24 Mar 2018

விருந்தோம்பலே வேள்வி!


குறளதிகாரம் - 9.7 - விகடபாரதி
விருந்தோம்பலே வேள்வி!
            ஆழ்கடலின் ஆழத்தை அளவிட முடிந்தாலும் அன்பின் ஆழத்தை அளவிட முடியாது.
            நீல வானின் நீளத்தை கணக்கிட முடிந்தாலும், தாய் நெஞ்சின் நீளத்தை கணக்கிட முடியாது.
            வீசும் காற்றின் வேகத்தைக் அளவிட முடிந்தாலும், மனோ வேகத்தைக் அளவிட முடியாது.
            பிரபஞ்ச விரிவை கணக்கிட முடிந்தாலும், பரந்த மனப்பான்மையின் விரிவைக் கணக்கிட முடியாது.
            இப்படி இப்பேருலகில், பேரண்டத்தில், பெரும் பிரபஞ்சத்தில் அளவிட முடியாதவைகள், கணக்கிட முடியாதவைகள் பலவற்றை அளவிடவும், கணக்கிடவும் முடிந்தாலும் அளவிட முடியாதவைகளும், கணக்கிட முடியாதவைகளும் மனிதர்களின் பரந்த அன்பிலும், பரந்த மனப்பான்மையிலும் இருக்கின்றன.
            பிரபஞ்சம் அளவுக்குள் வந்தாலும், பிரபஞ்சத்தின் வாழும் மனிதரது மனிதம் அளவுக்குள் வராது. அது அளப்பரியது. கணக்கிடதற்கரியது. பிரபஞ்சத்தை விட மனிதம் பெரிதானது, விரிவானது, அரிதானது.
            விருந்தோம்பல் என்பது அம்மனிதத்தின் உச்சபட்ச மனிதம்.
            எல்லா நாடுகளும் விருந்தோம்பினால் உலகில் அகதிகள் இல்லை.
            எல்லா ஊர்களும் விருந்தோம்பினால் நாட்டில் விரோதிகள் இல்லை.
            எல்லா வீடுகளும் விருந்தோம்பினால் ஊரில் கள்வர்கள் இல்லை.
            ஒரு சாண் வயிறு இல்லாட்டா, உலகில் ஏது கலாட்டா?
            எல்லாம் ஒரு சாண் வயிற்றுக்காகத்தானே!
            அதனால்தான் கவிஞர்கள் பசி என்று வந்தவருக்கு புசி என்று உணவு தந்துப் பாரப்பா என்கிறார்கள்.
            உலகின் பெரும் புரட்சிகள் பசியிலிருந்தே வெடிக்கின்றன.
            பாவேந்தர், பானையில் பொங்கும் சோற்றைப் பார்க்கும் போது கூட கவின் நிலவே உனைக் காணும் இன்பந்தானோ என்று அங்குக் கூட அழகியலை பசியோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறார்.
            வாடிய பயிரைக் கண்ட வள்ளலார் பசிப்பிணி போக்க அணையா அடுப்பை ஏற்றுகிறார்.
            அனைவர்க்கும் கல்வி என்பதை பள்ளி வரும் அனைவர்க்கும் மதிய உணவு என்பதோடு இணைக்கிறார் காமராசர்.
            ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்ற தன் நெஞ்சின் பேரவாவை தேர்தல் அறிக்கையாகவே அறிவிக்கிறார் அண்ணா.
            இப்படித்தான் அரசியலின் உச்சம் கூட பசி போக்கும் விருந்தோம்பலின் பேரன்பில் வந்து நிற்கிறது.
            ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பது கூட பசி போக்கும் விருந்தோம்பலின் உளவியல்தான் அல்லவா!
            பரிசல் நாடி வந்தப் புலவர்க்கு எல்லாம் நல் வெண்ணிற ஆடை தந்து, தேறலோடு உணவு படைத்த விருந்தோம்பல் சங்க அரசர்களின் சமூகவியல் பண்பாகவே இருந்திருக்கிறது.
            விருந்தோம்பலே உயர்ந்த பண்பாடு.
            விருந்தோம்பலே மிகச் சிறந்த வேள்வி.
            விருந்தோம்பலின் வேள்விப் பயன் அளவிட முடியாதது, கணக்கிட முடியாதது.
            ஒரு சாண் வயிற்றுக்கு உணவு கிடைத்த விருந்தோம்பலால் திருடும் நிலைக்கு வந்த ஒரு மனம் திருடாமல் வாழுமானால் அதன் பயனை எப்படி அளவிடுவது?
            நெஞ்சு நிறைய நஞ்சோடு வந்த ஒரு மனம், விருந்தோம்பலின் நெகிழ்வால் நெஞ்சின் நஞ்சை அமிர்தமாக்கி விழுங்கினால் அதன் பயனை அளவிடுவது எஞ்ஞனம்?
            உயிர்க்கொலை புரியும் கோரத்தோடு வந்த ஒரு மனம், விருந்தோம்பலின் பேரன்பில் தன்னை இழந்து மனம் மாறி தீரத்தோடு சென்றால் அதன் பயனைக் கணக்கில் கொள்வது எவ்வாறு?
            விருந்தோம்பல் மனதை மாற்றுகிறது. உலகின் பண்பாட்டை ஏற்றுகிறது.
            விருந்தோம்பலின் பயன் என்பது விருந்தாளி நெஞ்சம் நெகிழ்வது, அவர் உள்ளம் உவப்பது, மனம் மகிழ்வது.
            நீங்களே சொல்லுங்கள்,
            விருந்தாளியின் நெஞ்ச நெகிழ்ச்சிக்கு,
            உள்ள உவப்பிற்கு,
            மன மகிழ்வுக்கு
            இணையான பயன் எதுவென்று?
            விருந்தோம்பலால் நிகழும் விருந்தாளியின் நெஞ்ச நெகிழ்வுக்கு இணையான பயன் எதுவுமில்லை.
            விருந்தோம்பலால் நடைபெறும் விருந்தாளியின் உள்ள உவப்புக்கு ஒப்பான பயன் எதுவுமில்லை.
            விருந்தோம்பலால் உண்டாகும் விருந்தாளியின் மன மகிழ்வுக்கு நிகரான பயன் எதுவுமில்லை.
            இணைத் துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின் துணைத் துணை வேள்விப் பயன்.
            விருந்தோம்பலைப் போல சிறந்த வேள்வி இல்லை.
            அதன் பயனுக்கு நிகரான பயன், வேள்விப் பயனிலும் இல்லை.
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...