7 Mar 2018

முந்தியா? பிந்தியா? பிள்ளைகளின் விருப்பம்!


குறளதிகாரம் - 7.10 - விகடபாரதி
முந்தியா? பிந்தியா? பிள்ளைகளின் விருப்பம்!
            அந்திமக் காலத்தில் பெற்றவர்களை அனாதைகளைப் போல முதியோர் இல்லத்தில் சேர்க்கும் இந்தக் கால கட்டத்தில்,
            பிள்ளைகள் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய உதவி என்னவென்று கேட்டால்...
            பெற்றெடுத்தவர்களை அந்திமக் காலத்தில் தங்கள் பிள்ளைகள் போல் பேணுவதுதான் ஒவ்வொரு பிள்ளையும் செய்ய வேண்டிய உதவி என்று பொட்டில் அடித்தாற் போல் சொல்லி விடலாம்.
            இது இந்தக் காலக் கட்டம்.
            வள்ளுவரின் காலக் கட்டம் வேறாக இருந்திருக்கிறது.
            பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும்,
            அன்பில், பண்பில் நிறைந்திருக்க வேண்டும்,
            சமூக விழுமம் அறிந்திருக்க வேண்டும்,
            மனித நேயம் புரிந்திருக்க‍ வேண்டும்,
            தம்மைப் பேணியவர்களைத் தாம் பேணத் தேரிந்திருக்க வேண்டும்,
            இவைகள் அனைத்தும் பொதிந்த சான்றோராக அவையத்து முன்மாதிரியாக முந்தியிருந்து, அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதாக இருந்திருக்கிறது.
            இன்றைய பிள்ளைகளோ கருவறையில் இடம் தந்த தாய்க்கு, வீட்டில் சிறு அறை கூட இல்லை என்று முதியோர் இல்லத்தில் விடுவதிலும், அனாதையாய் அலைய விடுவதிலும் முன்மாதிரியாக இருக்கிறார்கள்.
            இந்த உலகமே ஒரு நாடக மேடை என உருவகப்படுத்துவார் ‍ஷேக்ஸ்பியர்.
            வள்ளுவர் இந்த உலகை ஓர் அவையாக உருவகப்படுத்துகிறார்.
            இந்த உலகம் எனும் அவைக்கு, அனைவருக்கும் முன்மாதிரியாக பிள்ளைகள் முந்தியிருக்க வேண்டும்.
            நல்ல வழிகாட்டிகள் இல்லாத சமூகம் வழி தவறிப் போகிறது. அப்படித்  தானும் வழி தவறிப் போகாமல், தன் சமூகமும் வழிதவறிப் போக விடாமல், தன் சமூகத்துக்கு வழிகாட்டியாக இருப்பதே பிள்ளைகள் பெற்றோர்களுக்குச் செலுத்தும் காணிக்கையாகும்.
            அறிவுரைகளுக்குப் பஞ்சம் இல்லாத இந்த உலகில் நல்ல முன்மாதிரிகளுக்கும், வழிகாட்டிகளுக்கும் பெரும் பஞ்சம் நிலவுகிறது.
            நேர்மையான அரசியல்வாதி,
            அப்பழுக்கில்லாதத் தூய்மையானத் தலைவர்,
            ஊருக்கு உழைக்கும் உத்தமர்,
            என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற கொள்கைப் பிடிப்புள்ள பொதுத்துறை ஊழியர்கள்,
            அறம் பொருந்திய மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள்,
            இன்னும் குறிப்பாக நோட்டு வாங்காது ஓட்டுப் போடும் நல்ல குடிமகன் - என்பன போன்ற இவைகளுக்கு எல்லாம் வாழ்ந்து முடித்தவர்களையே நாம் உதாரணம் காட்ட வேண்டியுள்ளது. உயிருள்ள உதாரணங்கள் வெகு அரிதாக இருக்கிறது.
            மனிதர் பிறக்கும் போது அழுகின்றார் என்றால், அவர் இறக்கும் போது உலகமே அழ வேண்டும், இப்படி ஒரு சான்றோரை இழந்து விட்டோமே என்று. நம் சாபக்கேடு பாருங்கள்! இறப்பிலும் மர்மம் பொதிந்த தலைவர்கள்தான் கிடைத்திருக்கிறார்கள்.
            வள்ளுவர் காலக் கட்டத்தில் பிள்ளைகள் அப்படித்தான் வாழ்ந்தார்கள் போலும், இப்பிள்ளையைப் பெற இப்பெற்றோர்கள் என்ன தவம் செய்தனரோ என்று ஏங்கும் அளவுக்கு.
            அப்புறம் அந்நிலை அருகிப் போய்,
