குறளதிகாரம் - 9.5 - விகடபாரதி
தானாக முளை விடும்
விதைகள்!
விருந்தினர்களை
முதலில் விருந்தோம்பி விட்டு பின் உண்பதே நம் மரபு.
விருந்தினர்களை
முதன்மைபடுத்தி விருந்தோம்புவதன் காரணம் குறைவு படாமல் விருந்தோம்ப வேண்டும் என்பதே.
அவர்கள் விருந்தோம்பப்பட்ட பின் நாம் உண்ணும் விருந்தில் ஏதேனும் குறைவு பட்டாலும்
விருந்தோம்பிய நமக்குக் குறைவில்லை.
மாறாக முதலில்
நாம் விருந்து உண்டு, விருந்தினர்களைப் பின்னர் விருந்தோம்பி விருந்தில் ஏதேனும் குறைவு
பட்டால் அது விருந்தினர்களை மனம் கோணச் செய்யும், விருந்தின் நோக்கத்தையும் நாணச்
செய்யும்.
மேலும் விருந்தினர்களை
முதன்மைபடுத்தி விருந்தோம்பல் செய்யும் போது முக மலர்ச்சியோடு அக மலர்ச்சியும் உண்டாகும்
என்ற உளவியல் காரணமும் இதன் பின் நிற்கிறது.
கடைசிப் பந்தியில்
அப்பளம் இல்லை என்று வந்த அடிதடியில் உறவுகள் பிரிந்த சோக வரலாறு நம்மிடையே உண்டு.
பாயாசம் இல்லை என்று வந்த ஆபாச வார்த்தைகளில் விருந்துக் களம் போர்க்களம் ஆன நிகழ்வுகளும்
நம்மிடம் உண்டு.
அப்படிப்பட்ட
சோக வரலாறுகளும், போர்க்களங்களும் நிகழாமல் இருக்கவும் விருந்தினர்களை முதலில் விருந்தோம்பி
விடுவது நல்லது. பின்னர் கடைசிப் பந்தியில் நாம் உண்ணும் விருந்தில் ஏதேனும் குறைவு
பட்டாலும் நமக்குப் பரவாயில்லை, அதில் குறை என்ன உள்ளது?
இப்படி விருந்தினர்களை
முதன்மைப்படுத்தி விருந்தோம்பி, மிச்சம் இருப்பதை உண்பவரை விருந்தினர்கள் பெரிதும்
போற்றுவர்.
தமக்கு மிஞ்சிதான்
தானம் என்பது அல்லாமல், விருந்தினர்க்குப் போக மிஞ்சியதே தம் வயிற்றுக்கான உணவு என்ற
உயர்வான பண்பாடு விருந்தினர்களை மனம் நெகிழச் செய்யும், மெய் சிலிர்க்கச் செய்யும்.
அப்படி விருந்தோம்பிய
ஒருவர் காலப் போக்கில் ஏதோ ஒன்றின் காரணமாக வறுமைபட்டாலும் அவருக்காக அவர் நிலத்தில்
விதை விதைக்க விருந்தினர்கள் துணை நிற்பர்.
விதைக்க விதையில்லையே
என்று நினைத்த மாத்திரத்திலே விருந்துண்ட விருந்தினர்கள் தாம் உண்ட விருந்தை நெஞ்சில்
இருத்தி கைகளில் விதைகளைப் பொருத்தி வந்து நிற்பர்.
ஒருவேளை வேலைப்
பளுக்கள், நெருக்கடியான குடும்பச் சூழ்நிலைகள் காரணமாக விருந்தோம்பியவர் வித்திட மறந்தாலும்,
நினைவூட்டி நிலத்தில் வித்திட ஊக்கப்படுத்துவர்.
அது மட்டுமல்லாது,
விருந்தோம்பியவர் வித்திட வேண்டிய பருவத்தில் திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற
வகையில் வெளிநாடு சென்றிருந்தாலும், உறவுகளை, நட்புகளை, விழாக்களைக் காண வெளியூர் சென்றிருந்தாலும்,
நாடு காக்கும் பணிக்காக எல்லைக்குச் சென்றிருந்தாலும் விருந்தோம்பிய அவருக்காக அவர்
நிலத்தில் அவருக்காக விருந்தினர்கள் வித்திடவும் தயங்க மாட்டர்கள்.
வித்திட்ட
விதைகள் பஞ்சத்திலோ, வெள்ளத்திலோ பாழாகி இனி வித்திற்கு என்ன செய்வது என்ற நிலை ஏற்பட்டாலும்,
விருந்துண்ட விருந்தினர்கள் தம்மிடம் இருக்கும் வித்துகளாம் விதைகளைத் தந்து ஆற்றுப்படுத்தாமல்
இருக்க மாட்டார்கள்.
விருந்திட்டவர்க்கு
நன்றி பாராட்டும் வகையில் விருந்தினர்கள் பலரும் வித்திட துணை நிற்பர், உதவி புரிவர்,
காத்து நிற்பர்.
வித்தில்லையே
அதனால் வித்திட முடியுமோ?
வித்திடும்
பருவத்தில் வெளிப் பயணம் நிகழ்கிறதே அதனால் வித்திட முடியுமோ?
வித்திட்டதுப்
பாழாகி விதையில்லாமல் போனதே, இனி வித்திட முடியுமோ?
நெருக்கடியான
நிலைகளில் வித்திட மறந்திட்டால் வித்திட முடியுமோ? ... ... ...
என்றெல்லாம்
விருந்தினர்களை பேரன்போடு விருந்தோம்பி மிச்சம் இருப்பதை பெருமகிழ்வோடு உண்ட விருந்தோம்பியவர்
கவலையுற, தொய்வுறத் தேவையில்லை. அவருக்காக விருந்தினர் பலரும் கை கோர்ப்பர், வித்திட்டு
விளைந்ததை அவர் இல்லம் சேர்ப்பர்.
இதைத்தான்
வள்ளுவர்,
வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்து ஓம்பி
மிச்சில் மிசைவான் புலம் என்கிறார்.
விருந்தோம்பி
மிஞ்சியதை உண்பவர் வித்திட்டுதான் விளைவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவருக்காக
வித்திட்டு, விளைவித்து வழங்க விருந்தினர்கள் காத்திருப்பர்.
விதைத்துதான்
முளை விடும் விதைகள் என்றில்லை, இப்படி விருந்தோம்பியவர்க்காகத் தானாகவும் முளை விடும்
விதைகள்!
*****
No comments:
Post a Comment