13 Mar 2018

அன்பே துணை!


குறளதிகாரம் - 8.6 - விகடபாரதி
அன்பே துணை!
            இந்த உலகில் அறம் நிலைபெறுவதற்குக் காரணம் அன்பு. அறமல்லாதவற்றைகளை நீக்கவும் காரணமாவது அன்பு.
            அறம் என்பதும் அன்பு என்பதும் வேறன்று. அறமே அன்பு. அன்பே அறம்.
            அன்பே நல்லதை நினைக்கச் செய்கிறது. அன்பே நன்மையைச் செய்யத் தூண்டுகிறது. அன்பே நன்மைக்கு வடிவம் கொடுக்கிறது. அன்பு கொடுக்கும் நன்மையின் வடிவமே அறம்.
            அறத்திற்கு அன்பு சார்பாகிறது.
            அறம் அல்லாதவைகளுக்கும் அன்பே சார்பாகிறது.
            அது எப்படி?
            கோபத்தைக் கோபத்தால் தீர்க்க முடியாது.
            வன்முறையை வன்முறையால் தீர்க்க முடியாது.
            பழி தீர்த்தலை பழி தீர்த்தலால் தீர்க்க முடியாது.
            குரூரத்தைக் குரூரத்தால் தீர்க்க முடியாது.
            குரோதத்தைக் குரோதத்தால் தீர்க்க முடியாது.
            பகையைப் பகையால் தீர்க்க முடியாது.
            வெறுப்பை வெறுப்பால் தீர்க்க முடியாது.
            அன்பால்தான் தீர்க்க முடியும்.
            கோபத்தை மாற்றவும், வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும், பழி தீர்த்தலை திசை மாற்றவும், குரூரத்தை இல்லாமல் செய்யவும், குரோதத்தை விரட்டவும், பகையை நட்பாக்கவும், வெறுப்பை விருப்பமாக ஆக்கவும் அன்புதான் துணையாகிறது.
            கோபத்தால் செய்வது மறச் செயல்,
            வன்முறையால் செய்வது மறச் செயல்,
            பழி தீர்ப்பதற்காகச் செய்வது மறச் செயல்,
            குரூரத்தால் செய்வது மறச் செயல்,
            குரோதத்தால் செய்வது மறச் செயல்,
            பகைக் கொண்டு செய்வது மறச் செயல்,
            வெறுப்பு கொண்டு செய்வதும் மறச் செயல்,
            இவைகளெல்லாம் மறச் செயல்கள் என்று கொண்டால்...
            இத்தகைய மறச் செயல்கள் மாற்றம் பெறுவதற்கும் அன்பே துணையாக நிற்கிறது.
            ஒருவர் மேல் கொண்ட அன்புக்காக, அவர் வறுமை தீர்க்க வேண்டும் என்று திருடச் செய்யலாம்.
            ஒருவர் மேல் கொண்ட அன்புக்காக, அவர் துயர் உறுவதைக் காணச் சகியாமல் அவரைத் துன்புறுத்துபவரைக் கொல்லத் துணியலாம்.
            ஒருவர் மேல் கொண்ட அன்புக்காக, அவருக்கு நல்லது நடக்க வேண்டுமே என்று பொய் சொல்லத் துணியலாம்.
            ஒருவர் மேல் கொண்ட அன்புக்காக, அவரைப் பிடிக்காதவர் மேல் விரோதம் பாராட்டலாம்.
            இப்படி அன்புக்காக குரூரம் நிகழலாம். குரோதம் கொண்டு செயல்படலாம். பழி தீர்க்க முற்படலாம்.
            ஆனால்...
            உண்மையான அன்பு அதைச் செய்யாது. வறுமையில் இருக்கும் அன்பாளருக்காக அது ஒரு போதும் திருடச் செய்யாது. அறத்தோடு பொருந்திய வழிகளில் உதவவே செய்யும்.
            உண்மையான அன்பு தம்முடைய அன்பாளர் துயர் உறுகிறார் என்று அத்துயர் செய்பவரைக் கொலைத் துயர் செய்யாது. தம் அன்பாளருக்கு ஆதரவாக, ஆறுதலாக நின்று அத்துயர் போக்கும் அறத்தோடு பொருந்திய வழிகளையே அது ஆராயும்.
            உண்மையான அன்பு தம் அன்பாளருக்கு நல்லது நடக்க வேண்டும் என்று பொய் சொல்லக் கூட துணியாது. உண்மையை விளக்கி அதன் மூலம் நன்மையைச் செய்ய முடியுமா என்றுதான் பார்க்கும்.
            உண்மையான அன்பு தமது அன்பாளர் மேல் மட்டும் அன்பு கொள்வது அன்று. தம் அன்பாளர் மேல் வெறுப்பு கொள்வோர் மேலும் அன்பு கொள்வதாகும்.
            காந்தியார் போல் யாரை எதிர்த்துப் போராடினாரோ அந்த ஆங்கிலேயரிடமும் காட்டிய அன்பு போலாகும். இப்படித்தான் மறத்திற்கும் அன்பே துணையாகிறது.
            உண்மையான மறம் என்பது அல்லவைகளை நீக்கிய நல்லவைகளைக் கொண்ட மறமே.
            அப்படிப்பட்ட மறத்துக்கும் அன்பே துணையாகிறது.
            கொல்வது மறம் என்றால், காப்பது அதனினும் உயர்ந்த மறம் அன்றோ?
            வீழ்த்துவது மறம் என்றால், வாழ்த்துவது அதனினும் உயர்ந்த மறம் அன்றோ?
            தோற்கடிப்பது மறம் என்றால், தோல்வியைத் துணிவோடு ஏற்றுக் கொள்வது அதனினும் உயர்ந்த மறம் அன்றோ?
            அழிப்பது மறம் என்றால், ஆக்குவது அதனினும் உயர்ந்த மறம் அன்றோ?
            தண்டிப்பது மறம் என்றால், மன்னிப்பது அதனினும் உயர்ந்த மறம் அன்றோ?
            எப்போதும் உயர்ந்ததன் பொருளையே சொற்கள் கொள்கின்றன. சர்க்கரை என்றாலே இனிப்பு என்பது போல.
            மறம் என்பது அறமற்றவைகள் என்று பொருள் கொண்டால் அஃதைச் செய்யாமல் இருப்பதற்கு துணையாவதே மறம் ஆகும்.
            மறம் என்பது உயர்ந்த பொருளில் அறத்தைக் காத்து நிற்கும் செயல்களே எனப் பொருள் கொண்டால் அதற்கு துணை நிற்பதே மறம் ஆகும்.
            அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.
            அன்பே அறத்திற்கும் துணை, மறத்திற்கும் துணை.
            அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல், வாழ நல்வழிக் காட்டல் எல்லாம் அன்பால் விளையும் அறங்கள்.
            தீமைக்கும் நன்மை செய்வது, பகையையும் நட்பாக்குவது, வெறுப்பையும் விருப்பாக்குவது இவைகள் எல்லாம் அன்பால் விளையும் மறங்கள்.
            வாழ்வுக்குத் துணிவே துணை என்பது போல, அறத்திற்கும், மறத்திற்கும் அன்பே துணை. அன்பையே எப்போதும் நினை.
*****

No comments:

Post a Comment