத்தடியில் நடக்கும்
பஞ்சாயத்து இதற்காகவே சின்ன பண்ணையின் தென்னை மரத்தின் கீழ் நடைபெற்றது.
பஞ்சாயத்தைக் கூட்டுவதற்குள்ளாக
சின்ன பண்ணை தனபாலை வெளுத்து எடுத்து இருந்தார். உடலில் அங்கங்கே ரத்தக் காயங்கள் மற்றும்
ரத்தக் கட்டுகள். அதற்கான வலியோ, ஆயாசமோ தனபாலின் முகத்தில் தெரியவில்லை.
பஞ்சாயத்து ஆரம்பமானது.
"இப்படி ஆளாளுக்கு
அடிச்சுப் போட்டு அப்புறம் பஞ்சாயத்தைக் கூப்பிட்டா என்ன அர்த்தங்றேன்?" நாட்டாமை
சரியாகத் தொடங்கினார்.
"தேங்காய் திருடுனவனைச்
சும்மா விட்ற சொல்றீங்களா?" என்றார் சின்ன பண்ணை.
"யாரு சும்மா விடச்
சொன்னா? போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்ணிக்க வேண்டியதுதானே?"
"அப்புறம் ஊரு
பஞ்சாயத்து இருக்கிறப்ப எதுக்கு போலீஸ்ல போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணீம்பீங்க?"
சின்ன பண்ணை எகத்தாளமாகச் சிரித்தார்.
"அதுக்கு சொல்லல.
இப்ப நீங்கள்லாம் அடிச்ச அடிக்கு அவன் பத்தாயிரம் செலவு பண்ணாத்தான் ஆளு தேறுவான்.
எதாச்சும் கொல கேஸா ஆகிப் போச்சுன்னா என்ன பண்ணுவேங்றே?"
"த்துப்பூ! இந்த
கருமத்துக்குத்தான் நான் பஞ்சாயத்தையும் கூட்ட வேணாம். கொன்னு புதைச்சுருன்னேன்!"
சின்ன பண்ணை சத்தமிட்டார்.
"இந்தப் பாரு!
பஞ்சாயத்து ரெண்டு பக்கமும்தான். அவன் தேங்காய் திருடுனது தப்பு. நீ இப்படி முறைதலையில்லாம
அவனை அடிச்சதும் தப்பு. அவன் தேங்காய் திருடுனதுக்கு ஐநூறு தண்டம். நீ அவனைத் தாறுமாறா
அடிச்சதுக்கு ஐயாயிரம் தண்டம்!" பட்டென்று தீர்ப்பை முடித்தார் நாட்டாமை.
"அதெல்லாம் வேணாங்க.
நான் திருடுனதுக்கு பஞ்சாயத்துல மன்னிப்புக் கேட்டுக்கிறேன். எங்கிட்ட ஐநூறு இருந்தா
நான் ஏன் மரம் ஏறி தேங்காய் திருடப் போறேன்? சின்ன பண்ணைகிட்ட ஐயாயிரம் இருக்கா இல்லையான்னு
தெரியல. இருந்தாலும் கொடுக்க மனசு வராது. மரம் ஏறி மரம் இறங்கியிருக்கிறேன். அடி வேற
வாங்கி இருக்கிறேன். அதனால எனக்கு அஞ்சு தேங்காய் கொடுத்தா போதும்! நான் முடிச்சுக்கிறேன்!"
என்றான் தனபால் வலியோடு முனகியபடி.
"நான் வேணா ஐயாயிரம்
கட்டுறேன். அந்த நாய்க்கு அஞ்சு தேங்காய்லாம் கொடுக்க முடியாது!" என்று சின்ன
பண்ணை சொன்ன போது ஊரே மூக்கின் மேல் விரல் வைத்துப் பார்த்தது.
நாட்டாமை ஒரு நிமிடம்
யோசித்தார். "யாரும் எதுவும் கொடுக்க வேணாம். ரெண்டு பேரையும் மன்னிச்சு விட்டுடுறோம்.
