26 Mar 2018

பணக்கார ஏழைகள்


குறளதிகாரம் - 9.9 - விகடபாரதி
பணக்கார ஏழைகள்
            அறிவில் அறியாமை உண்டு.
            வீரத்தில் கோழைத்தனம் உண்டு.
            செல்வத்திலும் தரித்திரம் உண்டு.
            அறிவில் இருக்கும் அறியாமையை,
            அரிய கற்று ஆசு அற்றால் கண்ணும் தெரியும்கால் இன்மை அரிதே வெளிறு என்பார் வள்ளுவர்.
            வீரத்தில் கோழைத்தனம் என்பதாக,
            புற மார்பில் குத்தாமல் புறமுதுகில் குத்தும் வஞ்சகத்தையும், சூழ்ச்சியையும் குறிப்பிடுவர்.
            செல்வத்தில் தரித்திரம் என்பது,
            செல்வம் இருந்தும் அதில் விருந்தோம்பல் செய்யாமையே ஆகும்.
            வறுமையுள் செம்மை என்பது வறுமையுற்ற காலத்தும் அதைப் பொருட்படுத்தாமல் வந்தார்க்கு விருந்தோம்புவது ஆகும்.
            வறுமையுள் செம்மை என்பது போல அதற்கு எதிர்மாறான நிலையை உடைமையுள் இன்மை என்கிறார் வள்ளுவர்.
            அதாவது உடைமையுள் இன்மை என்பது செல்வம் இருந்தும் தரித்திரம் என்பது ஆகும்.
            கல்வி எதற்கு? அறிவால் உலகம் தழைப்பதற்கு.
            வீரம் எதற்கு? தீரத்தால் உலகைக் காப்பதற்கு.
            செல்வம் எதற்கு? விருந்தோம்பலால் உலகையேத் தழுவிக் கொள்வதற்கு. அப்படி ஒரு விருந்தோம்பல் பண்பு, தம் ஊரில் மட்டுமல்லாது உலகத்து ஊர்கள் அனைத்திலும் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் ஆதித் தமிழர் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றார்.
            பயன்படுத்தும் கல்வியே அறிவாகப் பயன்படுகிறது.
            பயன்படுத்தும் வீரமே தீரமாக நின்று பயன் தருகிறது.
            அது போல பயன்படுத்தும் செல்வமே, கருப்புப் பணமாகவோ, கள்ளப் பணமாகவோ, பதுக்கும் பணமாகவோ மாறாமல் பயன் தருகிறது.
            செல்வத்தைப் பயன்படுத்த ஆகச் சிறந்த வழி விருந்தோம்பலே. விருந்தோம்பல் உறவுகளைப் பெருகச் செய்கிறது. சுற்றத்தைச் சூழச் செய்கிறது. நட்புகளை இணைத்துப் பிணைத்துக் கொள்கிறது.
            பூமியில் உள்ளவைகளைப் புவியீர்ப்பு விசை பிணைத்து வைத்திருப்பது போல, இந்தப் பூமியில் மனிதத்தை விருந்தோம்பல் எனும் ஈர்ப்பு விசையே பிணைத்து வைத்திருக்கிறது.
            உலகின் ஏதோ ஒரு மூலையிலே வயிற்றுப் பசிக்குச் சோறிடும் விருந்தோம்பல் மனிதத்தை எப்போதும் ஈரமாக வைத்து இருக்கிறது.
            அகதிக்கு இடம் கொடுத்தால் தண்டிக்கப்படலாம் எனும் சூழ்நிலையிலும் ரகசியமாக இடம் கொடுக்கும் விருந்தோம்பலே மனிதத்தைச் செத்து விடாமல் காத்து நிற்கிறது.
            ஆதரவற்றவர்களை, அரவணைப்பற்றவர்களை, ஏங்கித் தவிப்பவர்களைத் தழுவிக் கொள்ளும் விருந்தோம்பலிலே மனிதம் மேலும் புனிதம் அடைகிறது.
            விருந்தோம்பலே உலகை ஆம்பல் மலர் போல மலரச் செய்கிறது. உள்ளத்தைப் பொங்கி வரும் புது வெள்ளமாய் ஓடச் செய்கிறது.
