17 Mar 2018

அன்பே பிரபஞ்ச நிலை!


குறளதிகாரம் - 8.10 - விகடபாரதி
அன்பே பிரபஞ்ச நிலை!
            அன்பே ஆருயிருக்கு என்போடு இயைந்த தொடர்பு.
            அன்புடையவர் என்பும் உரியர் பிறர்க்கு.
            என்பிலதனை வெயில் காய்ப்பது போல அன்பிலதனை காயும் அறம்.
            இப்படியெல்லாம் அன்பையும், என்பையும் தொடர்புபடுத்துகிறார் வள்ளுவர்.
            மனிதராகப் பிறந்தவர் பயனின்றி அழியக் கூடாது என்பார் மார்க்ஸ்.
            பயனின்று மனிதராகப் பிறந்தவர் அழியக் கூடாது என்றால் அவர் மனிதச் சமூகத்தின் மேல் அன்பு கொண்டவராக இருக்க வேண்டும். அந்த அன்புதான் உடலுக்குள் இருக்கும் உயிரை அர்த்தப்படுத்துகிறது.
            ஒரு மனிதர் எத்தனை காலம் வாழ்ந்தார் என்பதை விட, வாழ்ந்த காலத்தில் அன்பு கொண்டு என்ன செய்தார் என்பதே முக்கியம் அல்லவா!
            அன்பே வாழ்விற்கான அர்த்தத்தைக் கொண்டு வருகிறது.
            உலகில் பிறந்த உயிர்கள் உயிர் கொண்டு வாழ்ந்ததற்கான அர்த்தத்தையும் அன்புதான் தருகிறது.
            அன்பு கொண்டு வாழ்ந்தவர்கள் மறைந்த பின்னும் நினைக்கப்படுகிறார்கள்.
            அன்பற்று வாழ்பவர்கள் வாழும் காலத்திலேயே மறக்கப்படுகிறார்கள்.
            அன்பே வாழும் காலத்தில் உயிருக்கும் உடலுக்குமான தொடர்பை நிலைபடுத்துகிறது. வாழ்ந்த பின்னும் சரித்திரத்தில் உயிர் கொண்டு உலவச் செய்கிறது.
            அன்பு கொண்டு வாழ்ந்தவர்களே உயிர் கொண்டு வாழ்ந்தவர்கள் கணக்கில் வைக்கப்படுகிறார்கள்.
            அன்பு அறுந்து வாழ்பவர்கள் எலும்பையும், ‍தோலையும் போர்த்திய உயிரற்ற சடமாக வாழ்ந்ததாகவே கணக்கில் வைக்கப்படுகிறார்கள்.
            ஆம்! அன்பற்றவர்களை இதயம் இல்லாதவர்களாகத்தானே சொல்கிறார்கள். இதயமற்றவர்களுக்கு எப்படி உயிர் இருக்கும்? ஆக கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது கணக்கு சரியாகத்தான் வருகிறது. கணக்கில் நிரூபணம்தானே முக்கியம். அந்த நிரூபணம் சரியாகப் பொருந்துகிறது.
            அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்று மனித உடலில் எலும்பு தோன்றிய போதே அதை பிறர்க்கு வழங்கும் அன்பும் தோன்றி விட்டது என்பார் வள்ளுவர்.
            என்போடு கூடப் பிறந்தது அன்பு. அன்பே மானிடத்தின் மரபு. அன்பே ரத்தத்தில் கலந்த உறவு.
            மேகத்தின் வழியது மழை.
            அருவிகளின் வழியது நதி.
            சூரியனின் வழியது வெயில்.
            மலரின் வழியது நறுமணம்.
            ஒலியின் வழியது இசை.
            ரசனையின் வழியது கவிதை.
            பசுமையின் வழியது வளமை.
            உழவின் வழியது உலகம்.
            கனவின் வழியது லட்சியம்.
            உழைப்பின் வழியது உயர்வு.
            உண்மையின் வழியது வாய்மை.
            அது போலவே,
            அன்பின் வழியது உயிர்நிலை.
            அன்பே உயிர்களின் இருப்பு. அன்பே உடலில் இருக்கும் உயிருக்குப் பொறுப்பு.
