14 Mar 2018

தண்டிக்கக் காத்திருக்கும் அறம்!


குறளதிகாரம் - 8.7 - விகடபாரதி
தண்டிக்கக் காத்திருக்கும் அறம்!
            அன்பு மென்மையானது. அதே நேரத்தில் எலும்பைப் போல வலிமையானது. பிறர் துயர் காணும் இடத்து வலிமையான செயல்களை ஆற்றுவதற்கு அன்பே காரணமாகிறது.
            அன்பில்லை என்றால் இந்த உலகில் உதவிகள் இல்லை.
            அன்பில்லை என்றால் யாரும் எவர் துயரையும் துடைக்கப் போவதில்லை.
            அன்பில்லை என்றால் கசிந்துருகும் மனித நேயம் என்பது இல்லை.
            அன்பில்லை என்றால் அப்படிப்பட்ட ஒரு மனிதரை யாரும் ஏற்பதில்லை. அன்பில்லாத மனிதர் வெறுப்புக்கோ அல்லது தனித்து ஒதுக்குதலுக்கோ ஆளாவார்.
            அன்பே பிணைக்கிறது.
            அன்பின்மை விலக்குகிறது. விலக்கி ஒதுக்கி வைத்து தனிமை எனும் தண்டனைக்கு உள்ளாக்குகிறது.
            தாயையும் பிள்ளையையும் பாசம் எனும் அன்பே இணைக்கிறது.
            உறவுகளை, சுற்றங்களை நேசம் எனும் அன்பே இணைக்கிறது.
            நண்பர்களை நட்பு எனும் அன்பே இணைக்கிறது.
            காதலர்களை காதல் எனும் அன்பே இணைக்கிறது.
            பல மதங்கள், பல இனங்கள், பல சாதிகள், பல மொழிகள், பல குழுக்கள், பல கலாச்சாரங்கள் எல்லாவற்றையும் சகோதரத்துவம் எனும் அன்பே இணைக்கிறது.
            உலகில் எங்கோ ஒரு மூலையில் துயர் உறுபவர்களுக்காக இங்கிருப்பவர் கண்ணீர் சிந்தும் போது அந்த இடத்தில் மனித நேயம் எனும் அன்பு உலகையே ஒன்றாக இணைக்கிறது.
            அன்பு இணைக்கிறது.
            அன்பு பிணைக்கிறது.
            அன்பு ஒன்றுபடுத்துகிறது.
            அன்பு முழுமையாக்குகிறது.
            அன்பிற்குப் பிரிவின்மை தெரியாது.
            அன்பிற்கு வேறுபடுத்துவது தெரியாது.
            அன்பிற்கு ஒரு சார்புத் தன்மை தெரியாது.
            ஆனால்,
            அன்பின்மை பாகுபடுத்துகிறது. பாகுபடுத்துவது எதுவோ அது முடிவில் பாகுபடுத்தப்படும். அதுதான் அதற்கானத் தண்டனை.
            அன்பின்மை வேறுபடுத்துகிறது. வெறுபடுத்துவது எதுவோ அது முடிவில் வேறுபடுத்தப்படும். அதுதான் அதற்கானத் தண்டனை.
            அன்பின்மை தனித்து ஒதுக்குகிறது. தனித்து ஒதுக்குவது எதுவோ அது முடிவில் தனித்து ஒதுக்கப்படும். அதுதான் அதற்கானத் தண்டனை.
            அன்பின்மை விரோதத்தை உருவாக்குகிறது. விரோதத்தை உருவாக்குவது எதுவோ அது முடிவில் விரோதிக்கப்படும். அதுதான் அதற்கானத் தண்டனை.
            அன்பின்மை பிளவுகளை உருவாக்குகிறது. பிளவுகளை உருவாக்குவது எதுவோ அது முடிவில் பிளவுபடுத்தப்படும். அதுதான் அதற்கானத் தண்டனை.
            அன்பின்மை அழிவை உண்டாக்குகிறது. அழிவை உருவாக்குவது எதுவோ அது முடிவில் அழிக்கப்படும். அதுதான் அதற்கானத் தண்டனை.