            ஒரு வகையில் வறுமையினால் விருந்தோம்பல் இயலாமல் போகும் போது இன்முக வரவேற்பொன்றே அங்கு விருந்தோம்பலாகி விடும்.
            மாறாக செல்வம் இருந்தும் விருந்தோம்பல் செய்ய மனமில்லாமல் போவது மடமைத்தனம் என்பதாகி விடும். அதைப் போன்ற முட்டாள்தனம் வேறில்லை. அதைப் போன்ற வேறு பேதைத் தனத்துக்கு வாய்ப்பில்லை. அதைப் போன்ற சிறுமைத் தனம் உலகில் இன்னொன்று இருக்க வாய்ப்பில்லை.
            ஆபத்தில் உதவாத நட்பும்,
            அவரசத்துக்கு உதவாத உறவும்,
            வெளிச்சத்தைத் தராத விளக்கும்,
            நல்லறிவைத் தராதப் புத்தகமும்,
            பசியைப் போக்காத உணவும்,
            தாகத்தைத் தீர்க்காத நீரும்,
            வசிக்க உதவாத வீடும்,
            உடுத்த லாயக்கில்லாத உடையும்
                        இருந்தென்ன? இல்லாமல் இருந்தென்ன?
            அது போலத்தான் செல்வம் இருந்தும் விருந்தோம்பல் செய்யாத மனம் இருந்தென்ன? இல்லாமல் இருந்தென்ன?
            அது என்ன மனம்?
            அது மடமைத்தனம்!
            அது முட்டாள்தனம்!
            அது பேதைத்தனம்!
            அது மனமே அன்று, பிணம். பூமிக்கு கணம்.
            வள்ளுவர் இதை,
            உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு என்கிறார்.
            பகலிலும் இருட்டு இருக்கிறது.
            இரவிலும் வெளிச்சம் இருக்கிறது.
            உடைமையுள் இப்படி இன்மையும் இருக்கிறது. என்ன செய்வது? முட்டாள்கள் எல்லா காலத்திலும் இருக்கிறார்கள். வள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். இந்தக் காலத்திலும் இருக்கிறார்கள்.
            செல்வம் இருந்தும் அதை விருந்தோம்பாத அந்த முட்டாள்களால் இந்த உலகம் சந்திக்கும் பிரச்சனைகள் கொஞ்சமா நஞ்சமா?
            அதை எப்படி அந்த முட்டாள்களுக்குப் புரிய வைப்பது? அவர்கள்தான் முட்டாள்களாயிற்றே!
            அதே கோபம்தான் வள்ளுவருக்கும். மடமை மடவார்கண் உண்டு என்று கொதிக்கிறார். அஃது உடைமையுள் இன்மை என்று சபிக்கிறார்.
            என்ன செய்வது? விருந்தோம்ப முடியாத பஞ்சத்தைப் போக்கி விடலாம். இந்த முட்டாள்களின் அறிவுப் பஞ்சத்தைப் போக்க முடியுமா என்ன!
            அதனால்தான் பணமில்லாவிட்டாலும் விருந்தோம்பும் ஏழை மனதளவில் பணக்காரராக இருக்கிறார்.
            பணமிருந்தும் விருந்தோம்பாத பணக்காரர் மனதளவில் ஏழையாக இருக்கிறார். பதுக்கி வைக்கும் இந்தப் பணக்கார ஏழைகளால் உலகில் அன்றிலிருந்து இன்று வரை உலகில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதே நேரத்தில் பணமில்லாவிட்டாலும் விருந்தோம்பும் ஏழைகளால் பஞ்சம் தலை தெறிக்க ஓடுகிறது.
            அதனால்தான் நல்லறிஞர்கள் ஏழைகள் இல்லாத நாட்டை உருவாக்குவதை விட, பணக்கார ஏழைகள் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்பதையே தங்கள் கனவாகக் கொள்கிறார்கள். அதையே இலட்சியமாகக் கொண்டு சிந்திக்கிறார்கள். அதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். அதையே குறிக்கோளாகக் கொண்டு அதற்காகப் பாடுபடுகிறார்கள்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...