11 Mar 2018

அன்பின் குழந்தைகள்


குறளதிகாரம் - 8.4 - விகடபாரதி
அன்பின் குழந்தைகள்
            அன்புக்குக் குழந்தைகள் உண்டு.
            அன்பு பிரசவித்ததே ஆர்வம்.
            அன்பு பிரசவித்ததே உற்சாகம்.
            அன்பு பிரசவித்ததே ஈடுபாடு.
            அன்பு பிரசவித்ததே அக்கறை.
            அன்பு பிரசவித்ததே பரிவு.
            அன்பு பிரசவித்ததே உரிமை.
            அன்பு பிரசவித்ததே நெகிழ்வு.
            இப்படி ஆர்வம், உற்சாகம், ஈடுபாடு, அக்கறை, பரிவு, உரிமை, நெகிழ்வு எல்லாம் கலந்த கலவையாக அன்பு பிரசவித்ததே நட்பு.
            இந்த உலகில் நாம் காணும்,
            பாசம்,
            நேசம்,
            காதல்,
            நட்பு,
            பக்தி எல்லாம் அன்பின் பிரசவங்கள். அன்பின் குழந்தைகள். அன்பிலிருந்து பிறந்த அன்பின் வடிவங்கள். அன்பின் அவதாரங்கள். அன்பின் உருமாற்றங்கள்.
            சக மனிதர்கள் பால் கொண்ட அன்புதான் அவர்கள் துயர் உறும் போது அதைப் போக்கும் ஆர்வத்தைத் தருகிறது.
            எடை மிகுந்த செயற்கைக் காலைத் தூக்கிச் சிரமப்படும் குழந்தைகளைக் கண்ட அப்துல் கலாமுக்கு எடை குறைந்த செயற்கைக் காலைக் கண்டறிந்து அவர்களின் துயர் போக்கும் ஆர்வத்தை அந்த அன்புதான் தருகிறது.
            அடக்கப்படுவதையும், ஒடுக்கப்படுவதையும், அடிமைபடுத்தப்படுவதையும் கண்டு கொதித்து எழும் சக மனிதர்கள் பால் கொண்ட அன்புதான் உலகில் புரட்சியாளர்களையும், சிந்தனையாளர்களையும், கலகக்காரர்களையும் உருவாக்குகிறது.
            வால்டேர், ரூசோ, மார்க்ஸ், லெனின், சே குவேரா, காஸ்ட்ரோ, அம்பேத்கர், பெரியார் எல்லாம் அப்படி உருவான அன்பாளர்கள்தான்.
            அன்புதான் மனிதர்களின் துயர் போக்கும் ஆர்வத்தைத் தருகிறது. அந்த ஆர்வம்தான் நட்பைத் தருகிறது. உலகத் தொழிலாளிகள் பால் கொண்ட அன்பால் அவர்கள் துயர் போக்கப் போராடும் கம்யூனிச சித்தாந்தவாதிகள் காணும் யாவரையும் காம்ரேட் எனும் தோழர் என்ற சொல்லால் அழைப்பது அன்பு உருவாக்கிய ஆர்வத்தால் உண்டான நட்பால்தான் அன்றோ!
            சக மனிதர்களின் துயர் கண்டு பொங்கினால் நீயும் எம் தோழரே என்று சே குவேராவைச் சொல்லச் செய்து அன்பு உருவாக்கிய ஆர்வத்தால் உண்டான நட்புதான் அல்லவா!
            அன்பில்லாதவர்களுக்கு ஆர்வமும் இருக்காது, அக்கறையும் இருக்காது, உரிமையோடு மற்றவர்களுக்காகச் செயல்படும் உணர்வும் இருக்காது. ஆர்வமோ, அக்கறையோ, உரிமையோ இல்லாதவர்களுக்கு நட்பு எனும் உணர்வும் பூக்காது.
            கண்டுபிடிப்பாளர்கள் ஒவ்வொருவரும்,
            விஞ்ஞானிகள் ஒவ்வொருவரும்,
            அறிஞர்கள் ஒவ்வொருவரும்,
            சீர்திருத்தவாதிகள் ஒவ்வொருவரும்,
            பொது நலச் சேவகர்கள் ஒவ்வொருவரும் சக மனிதர்கள் பட்ட துயர் கண்டு அதைப் போக்கும் ஆர்வத்தால் உந்தப்பட்டு அப்படி ஆனவர்களே. அந்த ஆர்வம்தான் அவர்களை உலகையே தோழமையோடு பார்க்கச் சொல்கிறது.
            மனிதச் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் வலியுறுத்திய பிரெஞ்சு புரட்சி மூன்றாவது அம்சமாக சகோதரத்துவம் எனம் தோழமையைத்தான் வலியுறுத்துகிறது.
            கடல் கடந்து மதம் சார்ந்த உரையாற்றச் செல்கின்ற விவேகானந்தர் சகோதரர்களே, சகோதரிகளே என்ற தோழமை உணர்வோடு உரையாற்றியே வெற்றி பெறுகிறார்.
            மனிதர்க்கு மனிதர் மிக வேண்டப்பட்டதான நட்புணர்வு, இன்று நாட்டுக்கு நாடு வேண்டப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதுதானே!
            நட்புணர்வு அந்த அளவுக்குச் சிறந்ததாக உள்ளது.
            பரஸ்பர புரிந்துணர்வு என்று உலக அமைப்புகளும் அதை உயர்ந்து ஓதுகின்றன.
            சிறப்பான நட்புக்கு ஆர்வம் தேவை. அந்த ஆர்வத்துக்கு அன்பு தேவை.
            அன்பே வித்து. ஆர்வம் அதன் சொத்து. நட்பு அதன் முத்து.
            அன்பு ஆர்வத்தைத் தர, ஆர்வம் நட்பைத் தர, நட்பு சிறப்பைத் தருகிறது. சிறப்பு சிறப்பைத்தானே தரும். ஆம், அன்பே சிறப்பு, சிறப்பே அன்பு.
            அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும் நண்பு எனும் நாடாச் சிறப்பு.
*****

No comments:

Post a Comment