இனிமே இந்த மாதிரி நடக்கக் கூடாது. நடந்தா அப்புறம் பஞ்சாயத்தைக் கூட்டாதீங்க. நேரே
போலீஸ் ஸ்டேசன்லேயே முடிச்சுக்குங்க. நாங்க தலையிட மாட்டோம்!"
பஞ்சாயத்து கலைந்தது.
அதன் பிறகு தேங்காய்
திருடுவதை விட்டு விட்டு தனபால் ஒரு கெளரவமான மனிதனாக மாறினான். பால் வியாபாரம் செய்ய
ஆரம்பித்தான். சைக்கிளில் கேனைக் கட்டிக் கொண்டு தெரு தெருவாக, ஊர் ஊராக பால் எடுக்க
ஆரம்பித்தான்.
"பேர்லயும் பால்,
எடுக்கறதும் பால்! நமக்கு இதுதான் செட் ஆகும்னு தெரியாமப் போச்சுண்ணே!" என்ற
பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லி புளங்காகித்தான் தனபால்.
தினமும்
எடுத்த பால் மிஞ்சத் தொடங்கிய போது என்ன செய்வதென்று யோசித்த தனபால் ஆரம்ப காலத்தில்
அதை தயிராக்கி, தயிரிலிருந்து வெண்ணெயை எடுத்துக் கொண்டு,அதை மோராக்கி விற்றுப் பார்த்தான்.
வெண்ணெயை நெய்யாக்கிப் பார்த்தான். ஐந்தாறு மாதங்கள் இப்படியே போய்க் கொண்டு இருந்தது.
அவன் மனதுக்கு திருப்திபட்டு வரவில்லை.
அதன்
பிறகு ஆரம்பமானதுதான் தனபால் தேநீர் நிலையம். தனபாலே எதிர்பார்க்காத அளவுக்கு கூட்டம்
நிரம்பி வழிய ஆரம்பித்தது. சுத்தமான பால், சுவையான தேநீர் என்று தனக்கென்று தனி வரையறைகளைச்
செய்து கொண்டான்.
தனபால்
பொருளாதார ரீதியாக வலுப்பெறத் தொடங்கிய நிலையில் அவன் மேல் பஞ்சாயத்து வந்தது. இந்த
முறை சின்ன பண்ணையோ, பெரிய பண்ணையோ அவனுக்கு எதிராக பஞ்சாயத்தைக் கூட்டவில்லை. அந்த
ஊரில் இருந்த தீப்பொறி இளைஞர் மன்றத்தினர் அந்தப் பஞ்சாயத்தைக் கூட்டியிருந்தனர்.
மாரியம்மன்
கோயில் வேப்பமரத்தடியில் ஊர் கூடியிருந்தது.
"இந்த
தடவைதான் ஊர்லேயே முதல் முறையா பஞ்சாயத்து முறையா கூட்டப்பட்டிருக்கு!" என்றார்
நாட்டாமைக்காரர்.
தனபால்
பவ்வியமாக வந்து நின்றான். பழைய கந்தக்கோலம் இல்லை. வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என்று
ஆளே அடையாளம் மாறியிருந்தான்.
"நான்
முன்ன மாதிரியில்லாம் இல்லீங்க! நம்ம கடையிலேர்ந்து திருட்டு டீ குடிச்சிட்டு காசு
கொடுக்காம கூட போயிருக்காங்க. நான் யார் மரத்திலேயும் ஏறி திருட்டு தேங்காய்லாம்
பறிக்கிறதில்லீங்க!" என்றான் தனபால். கூடியிருந்த கூட்டம் கொல்லென்று சிரித்தது.
"நம்ம
ஊர்க்கார தீப்பொறி மன்றத்துலதிலேர்ந்து பிராதை காகிதமாய்த் தாக்கல் பண்ணியிருக்காங்க.
அதனால உனக்கு விசயம் உனக்குத் தெரியாது." என்றார் நாட்டாமை.
