குறளதிகாரம் - 8.5 - விகடபாரதி
துன்பமற்ற இன்பம்
தேவைபடுபவர்கள் கவனத்துக்கு...
இந்த உலகில்
இன்பமாக இருந்தவர்கள் யார்?
சொத்துச்
சுகங்களைக் கணக்கின்றிக் குவித்தவர்களா?
பத்து தலைமுறைக்கும்
சேர்த்து பணம் சேர்த்தவர்களா?
ஆட்சி அதிகாரங்களை
அளவின்றி அடையப் பெற்றவர்களா?
பல நூல்களையும்
கற்று பேரறிவு பெற்ற அறிவு ஜீவிகளா?
மலையைத் தேடி
தவம் செய்து வரம் பெற்றோம் என்றவர்களா?
எதையும் சாதிக்கும்
வல்லமை பெற்ற ஆகப் பெரும் தலைமைகளா?
சுண்டு விரல்
அசைவில் உலகையே கட்டுப்படுத்தும் நாட்டாமைகளா?
யார் இந்த
உலகில் இன்பமாக இருந்தார்கள்?
இந்த உலகில்
உண்மையாகவே இன்பமாக இருந்தவர்கள் அதை வெளிக்காட்டியதில்லை. அவர்கள் இன்பமாக இருந்தார்கள்.
அதே இன்பத்தோடு இன்பமாக மறைந்தார்கள்.
சொத்து,
சுகம், பணம், ஆட்சி, அதிகாரம், அறிவு, தவம், வல்லமை, நாட்டாமை இவைகள் எதுவும் இன்பத்தைக்
கொண்டு வந்ததில்லை. இவைகளால் இன்பத்தைக் கொண்டு வர முடியாது என்பதில்லை. அவைகளில்
இன்பம் இல்லை என்பதால் அவைகளால் கொண்டு வரப் பட்டாலும் அந்த இன்பம் இன்பமாக இருப்பதில்லை.
எத்தனையோ
தலைமுறைக்குச் சொத்து, சுகம், பணம் எல்லாவற்றயைும் சேர்த்த, சகல ஆட்சி அதிகாரங்களையெல்லாம்
பெற்றிருந்த, சுண்டுவிரல் அசைவில் யாவரையும் கட்டுபடுத்திய, எதையும் சாதிக்கும் வல்லமை
பெற்றதாக சொல்லப்பட்டத் தலைவர்கள் கூட எப்படிச் செத்தார்கள் என்று தெரியாமல் இன்பமின்றிச்
செத்தார்கள், சாகிறார்கள். அன்று ஹிட்லரில் தொடங்கிய இவ்வித இன்மபற்ற மரணங்கள் இன்று
வரை என்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
மலையில் சென்று
தவம் இயற்றுபவர்களும் திரும்பத் திரும்ப அங்கேயே ஓடுகிறார்கள் அங்குதான் இன்பம் இருப்பதாக.
அங்கேயே அந்த இன்பத்தோடு இருக்க முடியாமல் மீண்டும் வருகிறார்கள். மீண்டும் திரும்புகிறார்கள்.
இமயமலையை நோக்கி ஆண்டுதோறும் ஓடும் எத்தனையோ பேர் இதற்கு நல்ல உதாரணம்.
எங்குதான்
அந்த இன்பம் இருக்கிறது?
டாஸ்மாக்
கடையில் இன்பத்தோடு கூடும் கூட்டத்தைக் கலைத்துப் பாருங்கள், குடிக்காமல் எப்படி இன்பம்
வரும் என்பார்கள்?
குடித்தால்
இன்பம், குடிக்காவிட்டால் துன்பம்.
கஞ்சா, அபின்,
சிகரெட் அடிப்பவர்களைக் கேளுங்கள், அதை அடிக்காமல் எப்படி இன்பம் வரும் என்பார்கள்?
அடித்தால்
இன்பம், அடிக்காவிட்டால் துன்பம்.
கல்லாப் பெட்டியின்
அருகே அமர்ந்திருப்பவரைக் கேளுங்கள், பெட்டி பணத்தால் நிரம்பாமல் எப்படி வரும் என்பார்கள்?
நிரம்பினால்
இன்பம், நிரம்பாவிட்டால் துன்பம்.
கோடி கோடியாய்
பணம் வைத்திருப்பவர்களைக் கேளுங்கள், இன்னும் இரண்டு கோடி சேர்க்காமல் எப்படி இன்பம்
வரும் என்பார்கள்?
சேர்ந்தால்
இன்பம், சேராவிட்டால் துன்பம்.
