4 Mar 2018

நினைத்ததை முடிப்பது எப்படி?


நினைத்ததை முடிப்பது எப்படி?
            நினைத்ததை முடிப்பது எப்படி? என்று எழுதுவதற்கு எஸ்.கே. எப்போதும் விருப்பமாக இருந்தான். எழுதுவதற்கான கால சமயச் சந்தர்ப்பம் இப்போதுதான் வந்து இருக்கிறது. இனி அவன் எழுதுகிறான்,...,....,
            எதுவும் வரவில்லையென்று என்று இருந்து விடாதீர்கள். வர வைப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்.
            நாமும் பிடிவாதமாக இருந்து விடக் கூடாது. எது எங்கே பிரச்சனையாக இருக்கிறது என்றால் ஆராய்ந்து பார்ப்பதுதான். எந்த வழிமுறையையும் சிறு சிறு பகுதிகளாக்கிச் சிறுகச் சிறுகச் செயல்படுத்த வேண்டும். மிகப் பெரிய வழிமுறைகள் எப்போதும் ஆபத்துதான். குழப்பத்தை ஏற்படுத்தி விடும். மிகப் பெரிய வழிமுறையின் மிகச் சிறிய தவறு வழிமுறையையே காலாவதியாக்கி விடும்.
            செய்வதா? வேண்டாமா? என்பது எப்போதும் நம் முன் நிற்கும் மிகப் பெரும் கேள்வி.
            எந்த விசயத்துக்கு எப்படி முடிவு எடுப்பது? எப்படி முடிவு கட்டுவது? என்பதும் நாம் அடிக்கடிப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கும் சங்கதிகள். இந்தக் குழப்பங்களும் கூட மிகவும் நல்லன. எல்லாவற்றிலும் இருக்கும் நல்லது இதிலும் ஒளிந்திருக்கும். ஆம்! எல்லாம் ஒரு நிலை. எல்லா நிலையும் வந்து வந்து மாறிப் போகும். மாறி மாறி வரும். இதில் பிரச்சனை என்றால் அது இயக்கத்தில் இருக்கிறது என்பது புரியாமல் நிலைநிறுத்தி விடுவதுதான். நீங்களாக எதையும் நிறுத்தாதீர்கள். ஓடுபவைகள் ஓடிக் கொண்டு இருக்கும்.
            குழப்பம் என்றால் குழப்பம்தான் முடிவு என்று முடிவு கட்டி விடுவதுதான். அது தானாகவே தெளிவாக மாறும். குழப்பத்தைத் தவிர இனி வேறு வழியில்லை என்று நினைப்பதுதான் குழப்பத்திலேயே வைத்திருக்கும். எதுவும் செய்யாது இருந்தாலே குழப்பம் தெளிவாக மாற்றமடையும். அவரவரர் மனநிலையே அவரவர்க்கு எதிரியாகி விடுவது இப்படித்தான். இப்படித்தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதாகிறது.
            எதுவும் வேண்டாம் என்பது ஒரு நல்ல முடிவு. அதனால் எந்தப் பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை. ஆனால் சில வேண்டும்கள் தவிர்க்க முடியாதவை. அவைகள் அவசியமானவை. அதற்கான முயற்சிகளும் வேண்டும்.
            நீங்கள் குழப்பத்தில் இருக்கலாம். உங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் போகலாம். இதில் தாழ்வுணர்வு கொள்வதற்கு எதுவும் இல்லை. உங்களுடைய பலகீனங்களை நீங்கள் நன்றாகத் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள் என்று இதில் சந்தோசப்படத்தான் நிறைய விசயங்கள் இருக்கின்றன. இதைப் புரிந்து கொள்ளுங்கள். நல்ல முடிவுகளாகவே நீங்கள் எடுப்பீர்கள்.
            உங்களால் எதையும் சாதிக்க முடியவில்லை என்பதும் நல்ல விசயம்தான். உங்களுக்குள் தாழ்வுணர்வு இருக்கிறது என்பதை இதை விட வேறு எப்படிப் புரிந்து கொள்ள முடியும்.
            உங்களால் முடிந்ததை எப்போதும் செய்யுங்கள். மாறுகின்ற அளவு மாறியேத் தீரும். இதில் எதிர்பார்ப்புகளை நுழைத்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள். நிறைவேறவில்லையே என்ற அதிகபட்சமான அளவை எடுத்துக் கொள்வது எப்போதும் சிக்கலுக்கே வழிவகுக்கும்.
            இதுதான் நல்லது. இதுவரை நடந்தது நல்லது. இதனால் நீங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும், ஒவ்வொருவரைப் பற்றியும் சரியாகப் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். இதற்காக எப்போதும் நீங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டவர்கள் ஆகிறீர்கள். இந்த நன்றியுணர்வோடு எப்போதும் இருங்கள். அது இருக்கும் வரை உங்களால் முடியாத காரியம் எதுவுமில்லை. அனைத்தும் உங்களால் முடியும்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...