26 Mar 2018

எஸ்.கே.வுக்குச் சில உபதேசங்கள்!


எஸ்.கே.வுக்குச் சில உபதேசங்கள்!
            மன விரைவு என்பது வித விதமாக எதிர்மறையாக நிகழ்வுகளைக் கற்பனை செய்து கொள்கிறது. நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. அதை விட நிலைமையை மோசமாக மனம் கற்பனை செய்து கொள்கிறது.
            கோபத்தை மிகுதிபடுத்தி விடுகிறது. புத்திகெட்டத் தனமாகச் செயல்படவும் தயங்குவதில்லை. தனக்காகத்தான் செயல்கள் என்ற நிலை மாறி செயலுக்காக தான் என்பது மாதிரியான நிலைமையை உருவாக்கி விடுகிறது.
            மனவிரைவினால் ஒரு நொடியில் ஏற்படும் ஆத்திரம் வாழ்நாள் முழுமையையும் கூட உருக்குலைத்து விடும். ஆகவே அது வேண்டாம். மனதை நிதானப்படுத்து எஸ்.கே. மனதைச் சாந்தப்படுத்துவாயாக எஸ்.கே.
            ஒவ்வொரு மனிதரும் அவருடைய மன உலகில் வாழ்பவர்கள். அவர்கள் அப்படி வாழ்வதை நீ தடுக்க முடியாது. அது அவர்களுடைய உரிமையும், சுதந்திரமும் ஆகும். நீ போகும் பாதை நல்ல பாதை என்றாலும், அதற்காக அவர்கள் அவர்களின் மன உலகை விட்டு உன்னுடைய பாதைக்கு வர வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்கள் அப்படியே இருக்கட்டும். அவர்கள் வராமல் இருப்பது நல்லது. யாரையும் கட்டாயப்படுத்தாமல் இருப்பது இயற்கைக்கு செய்யும் பெரிய உபகாரம்.
            இயல்பு மீறுபவர்களை அழிக்கும் சக்தி இயற்கைக்கு இருக்கிறது. எது குறித்தும் நீ வெகுவாகக் கவலைப்பட வேண்டியதில்லை, அக்கறை எடுத்துக் கொள்ளவும் வேண்டியதில்லை.
            இருவரின் மனநிலைகளும், மன உலகங்களும் வேறாக இருக்கும் போது அவர்களிடையே சமாதானத்தை உருவாக்குவது என்பது சாத்தியம் இல்லாதது. அந்த இருவரும் ஒருவருக்கொருவர் முரண்பட்டு, மாறுபட்டு இறுதியில் ஒரு நிலையை அடைவார்கள். இறுதி நிலையை முதலிலேயே சமாதானம் என்ற பெயரில் அதற்கானச் சூழ்நிலைகள் இல்லாத போது நீ உருவாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
            கழுவுற மீன்ல நழுவுற மீனாக நழுவிக் கொள்ளும் நுட்பத்தைப் போல் சிறந்த நுட்பம் இந்த உலகில் எதுவும் இல்லையே எஸ்.கே.
            உலகில் நடக்க வேண்டிய முறை என்பது ஒரு டெம்ளேட்டுக்கு ஒப்பானது. எல்லாரிடமும் அக்கறை உள்ளதைப் போல் காட்டிக் கொள்ள வேண்டுமே தவிர உண்மையான அக்கறை இருக்கக் கூடாது. ஒருவருக்கு நேர்ந்து விட்ட கஷ்டத்துக்காக கவலைப்படுவது போல காட்டிக் கொள்ள வேண்டுமே தவிர, உண்மையாகக் கவலைப்படக் கூடாது. அவர்கள் சொல்லும் வேலையில் ஆர்வம் உள்ளவனைப் போல் காட்டிக் கொள்ள வேண்டுமே தவிர, உண்மையான ஆர்வமுள்ளவனாக இருக்கக் கூடாது.
            இருப்பவன் போல் காட்டிக் கொண்டு இல்லாமல் இருக்க வேண்டும். இந்த உலகமெனும் நாடக மேடையில் நடிக்க வந்த நீ நிஜமாகவே அந்தப் பாத்திரமாக மாறி விடும் முட்டாள்தனத்தை மட்டும் ஒரு போதும் செய்து விடக் கூடாது.
            எஸ்.கே. உமக்குப் புரியும் படி விளக்க வேண்டுமானால்... கொஞ்சம் கீழ்நோக்கிக் செல்!
            கணக்காக எண்ணிக் கொடுப்பார்கள் தாள்களை. என்ன ஜென்மங்களோ? அவைகளிடம் எதையும் பேசக் கூடாது என்றுதான் நீ நினைப்பாய். அவர்களுக்குப் புரியாமல் இல்லை. அதைப் புரிந்தது போலக் காட்டிக் கொள்ள மறுப்பார்கள். இப்படி தங்களின் மனதை மற்றவர்களிடம் சுமத்தி, கீழ்த்தரமான ஒரு தன்மையை மேலிருந்து கீழ் நோக்கிச் செலுத்துபவர்கள் ஏன் மேல் நோக்கி நகர ஆசைப்படுகிறார்கள் என புரிகிறதா? அதனால் தரமற்ற ஓர் ஒழுகல் மேலிருந்து கீழ் வரை நிகழ்ந்து விடுகிறது என்பது தெரிகிறதா? அல்பத் தனத்தை நிர்வாகத் தனமாக அவர்கள் நிறுவி விடுகிறார்கள் அல்லவா! இந்த அல்பங்களிடம் பணியாற்றி அல்பத் தன்மையை விலக்க முடியாமலும், மேன்மையை நோக்கி நகர முடியாமலும் போய் விடுகிறதுதானே! இலக்குகளை மேன்மையை நோக்கி உயர்த்திப் பிடிப்பவர்கள் இதைக் கண்டு கொள்வதே இல்லை. கவனத்துக்குக் கொண்டு சென்றாலும் கண்டு கொள்ள விரும்புவதில்லை.
            இது உனக்குப் புரிந்தாலும், புரியாவிட்டாலும் நீ புரிந்து கொள்ள வேண்டியது அதைத்தான். வேறு வழி இருப்பதாகப் படவில்லை.
            உலகம் எனும் நாடக மேடையில் ராஜா வேடம் போட்டிருக்கிறாய் என்பதற்காக கடன் கொடுத்தவர் சும்மா விட்டு விட மாட்டார். அது வேடம், வெறும் வேடம் அவ்வளவே. உனக்கானப் பாடமும் அதுவே.
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...