ஆயிரம் வாசிப்'பூ'க்கள் மலரட்டும்!
ஆயிரம் பேர் வாழும்
ஒரு கிராமத்தில் ஆயிரத்தெட்டுக் குற்றங்கள் நிகழ்கின்றன. லட்சம் பேர் வாழும் ஒரு நகரத்தில்
சில லட்சம் குற்றங்கள் நிகழ்கின்றன. கோடி பேர் வாழும் மாநகரில் கோடிக் கணக்கான குற்றங்கள்
நிகழ்கின்றன.
படிப்பறிவு பெற்றவர்கள்
அதிகரித்துக் கொண்டு வரும் தலைமுறையில் நாம் வாழ்கிறோம். படிப்பறிவோடு குற்றங்களுக்கான
அறிவும் வளர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் படிப்பறிவு குற்றங்களைக் குறைத்து விட முடியாது.
பாடப்புத்தகத்தைத் தாண்டிய வாசிப்பு அறிவுதான் குற்றங்களைக் குறைக்க முடியும்.
விவேகானந்தர் இதை வேறு
விதமாகக் குறிப்பிடுவார், 'ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது'
என்று.
வாசிக்காத தலைமுறை குற்றங்கள்
நிறைந்த தலைமுறையாகவே திகழ்கிறது. வாசிப்பு தலைமுறை குற்றங்களை முடிவுக்குக் கொண்டு
வருகிறது. மன மாசுக்களை அடையாளம் காட்டி அப்புறப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.
ஒரு புத்தகத்தை வாசிக்காததால்
குற்றவாளிகள் ஆனோர் ஏராளம்.
ஒரு புத்தகத்தை வாசிக்காததால்
திருமண வாழ்வில் பிரிந்தோர் ஏராளம்.
ஒரு புத்தகத்தை வாசிக்காததால்
தற்கொலை செய்து கொண்டோர் ஏராளம்.
ஒரு புத்தகத்தை வாசிக்காததால்
அறியாமையிலே வாழ்ந்து அடிமைகளாய் மடிந்தோர் ஏராளம்.
ஒரு புத்தகத்தை வாசிக்காததால்
ஒரு சிறு விவரம் தெரியாமல் அதற்காக ஆண்டுகளை வீணாக்கியோர் ஏராளம்.
ஒரு புத்தகத்தை வாசிக்கததால்
சண்டையிட்டு சமர் புரிந்து மற்றவர்களையும் வீழ்த்தி, தாமும் வீழ்ந்தவர்கள் ஏராளம்.
ஒரு புத்தகத்தை வாசிக்கததால்
உறவுகளை, நட்புகளை உதாசீனப்படுத்தியவர்கள் ஏராளம்.
இதுவரை மனிதர் வாழ்ந்த
வாழ்வுகள் அனைத்தும் புத்தகங்களாக கண் முன் உலாவிக் கொண்டு இருக்கின்றன. எடுத்து வாசிக்க
நம் கைகளுக்கும், கண்களுக்கும் பழக்கப்படுத்த வேண்டும்.
ஒரு வாசிப்பு வெறும்
வாசிப்பாக முடிந்து விடாது. அது மனதை ரசமாற்றம் செய்கிறது. மனம் மிருகமாய் இருந்தால்
மனிதமாய் மாறுகிறது. மனம் மனிதமாய் இருந்தால் தெய்வமாய் மாறுகிறது.
தான் தன் கண்டுபிடிப்புகளை
எல்லாம் தனக்கு முன் இருந்த சிந்தனையாளர்களின் சிந்தனையிலிருந்து பெற்றதாக நியூட்டன்
குறிப்பிடுகிறார்.
தனக்கு முன் இருந்த
அனைத்து சிந்தனையாளர்களின் புத்தகங்களைப் படித்துப் படித்தே அவர் தனக்கானப் புதிய சிந்தனையைப்
பெற்றிருக்கிறார்.
ஆப்பிள் விழுந்த தற்செயல்
நிகழ்வைக் கண்டுபிடிப்பாய் மாற்ற நியூட்டனுக்குத் துணை புரிந்தது அப்புதியச் சிந்தனையே.
படிக்கப் படிக்கத்தான்
புதிய சிந்தனைகள் பிறக்கின்றன. அதன் பின்னே கட்டுசெட்டான மனம் மாற்று வழியில் யோசிக்கத்
துவங்கிறது.