"விசயம்
எதுவோ இருந்துட்டுப் போகட்டும். பஞ்சாயத்துக்கு வந்திருக்கிற எல்லார்க்கும் டீ கொடுக்க
அனுமதிக்கணும். எல்லார்க்கும் டீ போட்டு எடுத்துட்டு வர கடையில சொல்லியிருக்கேன்!"
என்று தனபால் சொன்னதும், "எவன்டா அவன் அண்ணன் மேல காகிதம் கொடுத்தது? நாறப்
பயலுகளுக்குப் பொறந்த நாதியத்தப் பயலுக!" என்றான் தினம் தோறும் ஓ.சி. டீ குடிக்கும்
வீரையன்.
"அடச்சீ
வாயை மூடு!" என்றார் நாட்டாமை.
வீரையன்
வாயை மூடினான்.
"பிரச்சனையே
உன் டீயிலேர்ந்துதான் ஆரம்பிக்குது. அதனால யாருக்கும் டீ கொண்டு வர வேணாம்."
என்றார் நாட்டாமை.
தனபாலுக்கு
தூக்கி வாரிப் போட்டது.
"என்னய்யா
மனுஷங்க நீங்க? ஒரு மனுஷன் உழைச்சுப் பொழைக்கக் கூடாதா? அதுவும் ஒங்க கண்ணுக்கு உறுத்துமாய்யா?
நான் பாட்டுக்கு என் வேலை உண்டு, நான் உண்டுன்னு போய்ட்டு இருக்கேன். இந்த சுத்துப்பட்டியில
எவன் கடையில என்ன மாதிரி டீ போட்டுக் கொடுக்குறான். டீ அப்படியே கள்ளிப்பால் கணக்கா
இருக்கு தெரியுமா? ஒரு சொட்டு தண்ணி கலக்குறதில்ல!" தனபால் ஆவேசம் வந்தவனைப்
போல் பேசினான்.
"ஒரு
சொட்டு தண்ணி கலக்குறதில்ல நிசம்தான். குண்டுமணியளவு கஞ்சா கலக்குறதா தகவல் வந்திருக்கு!
அதுக்குதான் பஞ்சாயத்து!" விசயத்தைப் போட்டு உடைத்தார் நாட்டாமை.
"ஆதாரம்
இருக்கா?" என்றான் தனபால்.
"லேப்லேயே
டெஸ்ட் பண்ணிட்டு வந்துட்டாங்க. போலீஸ்ல கொடுக்குறதுக்கு முன்னாடி ஊர் கட்டுமானத்தை
மீறக் கூடாதுன்னு நம்மகிட்ட காகிதம் கொடுத்து இருக்காங்க அவ்வளவுதான்! அதனால தனபால்
டீக்கடையை உடனே மூடணும். இது பஞ்சாயத்தோட தீர்ப்பு. மூடலேன்னா பஞ்சாயத்து சார்பாவே
காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும். அதோட தனபாலுக்கு பால் வியாபாரம் பண்ணவும் தடை
பண்றோம். இதுவரைக்கும் சேத்த காசை நல்லவிதமாக பேங்குல போட்டுகிட்டு குடும்பம் பண்ணிக்க
வேண்டியது தனபாலோட பொறுப்பு!" நாட்டாமை தீர்ப்பை அவ்வளவு விரைவாக சொல்லி முடித்தார்.
சட்டென சொல்லி முடிப்பது அவரது சுபாவம். விசாரணையின் சில நொடிகளுக்கு உள்ளாக அவர்
தீர்ப்பும் விழுந்து விடும்.
இப்படி
ஒரு மோசமான தீர்ப்பு வரும் என்றோ, தான் கஞ்சா கலப்பதோ பஞ்சாயத்தில் பிராதாக வந்திருக்கும்
என்று தனபால் நினைக்கவில்லை.
"எனக்கு
கொஞ்சம் அவசாகம் வேணும்!" என்றான் தனபால்.
"அவகாசம்லாம்
இல்ல! உடனே செய்யணும்!" நாட்டாமை எழுந்து கொண்டார்.
