9 Mar 2018

மெளனப் புதையாய்வு


மெளனப் புதையாய்வு
மெளனங்களைத் தோண்டுவதற்கு முன்
போஸ்ட் மார்டம் செய்வோம் என்ற
உத்தரவாதம் கொடுங்கள்
புதைத்ததை தோண்டியெடுத்து
தீயினுக்குத் தின்னக் கொடுப்பதற்கு
கிருமிகள் தின்னட்டும்
கயமைத்தனத்திற்கு எதிரான கோபங்களும்
போராட முடியாமைக்கான ஆற்றாமைகளும்
இழிவைச் சகித்துக் கொண்ட இயலாமைகளும்
புதையுண்டு கிடக்கின்றன
ஆய்வின் முடிவில் ஓர் இனவொழிப்பு
கண்டறியப்பட்டால்
மெளனம் கைதட்டி ஆர்ப்பரிக்கும்
மறைக்கப்பட்டால்
ஓலமிட்டு அழும்
மெளனத்திற்குப் பின் மீண்டும்
மெளனமாவீர்கள் என்றால்
தயவுசெய்து தோண்ட வேண்டாம்
மெளனமாக இருப்பதற்கு
அனுமதி கொடுத்த உங்களுக்கு நன்றி
*****

No comments:

Post a Comment