செங்காந்தள் அறிவுத் திருவிழா - 2
மாணவர்களுக்கானப் புத்தகக் கண்காட்சியாகவும்,
மாணவர்களுக்கானப் புத்தக இயக்கமாகவும் கொண்டாடப்படும் அறிவுத் திருவிழாவின் இரண்டாவது
திருவிழா 09.03.2018 (வெள்ளி) அன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், ஊராட்சி
ஒன்றிய தொடக்கப் பள்ளி, உச்சிவாடியில் கொண்டாடப்பட்டது.
ஆண்டு விழாவோடு அறிவுத் திருவிழா எனும்
புத்தகக் கண்காட்சியையும் இணைத்துக் கொண்டாடிய முதல் பள்ளியாக அநேகமாக இப்பள்ளிதான்
இருக்கக் கூடும்.
ஆண்டு விழாவுக்குத் திரண்ட கிராமப் பொதுமக்களும்,
பெற்றோர்களும், தன்னார்வலர்களும், மாணவர்களோடு இணைந்து புத்தகக் கண்காட்சி அரங்கில்
திரண்டு அறிவுத் திருவிழாவைத் திக்கு முக்காடச் செய்து விட்டனர்.
புத்தகங்களை விரும்பித் திருட்டுத்தனமாக
எடுத்துச் சென்ற பிள்ளைகள் சிலர் அதைத் தாங்களேத்
திரும்பக் கொண்டு வந்து ஒப்படைத்த நிகழ்வும் இவ்வறிவுத் திருவிழாவில்தான் நிகழ்ந்தது.
புத்தகங்களை விரும்பித் திருடிச் செல்வது
எத்தனை அற்புதமான ஒன்று. இந்த உலகில் நகை, பணம், சிலை என்றெல்லாம் திருடப்பட்டதற்குப்
பதிலாக புத்தகங்கள் திருடப்பட்டிருந்தால் இந்த உலகம் எப்போதோ திருந்தியிருக்கும்.
திருடிச் சென்றாலும் புத்தகங்களைப் படித்துத்
திருந்தத்தான் முடியுமே தவிர, திருட்டைத் தொடர முடியாது.
அது சரி! பெரும் திருடர்கள் புத்தகங்களை
மட்டும் ஏன் திருட மறுக்கிறார்கள்?
பொதுச் சொத்தைக் கொள்ளையடிப்பவர்கள்
புத்தகங்களை ஏன் கொள்ளையடிக்க மறுக்கிறார்கள்?
பயம்தான் காரணம்! புத்தகங்கள் திருத்தி
விடும் என்ற பயம்தான் காரணம்!
அறிவுத் திருவிழாவைப் பொருத்த வரையில்
புத்தகத் திருடர்கள், புத்தகக் கொள்ளையர்கள் உருவானாலும் மகிழ்ச்சியே. தேவையில்லாத
ஒன்றை, விரும்பா ஒன்றை திருடக் கூட முடியாது அல்லவா! ஆக புத்தகங்கள் அவர்களுக்குத்
தேவையாக இருக்கிறது. புத்தகங்கள் அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கிறது. அவர்களிடம்
புத்தகங்கள் சென்று சேர்வது ஆனந்தமே!
மற்றொரு முக்கிய நிகழ்வாக புத்தக ஆர்வலர்கள்
ஒருங்கிணைந்து பணம் திரட்டி, பள்ளியின் ஆண்டு விழா நிகழ்வுக்கு அறிவுத் திருவிழாவில்
புத்தகங்கள் வாங்கி, பள்ளிக்குப் பரிசளித்த நிகழ்வும் இவ்வறிவுத் திருவிழாவில் நிகழ்ந்தது.
அறிவுத் திருவிழாவின் இலக்கு ஒரு லட்சம்
புத்தகங்களை மாணவர்களின் கரங்களில் கொண்டு சேர்ப்பதாகும் என்பது அறிந்ததே. ஒரு லட்சம்
என்ற இலக்கில் 98,976 புத்தகங்கள் மாணவர்களின் கரங்களில் கொண்டு சேர்க்க வேண்டிய நிலையில்
இரண்டாவது அறிவுத் திருவிழாவில் 252 புத்தகங்களை அறிவுத் திருவிழாவுக்கு வந்தோர் அள்ளிக்
சென்றிருக்கிறார்கள். ஆக 98,976 - 252 = 98,724. இன்னும் 98,724 புத்தகங்களை மாணவர்களின்
கரங்களில் கொண்டு சேர்க்க வேண்டும்.
கரங்களைக் கோர்ப்போம்! புத்தகங்களைக்
கொண்டு சேர்ப்போம்!
*****
No comments:
Post a Comment