"இதுல்லாம்
ஒரு பொழைப்பா?" என்று சிலர் தூற்றினர்.
"திருட்டுப்
பயலுக்கு குருட்டுப் புத்திதானே இருக்கும்!" என்று பெண்கள் அவன் காது படவே பேசினர்.
"இவ்வளவு
கூட்டம் வர்றதுன்னா... அப்பவே யோசிச்சிருக்கணும். அவ்வளவையும் யோக்கியன் மாதிரியே
நடிச்சே கவுத்துட்டானேப்பா!" என்று பெரியவர்கள் பேசிக் கொண்டே கலைந்தனர்.
தனபாலுக்கு
அவமானமாக இருந்தது.
மறுநாள்
தனபால் நாட்டாமையைக் கரும்புக் காட்டில் வைத்து காலை வெட்டினான். ஊரே திரண்டு வந்தது.
தனபால் தனக்கு எதிராக வந்தாலும் காலை மட்டுமல்லாமல் தலையையும் வெட்டுவேன் என்றான்.
வந்தவர்கள் சற்று பின்வாங்கினர்.
அவனுக்கு
எதிரான ஆதாரங்களை தீப்பொறி மன்றம் காவல்துறையிடம் கொடுத்தது. தனபால் மேல் வழக்குத்
தொடரப்பட்டது. நாட்டாமை கால் வெட்டியது தொடர்பான வழக்கும் நடைபெற்றது.
இரண்டாண்டுகளில்
நிலைமை மாறியது.
தனபால்
தன்னுடைய டீக்கடையை டவுனுக்கு மாற்றிக் கொண்டான். இரண்டாண்டுகளுக்குப் பிறகு அனைத்து
வழக்குகளில் இருந்தும் குற்றமற்றவனாக வெளிவந்தான்.
அவனுடைய
அரசியல் பிரவேசமும் அதற்கு முன்னே ஆரம்பித்திருந்தது. பிரதான கட்சியின் வட்டச் செயலாளர்
தொடங்கி, மாவட்டச் செயலாளர் வரை வந்து பின் மாநில பொதுக்குழு உறுப்பினர் வரை அவனுடைய
வாழ்க்கையில் ஏறுமுகமாகவே இருந்தது.
காலை
வெட்டிய நாட்டாமைக்காக செயற்கைக் கால் வாங்கிக் கொடுத்ததற்காக ஊர் அவனை மன்னித்து
விட்டிருந்தது. நாட்டாமையின் கண் புரை ஆபரேஷனுக்காக காகிதம் கொடுத்து உதவியதற்காக
நாட்டாமையும் அவனை மன்னித்து விட்டிருந்தார்.
தனது
47 வயதில் தலைவர் தனபால் அவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். அவன் வாக்கிங்
செல்வது கட்டாயம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
தனபால்
அவர்கள் சின்ன பண்ணையிடமிருந்து வாங்கிய தனக்குச் சொந்தமான கரும்புக் காட்டில் செல்வது
என முடிவெடுத்து அவ்வண்ணமே சென்று கொண்டிருந்தார்.
அவ்வாறு
வாக்கிங் சென்ற ஒரு நாளில் கரும்புக் காட்டில் கடித்துக் குதறப்பட்டு இறந்து கிடந்தார்
தனபால். கரும்புக் காட்டின் குள்ளநரிகள் அவரைக் கடித்து குதறியிருக்கும் என்று ஊர்
பேசிக் கொண்டது. ஊரே திரண்டு வந்து பார்த்தது.
நாட்டாமையின்
பிள்ளைகளும் வந்து பார்த்தனர். "உச்" கொட்டியபடியே போய்க் கொண்டு இருந்தனர்.
தனபால்
பல ஆண்டுகளுக்கு முன் நாட்டாமையின் காலை வெட்டிய இடம் அந்த இடத்துக்கு பத்தடிகள் தள்ளி
இருந்தது.
*****
- விகடபாரதி
*****
No comments:
Post a Comment