குறளதிகாரம் - 9.3 - விகடபாரதி
வறுமையை விரட்ட
விருந்தோம்பு!
வருபவர்க்கு
எல்லாம் உணவளித்துக் கொண்டு,
அவர்களின்
தேவைகளை நிறைவேற்ற உதவிக் கொண்டு இருந்தால்...
செல்வம் குறைவுபடாதா?
குறைபடும்
செல்வத்தால் வறுமை உண்டாகாதா?
ஒருவேளை,
அப்படியானால்,
வருவோர்க்கு எல்லாம் விருந்தோம்பி ஏன் வறுமைபட
வேண்டும்?
அஃது ஆவது,
விருந்தோம்புவதால் வறுமை உண்டாகும் என்றால் ஏன்
விருந்தோம்ப வேண்டும்?
இதற்கானப்
பதில் இன்னொரு கேள்வியே.
வறியவர்கள்
கூட விருந்தோம்பும் போது மற்றவர்கள் ஏன் விருந்தோம்பக் கூடாது?
உணவளித்தல்,
உதவி புரிதல் எனும் விருந்தோம்பலுக்கும் வறுமைக்கும் தொடர்பில்லை. அப்படித் தொடர்பு
இருந்தால் வறியவர்கள் யாரும் விருந்தோம்பல் செய்ய மாட்டார்கள். விருந்தோம்பும் வறியவர்களுக்கு
வறுமை தெரிவதில்லை, அதில் உள்ள மகிழ்ச்சியே தெரிகிறது.
ஆனாலும் அடிமனதில்
ஐயம் இருக்கவே செய்கிறது,
வருவோர்க்கு
எல்லாம் உணவளித்து, உதவி புரிந்து வறுமையாகி விட்டால்... வறியவர்களும் விருந்தோம்புகிறார்கள்
என்றால் அவர்கள் அப்படி விருந்தோம்பித்தான் வறியவர்கள் ஆனார்களா...
அப்படி ஒன்று
இந்த உலகில் இதுவரை நடந்ததில்லை.
விருந்தோம்பலில்
உணவளிப்பது என்பது,
தாகம் தீர்ப்பதும், பசி தீர்ப்பதுமே தவிர ஆடம்பர
விருந்து செய்வது விருந்தோம்பல் என்ற கணக்கில் வராது. ஒருவேளை ஆடம்பர விருந்துகள்
வறுமையைக் கொண்டு வரலாம்.
உதவி புரிவது
என்பது,
உண்ண, உடுத்த,
தங்க, மருத்துவ மற்றும் வாழ்வாதாரத்துக்கான வேலை வாய்ப்புகள் குறித்த உதவிகளே தவிர,
வெறும் பெயருக்கும், வெற்றுப் புகழுக்கும் ஆசைப்பட்டுச் செய்யும் வறட்டுக் கெளரவத்துக்கான
உதவிகள் அதன் கணக்கில் வராது. ஒருவேளை அப்படிப்பட்ட வறட்டு ஆடம்பரத்துக்குச் செய்யப்படும்
உதவிகள் வறுமையைக் கொண்டு வரலாம்.
இந்த உலகம்
உள்ளளவும் தாகத்தால் உயிர்கள் ஏங்கக் கூடாது, பசியால் உயிர்கள் வாடக் கூடாது, மருத்துவம்
இல்லாமல் உயிர்கள் மடியக் கூடாது, ஆதரவில்லாமல் உயிர்கள் அனாதை ஆகி விடக் கூடாது. அதற்கான
ஆதரவே, அரவணைப்பே விருந்தோம்பல் ஆகும்.
வாழ வழியற்று
வரும் அகதிகளுக்குச் செய்யும் வரவேற்பே விருந்தோம்பல்.
அனாதையையாய்
நிற்பவர்களுக்குத் தரும் அரவணைப்பே விருந்தோம்பல்.
புதிதாய்
வந்து தடுமாறி நிற்பவருக்குச் செய்யும் வழிகாட்டலே விருந்தோம்பல்.
எல்லாம் இழந்து
நிற்பவருக்கு நீட்டும் ஆதரவுக் கரமே விருந்தோம்பல்.
இயலாமையால்
நிர்கதியாய் நிற்பவருக்கு இயன்றதைச் செய்யும் மனப்பான்மையே விருந்தோம்பல்.
வக்கற்று,
திக்கற்று நிற்பவர்களைத் தழுவிக் கொள்ளும் பேரன்பே விருந்தோம்பல்.
அத்தகைய விருந்தோம்பலால்
யாரும் வறுமையுறுவதில்லை, செழுமையே உறுகிறார்கள்.
வந்தவர்களையெல்லாம்
குடியேற அனுமதித்து அமெரிக்கா செய்த விருந்தோம்பலே அந்நாட்டைச் செழுமையாக்கியது. இப்போது
அதற்கு மாறாகச் செயல்படும் அதன் மறுத்தோம்பலே அந்நாட்டை வறுமையாக்கவும் போகிறது.
விருந்தோம்பலே
வளமையாக்குகிறது. யார் விருந்தோம்பலைப் பெற்றார்களோ அவர்களும் விருந்தோம்பலைச் செய்ய
தலைபடுகிறார்கள். விருந்தோம்பல் பெற்ற ஒவ்வொருவரும் அவ்வாறே தலைப்பட தலைப்பட பசிப்பிணி
இல்லாத உலகம் உருவாகிறது. தேவைப்படுபவர்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கிறது. ஆதரவற்றவர்களுக்கு
ஆதரவு கிடைக்கிறது. அரவணைப்பு அற்றவர்களுக்கு அரவணைப்பு கிடைக்கிறது.
ஆம் சோறு
தேவையானவர்களுக்குச் சோறும், அன்பு தேவையானவர்களுக்கு அன்பும் கிடைக்கிறது.
அப்புறம்
இந்த உலகில் வறுமை எப்படி இருக்கும்? உலகிலேயே வறுமை இல்லை எனும் போது, இப்பேருலகில்
வாழும் விருந்தோம்பல் செய்யும் ஒருவருக்கு மட்டும் வறுமை எப்படி இருக்கும்?
விருந்தோம்பலால்
வறுமை உண்டாகி விடும் என்பதை ஒரு நொண்டிச் சாக்காக வைத்து விருந்தோம்பலைப் புறக்கணிக்க
நினைப்பவர்களை, புறக்கணிக்க நினைக்காமல் பக்குவமாக அவர்களுக்கு உண்மையை இப்படி எடுத்து
இயம்புகிறார் வள்ளுவர்,
வரு விருந்து
வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பரு வந்து பாழ் படுதல் இன்று - என்று.
விருந்தோம்பலால்
வளமை உண்டாகிறதே தவிர வறுமை உண்டாவதில்லை. மறுத்தோம்பலால் வறுமை உண்டாகிறதே தவிர வளமை
உண்டாவதில்லை.
*****
No comments:
Post a Comment