24 Mar 2018

விருது பெறும் தகுதியை வளர்த்துக் கொள்வது எப்படி?


விருது பெறும் தகுதியை வளர்த்துக் கொள்வது எப்படி?
            ரொம்ப நாட்களுக்குப் பிறகு எஸ்.கே. சந்தித்த மோசமான மன உளைச்சலை அன்று எதிர்கொண்டார். எவ்வளவு திட்டமிட்டுப் பழி தீர்த்தல்கள் நிகழ்கின்றன என்பதை உணர முடிந்தது அவரால். அமைதியாக இருப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.
            அவர் கழுத்து அறுக்கப்படுகிறது என்பது தெரிந்தும் அமைதியாக இருக்கிறார். அவர் கழுத்து அறுந்து விழும் வரை அமைதியாகவே இருக்கிறார். இனி அவர் எப்போதும் அமைதியில் இருப்பார்.
            தராசு எந்தப் பக்கம் அடிக்கிறதோ, அந்தப் பக்கம் சாய்ந்து கொள்பவர்கள் இருக்கும் வரையில் அவர் தராசைச் சுமக்க நினைத்ததே தவறு. அல்பத்தனங்கள் நிறைந்த உலகில் உயர்ந்த சிந்தனைகளை ஏந்தி நடப்பது என்பது அம்மணமாய் நடக்கும் தெருவில் கோவணம் கட்டிக் கொண்டு நடப்பது போலாகி விடுகிறது.
            எவ்வளவு கேவலமாகத் திட்டமிட்டு அவரின் கனவுத்திட்டத்தை அவர்கள் உடைத்தார்கள் தெரியுமா? அவர் அதற்கு இணங்கியிருக்கத் தேவையில்லை. ஆனால், இதை மாதிரியாக வைத்துக் கொண்டு வந்து ஒரு வகையில் இல்லை என்றால் இன்னொரு வகையில் உடைக்கவே முயல்வார்கள்.
            நம் அமைப்புகள் நன்மைகளின் பக்கம் நிற்பதை விட, பிரச்சனைகளை அமுக்கவே முயலும். அமுங்கிப் போகுபவர்களை அடக்கிப் பார்ப்பதில் ஆனந்தப்படும். அவரே தன் கனவுத் திட்டத்தைத் தூக்கிப் போட்டு உடைத்து அவர்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொண்டார் இறுதியாக.
            நன்றி! இனிமேல் இதுபோன்ற கனவுத் திட்டம் என்பது போன்றதானத் தவறுகளைக் காலத்துக்கும் செய்ய மாட்டேன் என்று சபதம் ஏற்றுக் கொண்டார்.
            கடுமையான மன உளைச்சல் ஏற்படும் வகையில் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிற அவர்களின் பாதம் நக்குவதால் நாக்கு நேக்குக் குறைந்து விடாது. புரட்டிப் புரட்டிப் பேசுவதற்குத்தானே நாக்கு எனும் சோக்கு.
            யார் மிக மிகக் கீழ்மைத் தனமாக நடந்து கொள்வது என்பதில் ஒரு போட்டியே நிகழ்கிறது.
            பொதுவாகக் கீழ்மைத்தனங்களைப் பொருத்த வரையில், அவரவர்களாகப் புரிந்து கொண்டு விட்டால்தான் உண்டு அல்லவா. ஏனென்றால் ஒருவரது கீழ்மைத் தனத்தை அவருக்குப் புரிய வைப்பது என்பது மிகவும் சிரமம் அல்லவா.
            எஸ்.கே.வைப் பொருத்த வரையில் சமூக நிறுவனத்துக்காக, நிறுவனச் சமூகத்துக்காக என்னென்னவோ நிறையவே செய்கிறார். எந்த வித அங்கீகாரமோ, ஊக்குவிப்போ இதற்காக அவருக்கு வழங்கப்படவில்லை. அது உற்சாகமின்மையை உருவாக்கவும் செய்கிறது.
            திறமையாகச் செயல்படுபவர்களையும் திறனற்றவராக மாற்றிக் கொண்டு இருப்பதில் பொதுமை சார்ந்த நிறுவனங்கள் வெற்றி பெற்று விடுகின்றன.
            செயலூக்கம் இல்லாத,
            சோம்பல்தனம் மிகுந்த,
            கஞ்சத்தனமான,
            காரியத்தனம் மிகுந்த
            தலைமையில் அதுதான் நிகழும்.
            அது போன்ற நிலைமைகளில் நிர்வாகத்தை மாற்றுவது இயலுமோ? தன்னை நிர்வாகத்துக்குத் தகுந்த மாதிரி மாற்றிக் கொள்வது எளிதாகும் அல்லோ!
            அதே நேரத்தில் இவர்கள் செய்வது எஸ்.கே.வின் புரபஸனுக்குப் பிரச்சனையாக இருக்கலாம். அவரின் பெர்சனலுக்கு நல்லதாக அமையலாம். இதுவரை தன் புரபஸனையே நினைத்துக் கொண்டு, தன் பெர்சனலைக் கவனிக்காமல் விட்டதை இப்போதுதான் பார்க்கிறார் எஸ்.கே. தன் பெர்சனலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இனி தானாகவே புரபஸனல் மேல் ஆர்வக் குறைவும், பெர்சனல் மேல் ஆர்வமும் தானாகத் தோன்றி விடும். அப்படித் தோன்ற வைத்து விடுவார்கள் பொதுமை நிறுவனத்தார்கள்.
            இனிமேல் அவர் எதன் மேலும் ஆர்வம் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஏதோ போனோமா, வந்தோமா என இருந்து கொள்வார். எப்போது அவருக்குரிய அங்கீகாரமோ, சுதந்திரமோ அதில் இல்லை என்று ஆனதோ, அப்போதே அதிலிருந்து அவர் விலக்கப்பட்டவரே. அவ்விலக்கப்படலை ஏற்றுக் கொண்ட எஸ்.கே.வே சிறந்த பணியாளராகக் கொண்டாடப்படுவார் என்பதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. நாளை சிறந்த ஊழியருக்கான விருது கூட வழங்கப்படலாம். அது எதையும் கண்டு கொள்ளாததற்கு அவருக்கு வழங்கப்பட்ட கையூட்டு என்று நீங்கள் நகைக்கலாம்.
            உலகம் அதைத்தானே சொல்கிறது. இல்லையேல் மன உளைச்சலை ஏற்படுத்திக் கொல்கிறது.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...