சர்வாதிகாரிகளாய்
இருப்பவரைக் கேளுங்கள், தனக்கு எதிராக இருக்கும் இன்னும் பத்து பேரை ஒழிக்காமல் எப்படி
வரும் என்பார்கள்?
ஒழித்தால்
இன்பம், ஒழிக்க முடியாவிட்டால் துன்பம்.
ஊரையே மிரளச்
செய்யும் ரெளடிகளைக் கேளுங்கள், எப்போது எப்படிச் சாகப் போகிறோம், எந்த என்கெளண்டரில்
போகப் போகிறோம் என்று தெரியாமல் வாழ்வதில் எப்படி இன்பம் வரும் என்பார்கள்?
சாகப் போகும்
கணம் தெரியாத வரை இன்பம், அந்தக் கணம் தெரியத் தெரிய துன்பம்.
அறிவு நூல்
கற்றவர்களைக் கேளுங்கள், அறியாமையை நினைக்க நினைக்க எப்படி இன்பம் வரும் என்பார்கள்.
அறிந்தால்
இன்பம், அறியாவிட்டால் துன்பம்.
துறவிகளையாவது
கேட்டுப் பாருங்கள், இறைமையை அடையாமல் எப்படி இன்பம் வரும் என்பார்கள்?
அடைந்தால்
இன்பம், அடையாவிட்டால் துன்பம்.
மொத்தத்தில்
பெற்றால், அடைந்தால், அறிந்தால், சேர்ந்தால் இன்பம். நிலைமை அதற்கு எதிராகப் போய்
விட்டால் துன்பம்.
இன்பம் எப்போதும்
இன்பமாக இருப்பதில்லை. அது எப்போது வேண்டுமானாலும் துன்பமாக மாறலாம். கோடி ரூபாய்
கையில் இருந்தால் இன்பம் என்றால், அது காணாமல் போகும் அடுத்த நோடியே துன்பமாகவும்
மாறி விடுகிறது.
இன்பத்தின்
வெகு அருகிலேயே துன்பம் இருக்கிறது.
இன்பத்தின்
காலை வாரி விட்டு எப்போது ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதில் துன்பம் கண்ணும் கருத்துமாக
இருக்கிறது.
கொஞ்சம்
அசந்தால் இன்பம் துன்பமாக மாறி விடுகிறது.
வாழ்க்கையே
இன்பத்துக்கும், துன்பத்துக்கும் இடையே சூதாட்டமாக இருக்கிறது.
துன்பமில்லாத
இன்பம் இருக்கிறதா?
நிரந்தர இன்பம்
இருக்கிறதா?
சொர்க்கம்
என்ற சொல்லைக் கூட நரகம் என்ற சொல்லைக் கொண்டு விளக்குவதே எளிதாக உள்ளது.
இன்பம் என்ற
சொல்லையும் துன்பம் என்ற சொல்லைக் கொண்டு விளக்குவதே எளிதாக உள்ளது.
இன்பத்தை
இன்பத்தைக் கொண்டே விளக்க முடியாதா?
அப்படி ஓர்
இன்பம் இருந்தால் விளக்கலாம்.
துன்பமற்ற
இன்பத்தைத் தரிசிக்க முடியாதா?
அப்படி ஓர்
இன்பம் இருந்தால் தரிசிக்கலாம்.
அப்படி ஓர்
லட்சிய இன்பம் உண்மையில் சாத்தியம்தானா?
நூறு விழுக்காடு
சரியான லட்சிய மனிதர்கள் என்று இந்த உலகில் யாரும் இல்லை என்பது போல, நூறு விழுக்காடு
முழுமையான லட்சிய இன்பம் என்பது இந்த உலகில் சாத்தியம் இல்லையா?
இன்பம் என்று
ஒன்று இருந்தால் துன்பம் என்று ஒன்று இருக்கும். இது மாற்ற முடியாததுதானா?
நூறு விழுக்காடு
முழுமையான, சரியான துன்பமற்ற லட்சிய இன்பம் ஒன்று இருந்தால் அது சிறப்புதான். வெறும்
சிறப்பன்று, பெருஞ்சிறப்புதான்.
அப்படி ஓர்
லட்சிய இன்பம் இருக்கிறது. இலட்சிய இன்பம் என்பதால் லட்சியவாதிகள் மட்டும் அடையும்
இன்பமாக இல்லாமல் யார் வேண்டுமானாலும் அடையக் கூடிய இன்பமாகவும் அது இருக்கிறது.
