குறளதிகாரம் - 9.2 - விகடபாரதி
உலக அமைதிக்கான
அடிப்படைக் கோட்பாடு
ஒருவர் பசித்திருக்க
ஒருவர் புசித்திருப்பது முறையா?
குற்றச் செயல்கள்
அங்கிருந்துதானே உருவாகின்றன.
மாளிகையில்
விருந்துகள் நடப்பதும், மாளிகையின் அடிவாரத்தில் பசியால் பலர் படுத்திருப்பதும் சரியானது
ஆகுமா?
தொப்பை வயிறுகளுக்கே
விருந்து, காய்ந்த வயிறுகளுக்கு எல்லாம் பசிதான் என்றால் அது ஏற்புடையது ஆகுமா?
பகிர்ந்து
உண்ணத் தெரியாதவர்கள் வாழும் நாட்டில் மாளிகைகள் என்ன அழகைக் கொடுத்து விடும்?
பகிர்ந்து
உண்பவர்கள் வாழும் நாட்டில் குடிசைகளும் அழகானவை அல்லவா!
மருந்தே ஆயினும்
விருந்தோடு உண் என்பதுதான் உயர்ந்த பண்பாட்டு நெறிமுறை அல்லவா!
அப்படி,
சாவா மருந்தாகிய
அமிர்தமே கிடைக்கிறது என்றாலும், அமிர்தம் கிடைத்து விட்டது என்பதற்காக, அதை ஒளித்து
வைத்து தனியே உண்பதா?
அப்படி உண்ண
நினைப்பதால்தான் இந்த மனித குலம் இழிவை நோக்கி, அழிவை நோக்கித் தள்ளப்படுகிறது.
இந்த உலகில்
பசியால் செத்தவர்களை விட, உண்டுச் செத்தவர்களின் எண்ணிக்கை அப்படித்தான் அதிகரிக்கிறது.
உண்டு எப்படிச்
சாவார்கள்?
உண்ணா விட்டாலும்
சாவார்கள். பகிர்ந்து கொடுக்காமல் தான் மட்டுமே உண்பதனாலும் வியாதி வந்தும் சாவார்கள்.
அப்படி வியாதி வந்துச் செத்தவர்களின் எண்ணிக்கைதான் இந்த உலகில் அதிகம்.
பகிர்ந்து
உண்ணும் போதுதான் அளவு சமன்படுத்தப்படுகிறது. அது உண்பது என்ற அந்த அளவிலேயே சரிகட்டப்பட்டு
விட்டால், ஏழை - பணக்காரர், இல்லாதவர் - இருப்பவர் என்ற வேறுபாடுகள் எழப் போவதிலலை.
சாவா மருந்தாம்
அமிர்தம் என்று இந்த உலகில் எதுவும் இல்லை. எதைத் தின்றாலும் ஒரு கட்டத்தில் சாவை எதிர்கொண்டுதான்
ஆக வேண்டும். ஒருவேளை அப்படிச் சாவா மருந்தாம் அமிர்தம் கிடைத்தாலும் அது அனைவருக்குமான
பகிர்தலுக்கு உரியதே தவிர, தனியொருவர் மட்டும் புசித்தலுக்கு உரியது அல்ல.
அப்படி தனியொருவர்
மட்டும் புசித்து இன்னொருவர் சாவார் என்றால் அது எப்படிச் சாவா மருந்தாகும்?
சாவா மருந்து
என்பது உணவே. அந்த உணவு கிடைக்காமல் எவரும்செத்து விடக் கூடாது என்பதில் வள்ளுவர் மிகுந்த
அக்கறையாக இருக்கிறார். ஆகவே அதை உணவு என்பதை விட அமிர்தம் என்று உயர்வுபடுத்துகிறார்.
பசியால் சாகும் நிலையில் இருக்கும் ஒருவதுக்குக் கிடைக்கும் உணவு அமிர்தம்தானே.
அமிர்தம்
என்ற மிக உயர்ந்த பொருளே பகிர்தலுக்கு உரியதுதான் எனும் போது வேறு பொருள் பற்றி
சொல்ல வேண்டா. அனைத்தும் பகிர்தலுக்கு உரியதே.
பகிரப்பட்டால்தான்
சாவா மருந்து என்று அமிர்தத்தைச் சொல்லலாம். பகிராது போனால் அமிர்தமும் விடமே.
வள்ளுவர்
உணவை எப்படி அமிர்தம் என்று உயர்வு செய்கிறாரோ, அப்படி இப்பகிர்தலை விருந்தோம்பல்
என்று உயர்வு செய்கிறார்.
விருந்தோம்பல்
என்ற சொல் மூலம் தனியுடைமைக்கு எதிரானக் குரலைக் கொடுக்கிறார் வள்ளுவர். அனைத்தும்
பொதுவுடைமையே என்பதை ஆதரிக்கிறார்.
அவரது சொல்லில்
சொல்ல வேண்டுமானால், தனியே தான் மட்டும் அனுபவிப்பது, ருசிப்பது தவறு, கிடைத்திருப்பது
சாவா மருந்தாகிய அமிர்தம் என்றாலும் அனைரும் பங்கிட்டு அனுபவித்து ருசிப்பதே சிறந்தது
என்கிறார். அதை இப்படிச் சொல்கிறார் வள்ளுவர்,
விருந்து
புறத்தா தான் உண்டல் சாவா மருந்து எனினும் வேண்டல் பாற்று அன்று.
உலகம் உண்ண
உண்டிருந்தால் கலகம் ஏன் விளையப் போகிறது? உலக அமைதிக்கான அடிப்படைக் கோட்பாட்டை
இக்குறளிலிருந்து துவங்குகிறார் வள்ளுவர்.
உலகத் தமிழராம்
திருவள்ளுவர் ஓங்கிப் பிடித்த இப்பண்பாட்டுக் குரலே உலகின் தலைசிறந்த தத்துவங்களுக்கு
எல்லாம் தலைமை தாங்கும் தத்துவம். அத்தத்துவத்தைத் தனிமனிதருக்குள் விதைத்து அவரைப்
பொதுவுடைமைச் சிந்தனையை நோக்கித் தள்ளியதே வள்ளுவர் செய்த பண்பாட்டுப் புரட்சி.
பசியோ, கண்ணீரோ,
தேவை ஆறுதலோ, மாறுதலோ பகிர்ந்து கொள்பவர்கள் பக்கத்தில் இருந்தால் உலகம் ஓர் அமுதக்
கலசம்.
*****
No comments:
Post a Comment