20 Mar 2018

சதிகார இதயம்!


சதிகார இதயம்!
            யார் அந்த எஸ்.கே. என்கிறார்கள்?
            உங்களை விட எழுதுபவரின் மனதை அரித்துக் கொண்டு இருக்கும் மிக முக்கியமான கேள்வி இது.
            எஸ்.கே. என்பவர் நீங்களாகவும் இருக்கலாம். இதை எழுதுபவராகவும் இருக்கலாம். மனிதர்களால் கொல்லப்பட்ட மனசாட்சியோடு நடமாடும் ஒரு பிணமாகவும் இருக்கலாம். எஸ்.கே.யின் மனதைக் கொன்றவர்கள், மனசாட்சியைக் கொல்லாமல் விட்டவர்கள்.
            ஒருவரின் மனதைக் கொல்வதில் இந்தச் சமூகம் எவ்வளவு ஆனந்தம் கொள்கிறது என்பதை எஸ்.கே. ஒவ்வொரு தற்கொலைகள் நிகழும் போது அறிந்து கொள்கிறார்.
            கிராம வாழ்வை உயர்வாகப் பேசுபவர்களுக்கு கிராம வாழ்வின் சூன்யங்கள் பற்றியோ, கிராம வாழ்வின் சூன்யக்காரர்கள் பற்றியோ எதுவும் தெரியாது. நகரத்தில் எதுவும் கண்டுகொள்ளப்படுவதில்லை என்கிறார்கள். ஒரு விதத்தில் மிக நல்லது அது.
            கிராமத்தில் சாதி உண்டெனும் சூன்யக்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவரின் நேர்மையான வளர்ச்சி பொறுக்காத பொறாமை கொண்ட சூன்யக்காரர்கள் இருக்கிறார்கள். ஒரு நிலத்தை, ஒரு வயலை வாங்க முடியாத அளவுக்கு சவ சூன்யம் செய்யும் சூன்யக்காரர்கள் இருக்கிறார்கள்.
            எஸ்.கே. அப்படித்தான் பக்கத்தில் இருக்கும் மனை ஒன்றை வாங்குவதற்காக முயற்சி மேற்கொண்டார். அது என்ன? எஸ்.கே.வைப் பற்றி எழுதும் போது அர் விகுதி போட்டு இதுவரை இல்லாத மரியாதை என்று நீங்கள் கேட்கலாம். எஸ்.கே. என்பவர் பெண்ணாகவும் இருக்கலாம். அன் விகுதி போட்டால் ஆண் என்பதோடு முடிந்து விடக் கூடிய அபாயம் இருக்கிறது.
            சரி, விசயத்துக்கு வருவோம்.
            எஸ்.கே.யின் எதிரில் இருப்பவர்தான் முதல் சதிகாரராக, சூழ்ச்சிகாரராக செயல்பட்டார்.
            நிலம் வாங்கிப் பதினைந்து நாட்கள் புகையாத புகைச்சல் பதினைந்தாம் நாள் புகைந்தது.
            நிலம் வாங்கியதற்கான ஆதாரத்தை எடுத்துக் கொண்டு இந்த இடத்துக்கு வா என்று ஒருவர் மிரட்டினார். அவரே சிறிது நேரம் கழித்து அந்தக் கோயிலுக்கு வா என்று மிரட்டினார். ம்ஹூம், நீ இங்கே வா என்று நாட்டாமை பேசுபவர்கள் மிரட்டினர்.
            எஸ்.கே. ஒரே ஆள். எத்தனை இடத்துக்குச் செல்வார்?
            இங்கே சென்று நில ஆர்ஜிதப் பத்திரங்களைக் காட்டினால், அங்கே வரச் சொன்னோமா இல்லையா? ஏன் வரவில்லை என்று அங்கே இருப்பவர் மிரட்டினார்.
            அங்கே சென்றால், கோயிலுக்கு வரச் சொன்னோமே ஏன் வரவில்லை என்று நாட்டாமை செய்பவர்கள் மிரட்டினர்.
            எங்கே செல்வார் எஸ்.கே.? உடலெல்லாம் கால் முளைத்த மிருகமாய் ஓடியாடி களைத்தார்.
