17 Mar 2018

கவனித்தல் ஒரு புதிய அவதானிப்பு


கவனித்தல் ஒரு புதிய அவதானிப்பு
            மெதுவாகச் செய்யலாம். மெதுவாக எழுதலாம்.
            வேகமாகக் கிறுக்கலாகக் கூட எழுதலாம். நல்ல கவிதைகள் அப்போது பிறக்க வாய்ப்பு இருக்கிறது.
            காரணமற்ற வேகத்தால் விளைவுதுதானே தேவையற்ற மனக்குழப்பங்கள் என்று எதையும் விலக்க வேண்டாம். வாசிப்பவர்களைக் குழப்பும் கலக்கலான கவிதைகளை அப்போது எழுதி முடிக்க முடியும்.
            எது குறித்தும் கருத்து கொள்ள வேண்டியதில்லை. ஆனால், எல்லா கருத்துகளையும் குறித்துக் கொள்ள வேண்டும்.
            நிதானப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினால் அப்படியும் செய்யலாம். ஓய்வு கொள்ள வேண்டும் என்று தோன்றி வேலை செய்யலாம் என்று முரண்பாடாகத் தோன்றினால் அதுவும் நல்லது.
            மனித இயந்திரம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்வது முக்கியம். இது போன்ற குழப்பங்கள், முரண்களின் போது அது புதுப்பித்துக் கொள்கிறது. அதற்கு அது ஒரு வாய்ப்பு.
            ஆனால் ஒரு விசயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதர் இயந்திரம் அல்லர். உயிர்ப்போடு செயல்பட வேண்டியவர்கள் மனிதர்கள். அந்த உயிர்ப்பை அவர்கள் குழப்பங்களின் உச்சத்தில், முரண்களின் எச்சத்தில் அடைய முடியும்.
            நாட்கள் அலுப்பு மிகுந்ததாக கடப்பதாக கவலை கொள்ளாதீர்கள். சந்தோஷப்பட வேண்டிய தருணம் அது. உங்களின் ஆகச் சிறந்த ஓய்வை அப்போதுதான் எடுக்க முடியும். அதன் பின் நீங்கள் ஓய்வே எடுக்க முடியாத நிலை ஏற்படலாம்.
            எதையும் செய்ய உற்சாகம் இல்லாத மனநிலை கிடைப்பது ஆகச் சிறந்தது. அப்படி ஒரு செயலற்ற மனநிலையை நீங்களே நினைத்துக் கொண்டாலும் உருவாக்கிக் கொள்ள முடியாது. புயல் அடிக்கும் போது மரங்கள் வளைவதையும், நெளிவதையும், முறிவதையும் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்களாக மரங்களை வளைப்பதையோ, நெளிப்பதையோ, முறிப்பதையோ செய்து விடாதீர்கள்.
            மேம்போக்காகச் செய்ய வேண்டும் என்று தோன்றினால் அப்படியே செய்யுங்கள். சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று தோன்றினால் அப்படியே செய்யுங்கள். குழப்பிக் கொள்ள எதுவும் இல்லை. குழப்பிக் கொண்டாலும் பிழையில்லை.
            அதிகபட்ச எதிர்பார்ப்போடு செயலாற்ற நினைக்கிறீர்களா? அது அதிகபட்ச செயலற்ற நிலைக்குத் தள்ளுகிறதா? கவலைப்படாதீர்கள். எதிர்பார்ப்புகளைக் கற்பனையில் கண்டு அனுபவிப்பதோடு நீங்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. இப்படிப்பட்ட மகத்தான மனநிலை உங்களைப் போல அபூர்வமாக சிலருக்குத்தான் வாய்க்கிறது.
            உங்களுக்கு இதைப் படிக்கப் படிக்க தலைவலிக்கலாம். இதை வாசிப்பதை நிறுத்தி விட்டு ஓய்வு கொள்ளலாம் என்று தோன்றலாம். உறங்கி எழுங்கள். ஒரு மாற்றம் நிகழும். இதைத் தொடர்ந்து படிப்பதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள்.