            இப்படித்தான் அன்பின்மை முடிவில் அதற்கானத் தண்டனையைப் பெறுகிறது. தவறு செய்தது எதுவோ அது முடிவில் அதற்கானத் தண்டனையை அடையும் போது யார் அந்தத் தண்டனையைக் கொடுத்தார்கள் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது?
            அது அப்படித்தானே நிகழ்கிறது.
            யாரும் தண்டிக்காமலே இறுதியில் தவறு புரிந்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அதுதான் விதி என்கிறீர்களா? அதுதான் அறம்.
            வேறுபடுத்துவது எதுவோ அது முடிவில் வேறுபடுத்தப்படும் என்பதுதான் அறம்.
            ஒதுக்குவது எதுவோ, பிளவுபடுத்துவது எதுவோ, அழிவை உண்டாக்குவது எதுவோ, விரோதிப்பது எதுவோ அது முடிவில் ஒதுக்கப்படும், பிளவுபடுத்தப்படும், அழிக்கப்படும், விரோதிக்கப்படும் என்பதுதான் அறம். இந்த விதியை யார் மாற்ற முடியும். மாறாத அந்த விதிதான் அறம்.
            எல்லாவற்றிற்கும் முடிவில் அறம் வந்து நிற்கிறது. அன்பு செய்திருந்தால் தலை வணங்கும் தன்மையோடும், அன்பின்மையை ஆற்றிருந்தால் அதற்கானத் தண்டனையோடும் அறம் காத்திருக்கிறது.
            அறம் தரும் தண்டனையை எவரும் தர முடியாது.
            நரகத்தில் எண்ணெய்க் கொப்பரைகளில் போட்டு வாட்டுவார்கள் என்று சிறு வயதுகளில் கேள்விப்பட்டிருக்கும் தண்டனை போல இருக்குமா அத்தண்டனை என்றால் அதை விட கொடுமையாகவே இருக்கும்.
            வெயில் அடிக்கிறது. மனிதர்க்கும், ஆடு, மாடு போன்ற விலங்குகளுக்கும் எலும்பு இருப்பதால், எலும்பால் ஆன வலிமையானக் கால்களைப் பயன்படுத்தி ஓடிப் போய் நிழல் தேடித் தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.
            வெயில் அவ்வளவு கொடுமையா என்றால்...
            காவிரி ஆற்றை மணல் விரிந்த கோடைக் காலத்தில் குழந்தையோடு கடக்க முயன்ற பெண்ணொருத்தி, மணல் சூடு பொறுக்க முடியாமல் குழந்தையை மணலில் போட்டு குழந்தை மேல் ஏறி நின்றதாக ஒரு செவி வழிக் கதை கூட சொல்லப்படுவது உண்டு அல்லவா.
            கொடுமையில் வெம்மைக்கு நிகரான கொடுமை எதுவும் கிடையாது. தீக்காயங்கள் போல் மோசமான காயம் எதுவும் இல்லை. தீயினால் சுட்டப் புண் உள்ளாற வேண்டும் வள்ளுவரும் ஒரு குறளில் குறிப்பிடுவாரே. மற்றக் காயங்கள் வெளியே ஆறினால் போதும், தீக்காயம் உள்ளாற வேண்டும் என்று அதன் கொடுமை ரணமாக உள்ளிறங்குவதைச் சுட்டுவாரே.
            வெம்மையான பாலை நிலம் மிகக் கொடூரமாகவே தமிழில் காட்சிப்படுத்தப்படுகிறது.
            எலும்பு இருக்கும் உயிர்கள், எலும்பால் ஆன உறுதியான கால்கள் இருப்பதால், வெயிலினின்று நிழல் தேடி தப்பித்துக் கொள்கின்றன.
            எலும்பில்லாத உயிர்களும் இருக்கின்றனவே. குறிப்பாக புழுக்கள். அவைகள் வெயிலில் மாட்டிக் கொண்டால்... எலும்பில்லாததால் வலுவான கால்கள் இல்லாமல், உடலாலே நகர்ந்து நகர்ந்து செல்வதற்குள் வெயில் வாட்டி கொன்றல்லவா விடும். அணு அணுவாகச் சாகும் நரக வேதனை அல்லவா வெயிலின் அக்காய்தல்.