            அன்பின் வழியது உயிர்நிலை அஃதில்லார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு என்கிறார் வள்ளுவர்.
            அது சரிதானே!
            எலும்பும், தோலும் போர்த்திய உடல் இருக்க வேண்டிய இடம் சவப்பெட்டிதானே. சவப்பெட்டியில் இருப்பதற்கு ஏது உயிர்நிலை? அது உயிர் உறைந்த நிலை.
            உயிரை உறையாமல், உயிர்ப்பை மறையாமல் வைத்திருப்பது அன்பே.
            அன்பின் வழியே உயிர் இருக்கிறது.
            அன்பை நம்பியே உயிர் இருக்கிறது.
            ஒவ்வொருவரும் யாரோ ஒருவருக்காக அன்பைக் காட்டுவதற்கும், கொடுப்பதற்கும்தான் உயிரைப் பிடித்துக் கொண்டு இருக்கிறோம்.
            அன்புக்காகவே அவமதிப்புகளைச் சகித்துக் கொண்டும், அவமானங்களைப் பொறுத்துக் கொண்டும் உயிர் இருக்கிறது.
            அன்புக்காகவே உயிர் கொண்டு வாழ்கின்றன உயிர்கள். தங்கள் உயிரை எப்படி மாய்த்துக் கொள்வது என்பது தெரிந்தும், மற்ற உயிர்களை எப்படி மாய்ப்பது என்பது அறிந்தும் அன்புக்காகவே உயிர்கள் தம் உயிரைத் தாமே போக்காமலும், பிற உயிரைத் தாமும் போக்காமலும் வாழ்கின்றன.
            அன்பே உயிர்ப்பின் சக்தி. அன்பே வாழ்தலின் சக்தி.
            பூமி அவ்வகையில் அன்புக்கோளம்.
            நீரும் காற்றும் இருப்பதால், அதன் காரணமாக உயிர்களும் இருப்பதால் பூமியை உயிர்க்கோளம் என்பர் அறிவியலாளர்கள்.
            உயிர்கள் இருக்க அன்பு காரணமாக இருப்பதால், பூமியை அன்புக் கோளம் என்பதில் பிழையேதும் உண்டா என்ன!
            அன்பை எப்படி உயர்த்திச் சொன்னாலும் அது அன்பின் மீது கொண்ட அன்புதான்.
            அன்புக்காக எதையும் உயர்த்திப் பிடிக்கலாம். அன்பையும் உயர்த்திப் பிடிக்கலாம்.
            உலகை உயர்த்திப் பிடிக்க, உயிர்களை இருப்பில் இருத்த அன்பே ஆதாரம்.
            ஆதரவற்றத் தன்மை ஆறுதல் கொள்ளவும், அனாதியாகும் தன்மை மாறுதல் கொள்ளவும் அன்பே பரிகாரம்.
            அன்பின் வழியது உயிர்நிலை. அன்பின் வழியதே உலக நிலை. அன்பின் வழியதே பிரபஞ்ச நிலை.
            அன்பே இறைநிலை. ஆருயிர்க்கு எல்லாம் அன்பு செய்ய வேண்டும் என்றுதானே கேட்கிறது அதுவும்.
            ஆக அன்பே உலகின் திட நிலை, திரவ நிலை, வாயு நிலை என எல்லா நிலையும். இந்த நிலைகளுக்கு எல்லாம் காரணம் அணுக்களின் பிணைப்பே என்பார் அறிவியலாளர்கள். அணுக்களின் அன்பே என்று சொல்லினும் என்ன பிழை வந்து விடப் போகிறது!
            காணும் நிலையெல்லாம் அன்பு நிலையே. காணாத நிலை எனப்படும் ஞான நிலை, மோன நிலை, பேரின்ப நிலை என்பனவும் அன்பு நிலையே.
            யாவும் அன்பே நிலை என்பதால் அன்பே நிலை ஆனதும் என்பதும் ஆம்.
            அன்பே இந்நிலை, அந்நிலை, எந்நிலையும்.
            அன்பாலே உயிர்கள் இருக்கின்றன. உயிர்களில் உயிர்ப்பு இருக்கின்றது.
            அன்பற்றது சடம். அன்பற்றது விடம்.
            அன்பே உயிர். அகில உலகும் காக்கும் பயிர்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...