            முடியுமானால் வேலைகளை மிதப்படுத்திக் கொள்ளுங்கள். மிதம் என்பது முக்கியம். மிதத்தைக் கடப்பது என்பது வியாதியில் முடியும். அவ்வபோது ஓய்வும் கொள்ளுங்கள். வேலை செய்யப் பழகி அதுவே வழக்கமாகி விடும் அபாயத்திலிருந்து தப்பித்து விடுங்கள்.
            எதிலும் பேய் போல முயலாதீர்கள். அதிலும் அளவு பேணப்படுவது முக்கியம். அளவை மிஞ்சும் பிரச்சனைக்கு ஏன் ஆளாக வேண்டும்? யாரோ போடும் ஒரு தங்கக் காப்புக்காக நுனிக் கொம்பு ஏற முயலாதீர்கள்?
            எதிலும் மிதம் மிக நல்லது. விஞ்சுவதால் என்னவாகப் போகிறது?
            எல்லாரும் விரும்புகின்ற ஒன்றை எப்போதும் செய்ய முடியாது. அது செய்ய முடியாத நிலையில் இருக்கும் உங்கள் தவறு அன்று. விரும்பிய அவரின் தவறு. அவர் அவமதிக்க முயலலாம். அது நல்லது. அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். அப்படியே ஏற்றுக் கொண்ட அதை அவர் பார்க்காமல் இருக்கும் நேரம் பார்த்து வீசி எறிந்து விடுங்கள். அவமதிப்பு கண்டு கொள்ளக் கூடிய அல்லது வைத்துக் கொள்ளக் கூடிய ஒரு பொருள் அன்று. கண்டு கொண்டது போல் காட்டிக் கொண்டு கண்டு கொள்ளாமல் இருந்து விடுங்கள். அப்போதுதான் கூட்டிக் கழித்துப் பார்த்தால் விடை எதுவும் வராது, பூஜ்யமாக இருக்கும்.
            ஒருவரின் பிடிவாதத்திலிருந்து நிறைய தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களின் பிடிவாதம் முக்கியம். பிடிவாதம் அவர்களின் சொத்து போன்றது. அதைப் பாதுகாக்கவே முயல்வார்கள். இவ்விசயத்தில் யாரையும் இளக்க முயலாதீர்கள். பாறையில் நார் உரிக்க முயல வேண்டாம்.
            யாரும் தங்கள் பிடிவாதத்தை விட்டு வெளியே வர விரும்ப மாட்டார்கள். அவர்களை அவர்களின் பிடிவாதத்தோடு அனுமதியுங்கள். அவர்களே ஒரு கட்டத்தில் அதை மறந்து விடுவார்கள். மாறாக அவர்களின் பிடிவாதத்தைக் கரைக்கிறேன் என்று மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்காதீர்கள். அவர்கள் இன்னும் பிடிவாதக்காரர்களாகி விடுவார்கள். அவர்களின் பிடிவாதத்தைத் தளர்த்தச் சொன்னதால் நீங்கள் அவர்களின் எதிரியாகி விடுவீர்கள்.
            திடீரென்று இது எதற்காக என்பீர்கள். ஒருவரின் பிடிவாதத்தில் இவ்வளவு விசயங்களை நீங்கள் கவனிக்கலாம். ஆக இந்த கவனித்தல் அவ்வளவு முக்கியம். அதற்கு இயல்பாக இருப்பது முக்கியம். இயல்பாக இருப்பதற்கு இயல்பாக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது முக்கியம். எதையும் ஏற்றுக் கொண்ட பின் எல்லாவற்றையும் மாற்ற முடிவதை நீங்கள் உணர்வீர்கள். எதைத் தேவையில்லாமல் மாற்ற வேண்டாம் என்பதையும் உணர்வீர்கள்.          
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...