4 Mar 2018

ஒரு தந்தையின் கனவு!


குறளதிகாரம் - 7.7 - விகடபாரதி
ஒரு தந்தையின் கனவு!
            இன்று கல்வி குழந்தைகளின் உரிமையாகி இருக்கிறது. கல்லாத குழந்தைகள் இல்லாத நிலையை நோக்கி முன்னெடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதை மக்கள் நல அரசாங்கங்கள் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன.
            அரசின் நோக்கங்கள் முதன்மையாக இருந்தாலும் பெற்றோர்கள் மனது வைத்தால்தான் மாற்றம் என்பது நிகழும்.
            பெற்றோர்களில் குறிப்பாக தந்தை அதிக கவனம் வைக்க வேண்டிய அக்கறையான இடம் இது.
            இன்று இரு பாலரும் வேலைக்குச் செல்லும் நிலை இருந்த போதிலும் ஆணாதிக்கம் என்ற வகையில் குடும்பப் பொருளாதாரம் குறித்து முடிவு செய்வதிலும், குடும்பம் சார்ந்த முக்கிய முடிவுகள் எடுப்பதிலும் ஆண்களின் கை ஓங்கி இருப்பது வெளிப்படை.
            பெரும்பான்மையான குடும்பங்களில் ஆண்களின் முடிவுகளை ஒட்டியே பெண்கள் வாழ்கின்றனர்.
            குடும்பத்தின் தலைவனாகவும், ஆணாகவும் இருக்கும் தந்தை தம் பிள்ளைகள் விசயத்தில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவு என்னவென்றால், குடும்பப் பொருளாதாரத்தைக் காரணம் காட்டி கல்வி பயில வேண்டிய வயதில் அவர்களை வேலைக்கு அனுப்பி விடக் கூடாது என்பதுதான்.
            இப்படிப்பட்ட பேராபத்து வள்ளுவர் காலத்திலிருந்து இருந்து வந்திருக்கிறது. இதை நுட்பமாகக் கவனித்த வள்ளுவர்,
            தந்தை தம் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய முதன்மையான நன்மை அல்லது கடமை, கல்விக் கூடத்துக்கு அவர்களை யாவர்க்கும் முதன்மையாகச் செல்லத் தூண்டுவதே ஆகும் என்கிறார்.
            அவையத்து என்று சொல்லப்படும் கல்விக் கூடத்துக்கு அவர்கள் முந்திச் செல்ல வேண்டும், தாமதமாகச் சென்று விடக் கூடாது.
            ஒருவேளை தாமதமாகச் சென்று அதன் காரணமாக ஆசிரியரிடமிருந்து பெறும் அறிவு குறைவுபட்டு விடக் கூடாது அல்லவா!
            எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் என்ற குறளை உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்று என்பதோடு, அவையத்து முந்தியிரச் செய்யாத தந்தைக்கு என்பதையும் இணைத்துச் சொன்னாலும் பிழையில்லைதான் அல்லவா!
            அறியாமைதானே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.
            அந்த அறியாமை கல்வியின்மையால்தானே ஏற்படுகிறது.
            அதைக் களைய வேண்டியதே பெற்றோர்களின் முதன்மையானக் கடமையும், பொறுப்பும் ஆகும்.
            பெற்ற குழந்தைக்குத் தாய் பால் ஊட்டுகிறாள் என்றால், தந்தை அறிவு ஊட்டுவதற்கான வாய்ப்புகளை ஆற்றுப்படுத்துவதில் முதன்மையாகச் செயல்பட வேண்டும்.
            குழந்தையின் ஆர்வத்தை உணர்ந்த மாத்திரத்தில், குழந்தையின் ஆர்வத்துக்கு ஏற்ற அத்தகைய அறிவில் வளர அதற்கேற்ற அவையத்தில் அதாவது பயிற்சிக் கூடத்தில் முந்திச் சென்று அக்குழந்தைப் பயில்வதற்கான ஏற்பாடுகளைத் தந்தை முன்னெடுக்க வேண்டும்.
            கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த சச்சினிலிருந்து, பேட்மிட்டனில் சாதனைப் படைக்கும் சாய்னா நெய்வால், சிந்து வரை அவர்களைப் பயிற்சிக் கூடத்துக்கு, அங்கு பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு எல்லாம் முந்தி அழைத்துச் சென்ற அவரது தந்தை இருப்பர்.