            அறிவு இருக்கா முண்டம்? என்ற சொற்றொடரால் எஸ்.கே.வின் நில ஆர்ஜித நகல் பத்திரம் முதலில் கையகப்படுத்தப்பட்டது.
            அதைத் திருப்பித் தருமாறு எஸ்.கே. மன்றாடினார்.
            நீ குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவாய் நாயே! என்று ஒல்லியாக இருக்கும் எஸ்.கே.யின் முகத்தில் காறி உமிழப்பட்டது.
            மு.பு., தே.ம., ஒ.ஓ., க...ம்...டி., என்றெல்லாம் பொருள் தெரியாத வார்த்தைகளால் எஸ்.கே. திட்டுதலுக்கு உள்ளானார். எஸ்.கே.யின் இல்லத்தில் இருந்த அகராதிகள் பொருள் இழந்திருக்கக் கூடும். எஸ்.கே.வை தே.ம., என்றெல்லாம் சொல்வதாலா தமிழகம் கொந்தளிக்கப் போகிறது? எஸ்.கே. கொந்தளித்தால் கொலை மிரட்டலுக்கு ஆளாவார் என்பது அவருக்குத் தெரியாதா?
            ஒரு வகையில் எஸ்.கே. தப்பித்தார் இவ்விடயத்தில். எஸ்.கே.வுக்கு நிலத்தை விற்றவர் ஒவ்வொருவர் காலிலாக விழ வைக்கப்பட்டார். பாவம் அந்த மூதாட்டி தன் மகன் வயதுக்குக் குறைவானவர்கள் காலில் எல்லாம் விழுந்து கெஞ்சிக் கதறினார்.
            பிறகுதான் அந்த மூதாட்டி மேல் பரிதாபம் பிறந்தது உலக மகா நல்லவர்களான கிராமத்துக்காரர்களுக்கு.
            அவரை வாகனத்தில் வைத்து அழைத்துச் சென்றனர்.
            அந்த கிராமத்தின் மிகப் பெரிய வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூதாட்டி நாடுமாரி, கு...சி...கா...ரி, தே...ள்., நாற மு...டை., என்றெல்லாம் அவ்வீட்டுப் பெண்களால் திட்டப்பட்டு, அப்பெண்களால் இழுத்து வரப்பட்டு தெருவில் வீசப்பட்டார்.
            இன்னொரு வயல் இருக்குன்னு விற்க நினைச்சே பொலி போட்டுடுவோம் பொலி என்று ஏறி மிதிக்கப்பட்டார்.
            போடா, வாடா, பொட்டக் கண்ணா என்று பெருமரியாதைக்கு உள்ளான எஸ்.கே. சிவில் வழக்கு ஒன்றைச் சந்திக்க வேண்டும் என்றும், அதற்கான வாதாடுவதற்கான செலவை அவர் செய்வதோடு, அவருக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்குக்கும் அவரே செலவு செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
            நல்ல மனிதர்கள் வாழும் கிராமத்தில் வாழும் எஸ்.கே. நகரத்தை நோக்கி இடம் பெயராமல் இருந்த ஒரே காரணத்துக்காக சிவில் வழக்கை எதிர்கொள்ள இருக்கிறார். அவரே அவருக்கு எதிராக வழக்குத் தொடுத்து, அவரே அவருக்கு ஆதரவாக வாதாடி.
            வழக்கின் சுருக்கமான சாராம்சம் - விற்ற மூதாட்டி மனநலம் பாதிக்கப்பட்டவர். அதனால் விற்றதும், வாங்கியதும் செல்லாது.

            நீங்கள் கிராமத்தில் இருப்பதற்காக எவ்வளவு பெருமைப்பட வேண்டும்? காந்தியடிகள் சொன்னது போல இந்தியாவின் இதயம் கிராமத்திலும் இருக்கலாம். சதிகார இதயம்!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...