குழப்பம் தீர்வதற்கான சில வழிமுறைகள்
ஒன்றிற்கான முன் முயற்சிகளை எடுப்பதா?
வேண்டாமா? அதற்கானத் தேவையும், அவசியமும் மனதில் தோன்றும் போது எந்த முயற்சியும்
இல்லாமல் அதற்கான முயற்சிகளை தன்னையும் அறியாமல் எஸ்.கே. செய்து கொண்டிருப்பான். ஆதலால்
எஸ்.கே. உட்பட யாரும் தேவையில்லாமல் இதைச் செய்வதா? அதைச் செய்வதா? என்று குழப்பிக்
கொண்டிருக்க வேண்டாம்.
முடிவு எடுப்பதில் மிகு குழப்பம் என்றால்
அதை அப்போது செய்யாமல் இருப்பதுதான் நல்லது. மனதும் அதற்கு ஏற்ற மாதிரி இடைப்பட்டக்
காலத்தில் கொஞ்சம் பக்குவப்படும்.
உடனே எதையும் தொடங்க வேண்டியதில்லை. மனம்
தயாராகும் வரை காத்திருந்து தொடங்குவதே நல்லது.
பொதுவாக புதிய முயற்சிகளுக்கு யாரும்
கை கொடுப்பது அரிது. அப்படியே கை கொடுத்தாலும் அதை ஏற்று ஒருங்கிணைக்கும் திறன் வேண்டும்.
இவையெல்லாம் முழுக்க முழுக்க அவரவரே செய்ய வேண்டிய விசயமாக இருப்பதால் அவசரப்படாமல்
இருப்பது நல்லது.
இது குறித்து மனச்சோர்வு உறுவது ஏற்றதில்லை.
இது ஒரு நிலை. மற்றபடி இது குறித்து ஆராய ஒன்றுமில்லை. பொறுமையாக இருந்தாலே இந்நிலையை
எதிர்கொண்டு விடலாம். இது போன்று சில நேரங்களில் ஏற்படத்தான் செய்யும்.
சுற்றியிருப்பவர்கள் மனச்சோர்வை ஏற்படுத்தி
விடுவதில் கில்லாடிகளாக இருக்கலாம். மனச்சோர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் அவர்கள்
வெற்றியும் பெறலாம். அவர்களின் அந்த வெற்றியை உங்களின் தோல்வியாக ஏற்றுக் கொள்வதில்தான்
உங்களுக்கான வெற்றி அடங்கி இருக்கிறது. நீங்கள் ஏற்றுக் கொண்ட பிறகு அது உங்கள் மனதில்
நீண்ட காலம் தங்கி அதனால் வாதம் புரிய முடியாது. அதன் பின் அதை உங்களால் அலட்சியப்படுத்தத்தான்
முடியுமே தவிர, லட்சியப்படுத்த முடியாது. அப்படித்தான் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள்
இந்த விசயத்தில். பல பிரச்சனைகளுக்கு எஸ்.கே.யின் அஸ்திரமும் இதுதான்.
இனி வரும் காலத்தில் ஒரு சில விசயங்களில்
மட்டும் கவனம் செலுத்துங்கள். பல விசயங்களில் அவ்விசயங்களே போதுமான கவனத்தை அதுவே
செலுத்திக் கொள்ளும்.
எதிலும் போதுமான வெற்றி கிடைக்கவில்லை
என்று சலிப்புற வேண்டியதில்லை. சில காலம் நிறுத்தி வையுங்கள். ஓய்வு அவசியம் தேவை என்று
அந்தக் காலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்
என்று அவசியமில்லை. மிக வேகமாக சென்று கொண்டிருக்கும் போது இயந்திரம் இயங்காமலே சிறிது
தூரம் சக்கரங்கள் ஓடிக் கொண்டிருக்கும்.
குறைவாகச் செய்ய வேண்டும் என்பது போலத்
தோன்றினால் அப்படியே செய்யுங்கள் எஸ்.கே.வைப் போல. அது பற்றி நிறைய சிந்தியுங்கள்.
உங்களுக்குள் சுய சிந்தனையாக என்னத் தோன்றுகிறதோ,
அதை மட்டும் செய்தால் போதும். அதுதான் உங்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும். இப்படித்தான்
எஸ்.கே. தன் தன்னம்பிக்கையை வளர்த்தக் கொண்டான்.
அது ஒரு புறமாக இருக்கட்டும்.
கீழ்கண்டவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
1. பாலீதீன் பிரச்சனை,
2. உலகம் வெப்பமயமாதல்,
3. வயல்கள் ரியல் எஸ்டேட்களாக ஆதல்,
4. சுற்றுச் சூழல் சீர்கேடு
உங்களுக்கு இன்னும் சற்றுக் கூடுதலானப்
புரிதல் தேவை என்றால்,
1. ஒரு பாலீதீன் கேரி பையில் டீ வாங்கி
வந்து அதை ஒரு பாலீதீன் கப்பில் உங்களுக்குக் கொடுத்தால் எப்படி உணர்வீர்கள்?
2. உங்களுக்கு பனி உருகும் அண்டார்ட்டிகாவில்
ஒரு வீடு ஒதுக்கப்பட்டால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?
3. நீங்கள் வீடு கட்டிய வீட்டு மனையை மீண்டும்
வயலாக ஆக்க வேண்டும் என்று அவசரச் சட்டம் இயற்றப்பட்டால் என்ன செய்வீர்கள்?
4. ஆலைப் புகை நிரம்பிய அறையில் ஆறு நாட்கள்
இருக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி முடிவு எடுப்பீர்கள்?
இப்போது சற்றுப் புரிந்திருக்கும்.
இதெல்லாம், திடீரென எதுக்கு என்கிறீர்களா?
உங்களுக்குத்தான் பிரச்சனை அதிகமாக இருக்கிறது
என்கிறீர்களே? அதற்குத்தான். உங்கள் பிரச்சனைகளை விடப் பெரிய பிரச்சனைகளாக எடுத்துக்
கொண்டால், உங்கள் பிரச்சனை எவ்வளவு சின்னஞ்சிறு புள்ளி என்பது உங்களுக்குப் புரிய
வரும்.
பல நேரங்களில் ஒரு புள்ளி சிறியதா? பெரியதா?
என்பதைக் கண்டறிய பக்கத்தில் இருக்கும் ஒரு பெரிய புள்ளியை ஒப்பிடத்தானே வேண்டியிருக்கிறது.
மனிதர்களில் அவர் பெரிய புள்ளி அல்லது சிறிய புள்ளி என்று சொல்வார்களே, அப்படியா என்கிறீர்களா?
அப்படி எடுத்துக் கொண்டாலும் சரிதான்.
உங்கள் உள்ளுக்குள் இருக்கும் பிரச்சனையைப் பார்க்கும்
அதே நேரத்தில் உங்களுக்கு வெளியே இருக்கும் பிரச்சனைகளையும் பாருங்கள். பிரச்சனையின்
பரிமாணம் புரிந்து விட்டால் அதன் பிறகு அது பிரச்சனையே இல்லை என்பதை உணர்வீர்கள்.
*****
No comments:
Post a Comment