            கற்போர் யாவர்க்கும் முந்திச் சென்று அவையத்துப் பயிற்சி மேற்கொண்டதால் அவர்களும் போட்டிக் களத்தில் முந்திச் சென்று சாதனை படைத்திருப்பர்.
            ஆக,
            தந்தை மகற்கு ஆற்றும் நன்றி,
            யாதெனில்,
            கற்றும் அவையத்து அதாவது கல்விக் கூடம் அல்லது பயிற்சிக் களத்துக்கு,
            அங்கு பயில்வோர் யாவர்க்கும் முந்தி அதாவது தாமதமாக இல்லாமல் முதல் ஆளாக,
            அங்கு இருப்பதற்கான செயல்களைச் செய்ய வேண்டும், அதாவது அதற்கானச் சூழ்நிலைகளை உருவாக்கித் தர வேண்டும்.
            அவர்கள் அவையத்து முந்தி முதன்மையாகச் செல்வதற்கான
            மனரீதியான ஊக்கம்,
            சோர்ந்து போகும் போது சோர்ந்த விடாத உற்சாகம்,
            அதிகாலை எழுப்பி தயார்படுத்தும் பொறுப்பு,
            உரிய ஏற்பாடுகளைச் செய்து தருவதில் காட்டும் அக்கறை,
            போதிய உணவூட்டம், போதிய ஓய்வு, அன்பு, பரிவு, கரிசனம் இவைகளையெல்லாம் தர வேண்டும். குறிப்பாக அவர்கள் அவையத்து முந்திச் செல்வதற்கானச் சரியானச் சூழ்நிலைகளை உருவாக்கித் தருவதில் தந்தை முதன்மையானப் பங்கு ஆற்ற வேண்டும்.
            இப்படி ஒவ்வொரு தந்தையும் இருந்த விட்டால் உலகத்துப் பிள்ளைகள் அனைவரும் அவையத்து முந்தி இருப்பார்கள். அவையத்து முந்தி இருக்கும் பிள்ளைகளால் உலகமும் அறிவில் முந்தி இருக்கும், பண்பாட்டில் முந்தி இருக்கும்.
            அவையத்து முந்தி இருக்கும் பிள்ளைகள் எதிலும் முந்தி இருப்பார்கள்தானே!
            வள்ளுவர் இதன் மூலம் சொல்ல வருவது, அவைக்கு நேரந் தவறாமல் செல்ல வேண்டிய நேரந் தவறாமை எனும் உயரியப் பண்பைத்தான். அப்பண்பு குழந்தைகளுக்கு வளர்வதில் தந்தை முக்கியப் பங்காற்ற வேண்டியவராக இருக்கிறார்.
            காலையில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் - அவர்களை காலைக் கடன்களை முடிக்கச் செய்து, பல் துலக்கச் செய்து, குளிக்கச் செய்து, வீட்டுப் பாடங்களை முடிக்கச் செய்து, சீருடைகளை அணியச் செய்து, புத்தகப் பையை ஒழுங்கு செய்துத் தருவதில் தாயின் பங்கு மட்டும் இல்லை, தந்தையின் பங்கும் இருக்கிறது. தந்தையின் பங்கே இதில் முதன்மையாக இருக்கிறது. அப்படி ஆற்றினால் மட்டுமே அவன் அவையத்தில் முந்தி இருப்பான். இல்லையேல் கால தாமதமாகச் செல்லும் பழக்கத்துக்கு ஆட்பட்டு அறிவைப் பெறுவதில் பின்னடைந்து விடுவான்.
            அவையத்து முந்திச் செல்லும் பண்பை வளர்ப்பதில் தந்தை முதன்மை பங்கு ஆற்றுவதே அவர் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய நன்மை. அப்படிச் செய்தால் அவர்கள் எந்த அவையிலும் முந்தியிருக்கும் நிலையை அவர்களாகவே பெற்று விடுவார்கள்.
            தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் என்கிறார் இதை வள்ளுவர்.
            அவையில் முதல் இருக்கையில் தூக்கிக் கொண்டு அமரச் செய்வது அல்ல இதன் பொருள், அவையில் முதல் ஆளாகச் சென்று சேர்வதற்கானப் பக்கத் துணையாக தந்தை இருக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.
            பெற்றால் மட்டும் போதுமா? பிள்ளைகள் முதன்மை இடத்தைப் பெற்றால்தான் பெற்றதற்கானப் பயனை அடைய முடியும். அதற்கு அவர்கள் அவையில் முந்தி இருக்க வேண்டும். அவர்கள் போட்டி அவையில் முந்தி இருக்க அவர்கள் பயிற்சி அவைக்கு முந்திச் சென்று சேர்ந்து, பயிற்சிகளைப் பெற்றிருக்க வேண்டும். அதற்கு தந்தைப் பக்கத் துணையாக இருந்திருக்க வேண்டும்.