கண்கள் வாசிக்கத் துவங்கி
விட்டால், மனம் யோசிக்கத் துவங்கி விடும். நல்ல யோசனையின் துவக்கம் புத்தகத்திலிருந்துதான்
துவங்குகிறது.
காந்தியாருக்கு ரஸ்கினின்
நூல்களும், டால்ஸ்டாயின் நூல்களும் வழிகாட்டிகளாக இருந்தன.
லெனினுக்கு சோவியத்
ரஷ்யாவை உருவாக்க மார்க்ஸின் நூல்கள் அடிப்படையாக இருந்தன.
நவ இந்தியாவின் சிற்பி
என்று அழைக்கப்படும் நேருவால் புத்தகம் படிக்காமல் இருக்க முடிந்ததில்லை. சிறைச்சாலையில்
அடைக்கப்பட்ட போதும் அவர் புத்தக வானில் சிறகடிக்கும் சுதந்திரப் பறவையாக இருந்தார்.
பேரறிஞர் அண்ணாவால்
வாசிக்கப்படாத நூல்களே இல்லை எனும் அளவுக்கு அவர் நூல்களை வாசித்தார். அந்த வாசிப்பே
தம்பிகளாய் தமிழ்நாட்டையே கட்டிப் போடும் வசிய ஆற்றலை அவருக்குத் தந்தது.
இந்தப் பூமியில் ஆயிரம்
பூக்கள் மலர்ந்தாலும் அவைகளெல்லாம் வாசிப்'பூ' எனும் ஒற்றைப் பூவுக்கு ஈடாகி விட முடியாது.
எந்த பூவும் பூத்த பின்
வாடி விடும். வாசிப்'பூ' என்ற ஒற்றைப் பூதான் பூத்த பின்னும் பூத்துக் கொண்டே இருக்கிறது.
பூத்த பின்னும் பூத்து பூத்து வாடாத பூவாக வாசிப்'பூ' இருக்கிறது.
அதனால்தான் வாசப்'பூ'வைச்
சூடியவர்களின் வாழ்க்கை மணக்கிறது. மலர்களால் நிறைந்த பூவனத்தைப் போல் அழகாக இருக்கிறது.
பூ மென்மையானது. அந்தப்
பூவைப் போன்ற மென்மையான மனதையும் வாசிப்'பூ'தான் தருகிறது.
மனிதர் வாழ்வதை அவர்
சுவாசிப்பைக் கொண்டு அடையாளப்படுத்துவது போல், அவர் மனிதராக வாழ்ந்தாரா என்பதை அவரின்
வாசிப்பைக் கொண்டு அடையாளப்படுத்தலாம்.
நிறைய வாசிக்க வாசிக்க
மிருகமாய் வாழ்பவரும் மனிதராக மாறுகிறார். வாசிப்பு குறைய குறைய மனிதராய் வாழ்பவரும்
மிருகமாய் மாறுகிறார்.
நாம் எப்படி மாறப் போகிறோம்?
மனிதராகவா? மிருகமாகவா?
மனிதராக என்றால் வாசிப்போம்.
மிருகமாக என்றால் அப்படி
ஏன் வாழ வேண்டும் என்று யோசிப்போம்.
ஒரு புத்தகம் நமது வாழ்க்கையை
மாற்றும் என்றால், ஏன் ஏதாவது ஒரு பழக்கத்தை விட்டு விட்டு கூட, வாசிப்புப் பழக்கத்தைக்
கை கொள்ளக் கூடாது!
வாசிப்புப் பழக்கம்
அதன் பின் வாழ்க்கையையே மாற்றும். ஏனென்றால் அதுதான் அதன் வழக்கம்.
(08.03.2018 (வியாழன்) அன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
பாண்டுக்குடியில் நடைபெற்ற 'செங்காந்தள் அறிவுத் திருவிழா - மாணவர்களுக்கானப் புத்தக
இயக்கம்' நிகழ்வில் கட்டுரையாற்றியதன் வடிவம்)
*****
அருமை ஐயா! சிறப்பான நிகழ்வு இன்று.. கலக்கீட்டிங்க...
ReplyDeleteசிறப்பான நிகழ்வுதான் தாங்கள் கலந்து கொண்டதால்! நன்றி ஐயா!
Delete