புத்தகங்களே புதிய நெம்புகோல்கள்!
சுவாசிப்பு உயிரின்
இருப்பை அடையாளப்படுத்துகிறது.
வாசிப்பு மனிதத்தின்
இருப்பை அடையாளப்படுத்துகிறது.
ஓதாமல் ஒரு நாளும் இருக்க
வேண்டாம் என்ற வாசிப்பு மரபில் வந்தவர்கள் நாம்.
தினமும் துலக்கி வைக்கப்பட்ட
பாத்திரமே பளபளப்பாக இருக்கிறது. தினமும் வாசிக்கும் மனமே கலகலப்பாக இருக்கிறது.
தினமும் துலகப்படும்
வாயே துர்நாற்றம் இல்லாமல் இருக்கிறது. தினமும் வாசிக்கும் மனமே துர்சிந்தனைகள் இல்லாமல்
இருக்கிறது.
தினமும் வெளுத்து அணியும்
ஆடையே பளிச்சென்று இருக்கிறது. தினமும் வாசிக்கும் மனமே வெளிச்சம் நிரம்பியதாக இருக்கிறது.
தினமும் குளிக்கும்
உடலே சுறுசுறுப்பாக இயங்குகிறது. தினமும் வாசிக்கும் மனமே விறுவிறுப்பாக இயங்குகிறது.
வாழ்க்கையில் துன்பங்கள்
வரும் போது மனிதர்கள் துணையிருப்பதில்லை. புத்தகங்கள் துணையாக இருந்து, துன்பங்களை
விரட்ட இணையாக இருந்து, துயரத்தை வெல்ல கணையாகச் செயல்படுகிறது.
ஒரு நல்ல நண்பர் கூட
நம்மை விட்டு ஒரு நாள் பிரிவார். நாம் வாங்கி வைத்த ஒரு நல்ல புத்தகம் ஒரு நாளும் நம்மை
விட்டுப் பிரிவதில்லை.
நம் முன்னோர்கள் காலம்
முழுவதும் வாழ்ந்து நமக்கு வழிகாட்ட முடியாது என்பதற்காகத்தான் புத்தகங்களை எழுதி வைத்தார்கள்.
எழுதி வைத்த நம் முன்னோர்கள் மறைந்தார்கள். புத்தகங்கள் மறையவில்லை.
ஆம்!
திருவள்ளுவர் மறைந்தார்.
திருக்குறள் மறையவில்லை.
தொல்காப்பியம் மறைந்தார்.
தொல்காப்பியம் மறையவில்லை.
இளங்கோவடிகள் மறைந்தார்.
சிலப்பதிகாரம் மறையவில்லை.
கம்பர் மறைந்தார். கம்பராமாயணம்
மறையவில்லை.
பாரதி மறைந்தார், பாரதிதாசன்
மறைந்தார். அவர்கள் எழுதி வைத்த கவிதைகள் மறையவில்லை.
மனிதர்கள் சாகலாம்.
அவர்கள் எழுதி வைத்த புத்தகங்கள் சாகாது.
புத்தகங்கள் சாகா வரம்
பெற்றவை.
துன்பத்தில் வேகும்
மனிதர்களுக்கும், துயரத்தில் நோகும் மனிதர்களுக்கும், முதுமையில் சாகும் மனிதர்களுக்கும்
சாகா வரம் பெற்ற புத்தகங்களே துன்பத்தை நீக்குகின்றன. துயரத்தைப் போக்குகின்றன. முதுமையையும்
இளமையாக்க வழி சொல்கின்றன.
புத்தகத்தின் ஒரு பக்கம்
புரட்டப்படும் போது, மனதின் இருண்ட ஒரு பக்கம் விரட்டப்படுகிறது.
ஒரு புத்தகம் வாசித்து
முடிக்கப்படும் போது, மனதின் அறியாமை இடிக்கப்படுகிறது.
புத்தகங்களை நாம் சுவாசித்தால்,
மனித நேயத்தை சுவாசிப்போம்.
புத்தகங்களை நாம் வாசித்தால்,
வாழ்க்கைக் கவிதையை வாசிப்போம்.
புத்தகங்களை நாம் நேசித்தால்,
ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் நேசிப்போம்.
உலகத்தைப் புரட்ட ஒரு
நெம்புகோல் போதும் என்பார் ஆர்க்கிமிடிஸ். அவ்வளவு பெரிய நெம்புகோலுக்கு எங்கே போவது?
அதை விடச் சிறிய, ஆனால் உலகத்தைப் புரட்டும் நெம்புகோலை விட வலிய, எளிய நெம்புகோல்
ஒன்று இருக்கிறது.
அதுதான் புத்தகம்.
புத்தகத்தைப் புரட்டினால்
உண்டாகும் புது அகம். புத்தகங்களைத் திரட்டினால் உண்டாகும் புது உலகம்.
ஒரு புத்தகம் உங்களை
மட்டுமன்று, உலகையே மாற்றுகிறது.
உலகையே மாற்றும் புத்தகம்
ஒன்று ஏன் உங்கள் கைகளில் இருக்கக் கூடாது?
இதுவரை இல்லாவிட்டாலும்
பரவாயில்லை. இனியாவது ஒன்று உங்கள் கைகளில் இருக்கட்டும். உங்களாலும் மாறட்டும் உலகம்.
மாறும் உலகுக்குப் புத்தகங்கள் வெற்றித் திலகம்.
(09.03.2018 (வெள்ளி) அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,
உச்சிவாடியில் நடைபெற்ற இரண்டாவது செங்காந்தள் அறிவுத் திருவிழாவில் கட்டுரையாற்றியதன்
வடிவம்)
*****
No comments:
Post a Comment