8 Mar 2018

அன்பெனும் காற்றுக்கு ஏது வேலி?


குறளதிகாரம் - 8.1 - விகடபாரதி
அன்பெனும் காற்றுக்கு ஏது வேலி?
            அம்பு செய்யாததை அன்பு செய்யும்.
            யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது ஆதித் தமிழனின் அன்பு வெளிப்பாடு.
            அன்பு ஒளியைப் போல. தோன்றி விட்டால் அந்த இடமே பிரகாசமாகி விடுகிறது.
            அன்பு நதியைப் போல. உருவாகி விட்டால் அந்த இடமே சோலைவனமாகி விடுகிறது.
            அன்பு மழையைப் போல. பொழியத் தொடங்கி விட்டால் அந்த இடமே பசுமையாகி விடுகிறது.
            அன்பு செழிக்கும் இடத்தில் சுவர்கள் தேவையில்லை.
            அன்பு கொழிக்கும் இடத்தில் வேலிகள் தேவையில்லை.
            அன்பு முகிழ்க்கும் இடத்தில் எல்லைக் கோடுகள் தேவையில்லை.
            அன்பு பூக்கும் இடத்தில் கதவுகள் தேவையில்லை, பூட்டுகள் தேவையில்லை.
            அன்பு கொண்ட நெஞ்சில் ரகசியங்கள் இருப்பதில்லை. அது திறந்த மனதாக இருக்கிறது.
            அன்பு கொண்ட மனதில் தனக்கென எதுவும் எடுத்து வைக்க ஏதுமில்லை. தனக்கென எடுத்து வைக்க ஏதுமில்லாத மனதை அடைத்து வைக்கத் தாழ்ப்பாள்களும் தேவையில்லை.
            வெள்ளத்துக்கு அணை கட்ட முடியாது.
            புயல் காற்றுக்குப் பூட்டு போட முடியாது.
            அன்புக்கும் தாழ்ப்பாள் போட முடியாது.
            அன்பே விடுவிக்கிறது.
            அன்பே விடுதலை தருகிறது.
            எது உங்களை அடைத்து வைக்கிறதோ அந்தத் தாழ்ப்பாள்களை அன்பே உடைத்து எறிகிறது.
            அடைத்து வைக்க நினைத்தாலும் அன்பு கதவில்லாத வீடுகளையே உருவாக்குகிறது. அடைந்து கொள்ள நினைத்தாலும் அன்பு பேரிடர் மீட்பர்களைப் போல வந்து மீட்டெடுக்கிறது.
            அன்புக்கு மனிதர்கள் அடிமையாகிறார்கள். ஆனால் அன்பு யாரையும் அடிமையாக வைத்திருக்க அனுமதிப்பதில்லை. அடிமையாக வைத்திருக்கும் கை விலங்குகளையும், அறைத் தாழ்ப்பாள்களையும் அன்பு ஏற்பதில்லை.
            உடல் உறுப்புகளில் திறந்து மூடும் சிறப்பு பெற்றுள்ளவைகளில் கண்கள் சிறப்பானது. கிட்டதட்ட கதவுகள் போல இமைகள் கண்களுக்கு. தேவையென்றால் திறந்தும், தேவையில்லை என்றால் அடைத்தும் வைத்துக் கொள்ள உதவும் கதவுகள் போல கண்களுக்குத் தேவையென்றால் இமைகளைத் திறந்தும், தேவையில்லை என்றால் இமைகளை மூடியும் கொள்ளலாம்.
            மனதின் ஆழத்தைக் கண்டறிய முடியாது என்பார்கள். கண்களைக் கொண்டு குறிப்பறிய முடியும் என்பார் வள்ளுவர். அதுதான் கண்ணுக்கும், மனதுக்கும் உள்ள தொடர்பு.
            மனம் நினைப்பதை கண்கள் காட்டி விடும். கண்ணுக்குக் கண் பார்த்து பேசு என்ற வழக்கு அப்படித்தான் உருவானது.
            அன்பு கொண்ட மனதோடு, மனதில் இருக்கும் அன்பை கண்கள் மூலம் காட்டக் கூடாது என்று கண்களை மூடிக் கொண்டாலும், மூடியிருக்கும் கண்களைத் தாண்டி அன்பின் வெளிப்பாடாக கண்ணீர் வெளிப்பட்டு நிற்கும்.
            உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்பாரே பாரதி.
             மனதில் இருக்கும் அன்பை அடைத்துக் கொள்ள தாழ்ப்பாள்கள் கண்டுபிடிக்கப்பட வில்லை. அப்படியே மனதைக் காட்டும் கண்களைக் காட்ட விடாமல் இமைகளால் மூடிக் கொண்டாலும் அன்பானது கண்ணீராக வெளிப்பட்டு நிற்கும்.
            அன்பை அடைத்து வைக்க அளவில் என்ன அது கொஞ்சமா? அன்பே பிரபஞ்சம். பிரபஞ்சத்தை எப்படி அடைத்து வைப்பது? விரிந்து கொண்டே இருக்கும் பிரபஞ்சத்தையும், அன்பையும் அடைப்பது சாத்தியமில்லை.
            அன்பும் தும்மலைப் போலத்தான். நெடுநேரம் அடைத்து வைக்க முடியாது.
            அன்பு சூரியனைப் போல. சுயநலக் கரங்களால் மறைத்து விட முடியாது.
            கண்களே மனிதர்க்கு உலகில் உள்ள எல்லாவற்றையும் காட்டுகிறது. மனதுக்குள் இருக்கும் அன்பையும் அதுவே காட்டுகிறது, கண்ணீர் எனும் வடிவாக.
            மனதுக்குள் அன்பை உறைய வைத்தாலும், அது கண்கள் வழி கண்ணீராக உருகி வழிவதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.
            உடலில் எங்கு அடிபட்டாலும் கண்களே அழும். உலகில் எவர் துயர்பட்டாலும் அக்கண்களே அழும். அன்பு இப்படி தன்னுடல் மீதானாலும், இவ்வுலகம் மீதானாலும் கண்ணீராக வெளிப்படும். காரணம், இப்படி கண்ணீராக வெளிப்படும் அன்பை அடைத்து வைக்கத் தாழ்ப்பாள் இல்லை.
            அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.
            காற்றுக்கு வேலி இல்லை. அன்புக்குத் தாழ்ப்பாள் இல்லை.
*****

No comments:

Post a Comment