அதாவது,
நூறு விழுக்காடு
சரியான முழுமையான, துன்பமற்ற லட்சிய இன்பம் யாரும், எவரும் அடையக் கூடியதாக இருக்கிறது.
அப்புறம்
ஏன் இந்த உலகில் அது எவராலும் அடையப்படாததாகவே இன்னும் இருக்கிறது?
ஒரு சிறு
குறைபாடு அதை அடையவிடாமல் செய்து விடுகிறது.
அன்பு ஒரு
சிறிது குறைந்தாலும் அது அடையப்பட இயலாமல் போய் விடுகிறது.
அன்புடைய
யாரும் அதை அடையலாம்.
போலித்தனமான
அன்பால் அதை நெருங்கக் கூட முடியாது.
அன்புடையவர்கள்
இன்பமாக இருக்கிறார்கள்.
அன்புடையவர்கள்
நூறு விழுக்காடு முழுமையான, துன்பமற்ற லட்சிய இன்பம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
எப்போது
அன்பு குறைகிறதோ அப்போதே துன்பம் நெருங்குகிறது.
எப்போது
அன்பு சுயநலமாக சுருங்குகிறதோ, அப்போதே துன்பம் பெருகுகிறது.
எப்போது
அன்பு அதிகாரமாக மாறுகிறதோ, அப்போதே இன்பமும் துன்பமாக உரு மாறுகிறது.
எப்போது
அன்பைப் பணத்திலும், சொத்துச் சுகத்திலும், நகை, நட்டுகளிலும் தேடத் துவங்குகிறமோ,
அப்போதே இன்பம் நம்மை விட்டு ஓடத் துவங்குகிறது.
எப்போது
அன்பை அறிவால் நெருங்க நினைக்கிறமோ, அப்போது துன்பம் நெருங்கி வருகிறது.
எப்போது
அன்பை துறவாக மாற்றி விலகி ஓடுகிறோமே, அப்போதே இன்பமும் விலகி ஓடுகிறது.
அன்பை அன்பு
கொண்ட சொல்லால், செயலால், மனதால்தான் அடைய முடியும்.
இன்பத்தை
இன்பம் கொண்ட சொல்லால், செயலால், மனதால்தான் அடைய முடியும்.
அன்பும் இன்பமும்
ஒன்று என்பதால் அன்பை இன்பத்தால் அடையலாம். இன்பத்தை அன்பால் அடையலாம்.
அன்பற்ற பிற
வழிகளில் அடையப்படும் இன்பம் இன்பமாக நீடிப்பதில்லை. அது விரைவிலேயே துன்பமாக வடிவெடுக்கிறது.
இப்படித்தான் இன்பம் துன்பமாக மாறுகிறது.
வெற்று இன்பம்
அன்பற்றது. உள்ளீடற்ற அது விரைவிலேயே உடைந்து நொறுங்குகிறது.
அன்பே இன்பம்.
இன்பமே அன்பு. அன்பால் வரும் இன்பம் அழிவதில்லை. அன்பால் பெறும் இன்பம் துன்பமாக மாறுவதில்லை.
அன்பால் பெறும்
இன்பமே சிறப்பு. பிற வழிகளில் பெறும் இன்பம் இழப்பு.
அன்பே பழக்கமாக
உள்ளவர்களுக்கு இன்பமே வழக்கமாக இருக்கிறது. அவர்களுக்கு அன்பே எந்நாளும், துன்பம்
என்றும் இல்லை.
அன்பால் பெறும்
இன்பம் சிறப்பான இன்பம், துன்பத்துக்கு இடமில்லாத இன்பம்.
அன்புற்று
அமர்ந்து வழக்கு என்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு என்கிறார் வள்ளுவர் இதை.
அன்புள்ள
நெஞ்சம் இன்பம் உள்ளதாக இருக்கிறது. அஃதில்லாத நெஞ்சம் துன்பம் உள்ளதாக இருக்கிறது.
துன்பத்தைப்
போக்க அன்பைக் கொஞ்சம் சேருங்கள், காரத்தை உண்டவர்கள் அதைப் போக்க சிறிது இனிப்பைச்
சேர்ப்பது போல!
அன்பு கொண்டு
வாழ்வதில் இருக்கிறது நாம் துன்பமற்ற இன்பத்தை அடைவது.
அன்பிருந்தால்
இன்பம் இருக்கும், இன்பம் மட்டுமே இருக்கும். அந்த இன்பம் வெறும் இன்பமாக அல்லாமல்,
பெரும் சிறப்புடைய இன்பமாக இருக்கும்.
அன்பே இன்பம்!
*****
No comments:
Post a Comment