            இப்படி எலும்பில்லாத புழுக்களை வெயில் எப்படி காய்கிறதோ, அது போலவே அன்பு இல்லாதவர்களை அறம் காயுமாம்.
            காய்ச்சிக் கொல்வது, அதாவது வாட்டிக் கொல்வது எவ்வளவு கொடுமை தெரியுமா?
            அதனால்தான் ஆட்டையோ, மாட்டையோ, கோழியையோ, மீனையோ கொன்று விட்டுதான் எண்ணெயில் போட்டுப் பொறிக்கிறோம், அல்லது நெருப்பில் காட்டி வாட்டுகிறோம். உயிரோடு அச்செயலைச் செய்வதில்லை.
            ஆனால் வெயில் உயிரோடு வைத்து அல்லவா எலும்பில்லாத உயிர்களை வருத்துகிறது. அதற்கு சற்றும் குறைவில்லாத அதே அளவில்தான் அன்பில்லாதவைகளை அறம் வருத்துகிறது.
            அன்பில்லாதவர்களை யார் நெருங்கிப் பழகுவார்கள்? அன்பில்லாதவர்களை யார் நெருங்கி உதவி செய்வார்கள்? அன்பில்லாதவர்களை யார் நெருங்கி ஆறுதல் வார்த்தைகள் சொல்வார்கள்? அன்பில்லாதவர்கள் துயர் உற்றால் யார் அதற்காக கண்ணீர் விடுவார்கள்?
            அன்பில்லாதவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள், வெறுக்கப்படுகிறார்கள், மனித குலம் மீது அன்பற்ற அவர்களின் செயல்களுக்காக முடிவில் அவர்கள் தண்டனைக்கும் உள்ளாகிறார்கள். ஒதுக்கி, வெறுத்து முடிவில் யார் தண்டித்தது அவர்களை? அறம்தான்.
            தண்டனைகள் அனைத்துமே அறத்தை மையமாகக் கொண்டே வழங்கப்படுகின்றன. சரியோ? தவறோ? அது சரியா? தவறா? என்பதை அறத்தை மையமாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. முடிவில் தண்டனையைத் தீர்மானிப்பது அறமே. ஆக அறமே தண்டனையை வழங்குகிறது. அறமற்ற தண்டனைகளிலும் அறமே மீண்டெழுந்து அறப்படியான தண்டனையை வழங்குகிறது. அதை புரட்சி என்று வரலாறு பேசும்.
            அன்பே அறத்திற்கான ஆதாரமாக இருக்கிறது. அன்பின்மையைக் காரணம் காட்டியே அறம் அதைச் சேதாரமாக மாற்றுகிறது.
            அன்பே அறம். அறமே அன்பு.
            அன்பிருந்தால் அங்கே அறம் இருக்கும்.
            அறம் இருந்தால் அங்கே அன்பு இருக்கும்.
            அன்பில்லாத இடத்தில் அறம் தண்டனையோடு காத்திருக்கிறது.
            அன்பே அனுசரணை. அன்பின்மை தண்டனை.
            அனுசரணைக்கு உள்ளாகப் போகிறோமா? தண்டனைக்கு உள்ளாகப் போகிறோமோ? என்பது நாம் அன்பு கொள்வதில் இருக்கிறது!
            என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்.
            அன்புடையவர்களை வாழ்த்துவதிலும், அஃது இல்லாதவர்களை வீழ்த்துவதிலும் அறம் காத்திருப்பதுமில்லை, பின்வாங்குவதுமில்லை. தன் கடமையைச் சரியாக செய்கிறது. தன் கடமையைச் சரியாகச் செய்வதுதானே அறம். அதைச் செய்வதால்தான் அது அறம். அறம் அதையேச் செய்கிறது.
*****

No comments:

Post a Comment

அரிசி எந்தக் கடையில் விளைகிறது?

அரிசி எந்தக் கடையில் விளைகிறது? காளையரின் வியர்வை சிந்தி காளைகளின் சாணமும் கோமியமும் விழ ஏர் உழுத நிலத்தை டிராக்டர் கார்பன் புகை உமி...