            ஒரு குழந்தை கல்வி கற்கவில்லை என்றாலோ, கல்வியில் பின்தங்கி இருக்கிறது என்றாலோ அதற்கான முழு பொறுப்பையும் வள்ளுவர் தந்தையின் தலையில் கட்டுகிறார். பிள்ளையின் தலையெழுத்துக்குத் தலைமகனாய் தந்தையை நிர்ணயிக்கிறார் வள்ளுவர்.
            தந்தை மகற்கு ஆற்றும் நன்றி என்பதால் தந்தை இவ்விசயத்தில் நன்மையைத்தான் செய்ய வேண்டும் என்பது மிகுந்த கவனத்துக்கு உரியது. குழந்தைகள் விரும்பும் கல்வியைக் கொடுத்தால்தான் அது நன்மை செய்வதாக இருக்க முடியும்.
            குழந்தை விளையாட்டுக் கல்வியை (கிரிக்கெட், கபாடி, சதுரங்கம், பேட்மிட்டன்,.... என்று இப்படி) விரும்புகிறது என்றால் அக்குழந்தைக்கு அக்கல்வியே அதற்கு நன்றி அதாவது நன்மை.
            குழந்தை கலைக் கல்வியை (பாட்டு, நடனம், இசை, கவிதை, ஓவியம்,... இப்படி) விரும்புகிறது என்றால் அக்குழந்தைக்கு அக்கல்வியே அதற்கு நன்றி அதாவது நன்மை.
            குழந்தை அறிவியலையோ, மருத்துவத்‍தையோ, அல்லது இது போன்ற இன்ன பிற குறிப்பிட்ட ஒரு துறை சார்ந்த கல்வியை அதிகம் விரும்புகிறது என்றால் அக்குழந்தைக்கு அத்துறை சார்ந்த கல்வியே அதற்கு நன்றி அதாவது நன்மை.
            இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் கல்வி என்பது பாடநூல் கல்வி என்று குறுக்கி விடாதப் பரந்த அறிவும், பரந்த மனப்பான்மையும் தந்தைக்கு வேண்டும்.
            சச்சின் டெண்டுல்கரை ஸ்டேட் பர்ஸ்ட் மாணவன் ஆக்குகிறேன் என்று முயலாமல், இராமானுஜத்தை ஆங்கிலப் பாடத்தில் தேர்ச்சிப் பெற வைக்கிறேன் பார் என்று முயலாமல், விஸ்வநாதன் ஆனந்தை அறிவியல் அறிஞராக மாற்றுகிறேன் என்று முயலாமல் குழந்தைகள் விரும்பும் கல்வியை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
            குழந்தைகள் விரும்பும் கல்வியே தந்தை மகற்று ஆற்றும் நன்றி. அவர்கள் விரும்பாத கல்வியை அளிப்பது தந்தை மகற்கு ஆற்றும் தீமை.
            பாடகர் ஆக வேண்டிய குழந்தையை மருத்துவராக ஆற்ற நினைப்பது தந்தை மகற்கு ஆற்றும் தீமையன்றி வேறென்ன?
            இசையமைப்பாளர் ஆக வேண்டிய குழந்தையைப் பொறியாளாராக ஆக்க நினைப்பது தந்தை மகற்கு ஆற்றும் கொடுமையன்றி வெறென்ன?
            ஆக, தந்தை மகற்று ஆற்றுவது நன்றி என்பது முக்கியம். அந்நன்றி அவர்கள் பயிற்சி பெறும் அவையத்து முந்திச் சென்று விடுவது வரை இருக்க வேண்டும். அதாவது மனதில் கற்பனைக் கோட்டைக் கட்டுவதாக மட்டும் அமைந்த விடாமல், செயலிலும் அது வெளிப்பட வேண்டும்.
            தம் குழந்தை மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்று கனவு காண்பதினும் அதற்கான பயிற்சிக் களத்துக்கு அக்குழந்தையை தானே விரும்பி முந்திச் செல்லும் வகையில் ஆற்றுப்படுத்துவது அதி முக்கியம் அல்லவா!
            தந்தை மகற்று ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். ஆம்! முந்தி இருக்கும் ஒவ்வொரு குழந்தையின் வெற்றியிலும் ஒரு தந்தையின் கனவு இருக்கிறது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...