            காமராசர் காலக் கட்டம் வரை கூட அப்படி ஒரு நிலை நீடித்திருத்திருக்கிறது, இந்தக் கர்ம வீரரைப் பெற அப்பெற்றோர் என்ன தவம் செய்தனரோ என்று.
            அதன் பிறகு அந்நிலை மென்மேலும் அருகிப் போய்,
            ஏன் அப்துல் கலாம் காலக் கட்டம் வரை அப்படி ஒரு நிலை நீடித்திருக்கிறது, இந்த அறிவு ஞானியைப் பெற அப்பெற்றோர் என்ன தவம் செய்தனரோ என்று.
            இனி வரும் காலக் கட்டம் எப்படி இருக்குமோ?
            எப்படி இருந்தாலும்,
            இப்படியொரு பிள்ளையைப் பெற இப்பிள்ளையின் பெற்றோர்கள் என்ன சாபம் எய்தினரோ என்றபடி மட்டும் ஆகி விடக் கூடாது.
            பிள்ளைகள் பெற்றோர்களால் தவம் இருந்து பெறப்பட்டவர்கள் என்று உலகம் சொல்லும் படியாக, பிள்ளைகள் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொண்டால்தான் பிள்ளைகள் பெற்றோர்களுக்கு வரம். இல்லையென்றால் சந்தேகமேயில்லாமல் சாபம்தான்.
            பிள்ளைகள் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை வைத்துதான் பெற்றோர்களின் புகழ் இந்த உலகில் வரவு வைக்கப்படுகிறது.
            வள்ளுவர் இதை,
            மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல் என்கிறார்.
            அந்த சொல்தான் பிள்ளைகளைப் பெற்றதற்கானப் பெற்றோர்களின் பிறவிப் பயன்.
            அந்தப் பிறவிப் பயனைப் பெற்றோர்களுக்கு அளிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை.
            பெற்றவர்களை அனாதைகளாய்த் திரிய விடும் பிள்ளைகளும்,
            முதியோர் இல்லத்தில் பெற்றவர்களைத் தனிமையில் தவிக்க விடும் பிள்ளைகளும்,
            மேலை நாட்டு மோகத்தால் பெற்றோர்களைச் சொந்த நாட்டிலே அகதியாய் விட்டு விட்டு ஓடும் பிள்ளைகளும்
            அநேகமாக என் நோற்றான் கொல் எனும் சொல் என்ற கடமையை ஆற்ற முடியாது. உம்மைப் பெற்றெடுத்ததற்கு உம் கையாலே கொல் என்று பெற்றவர்களே சொல்லும் கொடுமையை வேண்டுமானால் ஆற்றலாம்.
            ஒரு பிள்ளையாய் கடமையை ஆற்றுவதா? கொடுமையை ஆற்றுவதா? என்பது அவரவர்கள் நடத்தையே தீர்மானிக்கிறது.
            என் நோற்றான் கொல் என்று உலகம் சொல்வதா?
            என்னைக் கொல் என்று பெற்றோர் சொல்வதா?
            எது வேண்டும் பிள்ளைகளே? பிள்ளைகளுக்குப் பிடித்ததைப் பிள்ளைகளே தெர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்!
            ஆம்! மனிதராய்ப் பிறந்து அவையத்துச் சான்றோராய் முந்தியிருப்பதோ அல்லது மனிதராய்ப் பிறந்து மிருகமாய் பரிணாமத்தில் பிந்தியிருப்பதோ அவரவர் தேர்வு. முந்தியிருப்பது சரியானத் தீர்வு. பிந்தியிருப்பது சீர்குலைவு.
            அது சரி! மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல் என்றால்,
            மகள் தந்தைக்கு ஆற்றும் உதவியில் வள்ளுவருக்கு ஐயம் இல்லை போலும். மகனில்தான் ஐயம் எழுகிறது போலும். அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை இந்த ஒரு விசயம் மட்டும் மாறாது இருந்து வருகிறது போலும்.
            மேலும்,
            தாய்மை எல்லாருக்கும் உதவி செய்யும், தாய்மை எந்த உதவியையும் ஏற்காது என்பதால், மகன் தாய்க்கு ஆற்றும் உதவிப் பற்றி வள்ளுவர் சொல்லாமல் போனார் போலும். ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் என்பதைக் கேட்க விழையும் தாய் ஈனப் பிறவிகளிடம் என்ன உதவியை எதிர்பார்த்து விடப் போகிறாள்?
*****

No comments:

Post a Comment