23 Mar 2018

வானின் விருந்தாளிகள் ஆவோமா?


குறளதிகாரம் - 9.6 - விகடபாரதி
வானின் விருந்தாளிகள் ஆவோமா?
            விருந்தினர்களை ஓம்புதல் தமிழர் பண்பாடு. உலகின் தலைசிறந்த பண்பாடு அதுவே.
            அப்படி விருந்தினர்களை ஓம்பிய பின் மீண்டும் எப்போது விருந்தினர்கள் வருவார்கள் என்று பார்த்திருப்பதே விருந்தோம்பலின் உண்மையான மனப்பான்மையாகும்.
            அப்படிப்பட்ட மனப்பான்மையால்தான் விருந்தோம்பும் நாம், வானிற்கு நல்ல விருந்தாக அமைகிறோம்.
            வானம் எப்படி நமக்கு விருந்தோம்ப முடியும் என்ற கேட்கலாம்.
            பயிர்கள் பச்சையத்தின் உதவியால் உணவு தயாரிக்கத் தேவையான சூரிய ஒளி வானில் இருக்கும் சூரியனின் விருந்தோம்பல். அதாவது வானின் விருந்தோம்பல்.
            பயிர்கள் முளை விடத் தேவையான மழை நீர் வானில் இருக்கும் மேகத்தின் விருந்தோம்பல். அதாவது வானின் விருந்தோம்பல்.
            வானில் இருக்கும் மேகம் விருந்தோம்பினால்தான் புல் கூட பூமியில் முளைக்கும். வானில் இருக்கும் சூரிய ஒளி விருந்தோம்பினால்தான் புல் கூட உணவு தயாரிக்க முடியும்.
            வான்மழைப் பொய்த்தால் நெடுங்கடலும் வறண்ட பாலையாகும் என்றால், கடலற்ற நிலம் என்னவாகும்? அப்படிப் பாலையான நிலத்தில் ஏர் பிடித்தோ அல்லது டிராக்டர் ஏறியோ எந்த உழவர் உழுவர்?
            சூரிய ஒளி இல்லாது போனால் இருளில் மூழ்கிய உலகில் தாவரங்கள் எப்படி உணவு தயாரிக்கும்? தாவரங்கள் உணவு தயாரிக்கா விட்டால் இந்த உலகில் மனிதர்கள் உட்பட விலங்குகள் எப்படி வாழும்?
            நாம்  உட்பட உலக உயிர்களுக்கு இப்படித்தான் வான் விருந்தோம்புகிறது.
            இப்படி வான் மூலமாக நாம் விருந்தோம்பலால் பெற்ற உணவை நாமும் விருந்தோம்ப வேண்டும். நாம் விருந்தோம்புவது சிறக்கும் போது வானும் நம்மை நல்விருந்தினர்களாக ஏற்று விருந்தோம்பும்.
            உணவுச் சங்கிலி போல,
            ஆற்றல் சுழற்சி போல
            இது விருந்தோம்பல் சங்கிலி எனலாம், விருந்தோம்பல் சுழற்சி என்றும் சொல்லலாம்.
            ஒரு வகையில் பார்த்தால் வான் நமக்கு விருந்தோம்பியதை நாம் விருந்தோம்புகிறோம். இடையில் நாம் ஒரு கருவியாகவே இருக்கிறோம்.
            இதைத்தான் வள்ளுவர்,
            செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் நல்விருந்த வானத் தவர்க்கு என்கிறார்.
            விருந்தோம்பல் பெற்றுச் செல்கின்ற விருந்தினர்களைப் பார்த்து, இனி விருந்தினர்கள் வர நேரமாகுமோ என்ற ஏக்கப் பெரு மூச்சோடு வாசல் பார்த்துக் காத்து நிற்பவர்களைப் பார்க்கும் போது, வானம் தானும் அவர்களைப் போல விருந்தோம்ப வேண்டுமே என்று வான்மழைப் பொழிந்து, சூரிய ஒளியை அனுப்பி பயிர்களை விளைவித்துத் தரும்.
            விளைவித்தப் பயிர்களை நாம் விருந்தோம்ப வேண்டும். அப்படி விருந்தோம்பினால் அப்பயிர்களை விளைவிக்க வானம் மழையாய், ஒளியாய் விருந்தோம்பும்.
            அதாவது,
            நாம் நம் மனிதர்களுக்கு நல்விருந்தானால் வானுக்கு நாம் நல்விருந்தாவோம்!
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...