எஸ்.கே. ஓர் இயற்கை உழவாண்மையாளன்
எஸ்.கே.வுக்கு 2013 ஆம் வாக்கில் வேளாண்மையில்
ஆர்வம் ஏற்பட்டது. நாள், மாதம் முக்கியமில்லை என்று எஸ்.கே. நினைப்பதால் 2013 இல் அது
எந்த மாதம், எந்த நாள் என்பதைக் குறிப்பிட வேண்டாம் என்று நினைக்கிறான்.
வேளாண்மை என்றால் அது இயற்கை வேளாண்மைதான்
என்பதில் தீர்மானமாக இருந்தான் எஸ்.கே. இதற்கென ஒரு கருத்தரங்கிலும் கலந்து கொண்டான்.
அங்குதான் எஸ்.கே. நம்மாழ்வாரைச் சந்தித்தான்.
அவனது இயற்கை வேளாண்மை ஆர்வம் கெட்டிப்பட்டது.
கைவரச்சம்மா எனும் பாரம்பரிய நெல்லை வாங்கிக்
கொண்டான் எஸ்.கே. கையில் வாங்கி வந்த கைவரச்சம்பாவோடு அவனது இயற்கை வேளாண்மைத் தொடங்கியது.
அவனைப் பொறுத்த வரையில் முடங்கியது என்று சொன்னாலும் பிழையில்லை.
வாங்கி வந்ததோடு சரி, அதன் அத்தனை வேலைகளையும்
அவன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் செய்ய வேண்டியதானது. ஏதோ ஒரு ஞாபகத்தில் தப்பித்
தவறி ஒரே ஒரு முறை ஒரு நாள் வயலுக்குப் போய் வந்ததோடு சரி.
தான் மிகப்பெரும் வேளாண் ஆர்வலராக மாறி
விட்டதாக பூரிப்படைந்தான் எஸ்.கே. இனி உலகம் முழுவதும் இயற்கை வேளாண்மையைத் தழைக்கச்
செய்த விட முடியும் என்ற புளங்காகிதமும் அவனுக்குள் ஏற்பட்டது.
மேலும் வயலுக்குச் செல்வதை விட கருத்தரங்களுக்குச்
செல்வதில் மிகுந்த ஆர்வமாக இருந்தான் எஸ்.கே. அவனது குடும்பத்தினர் இவனுக்காக வயலே
கதியெனக் கிடந்தனர்.
அந்த வருடம் எஸ்.கே. மேற்கொண்ட இயற்கை
வேளாண்மையால் அவனது குடும்பத்தினர் கடுமையான நட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாகி விட்டது.
நெற்பயிர்களை சூரை நோய், மஞ்சள் நோய்
என்று விதவிதமான நோய்கள் தாக்கியதால் வந்த விளைவு அது.
அந்நோய்கள் இயற்கை வேளாண்மை செய்த அவனது
சில மா அளவு நிலங்களை மட்டுமல்லாது சுற்றி நவீன ரக நெல் பயிரிட்டிருந்த பல மா அளவு
நிலங்களில் வேறு பாதிப்பு ஏற்படுத்தி விட்டது. இதனால் ஏற்பட்ட இழப்பு எஸ்.கே.வின் குடும்பத்துக்குக்
கணிசமாக இருக்கும்.
எஸ்.கே. பொறுப்பாகச் செயல்பட ஆரம்பித்து
விட்டானே என்பதற்காகத்தான் அவனது இந்த முயற்சியை அவர்கள் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு
கொண்டாடினர். அவன் இந்த முயற்சியைத் தோள்களில் கூட தூக்கி வைத்துக் கொள்ளவில்லை
என்பது வேறு.
இப்படி ஓர் இழப்பு ஏற்பட்டதும் எஸ்.கே.
உதிர்த்த மந்திர முத்துகள் குறிப்பிடத்தக்கது. அவன் குறிப்பிட்டான், "இந்த இழப்பை
வெறும் இழப்பாக மட்டும் பார்க்க முடியாது. இயற்கையை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட ஓர்
மாபெரும் அடியாகத்தான் பார்க்க வேண்டும். நாம் எந்த அளவுக்கு இயற்கையிலிருந்து பின்
தங்கி இருக்கிறோம் என்பதைத்தான் இந்த இழப்பு காட்டுகிறது. முக்கியமாக ஆடுகளோ அல்லது
மாடுகளோ இல்லாமல் இயற்கை வேளாண்மையைச் செய்ய முடியாது என்பதை இந்த மாபெரும் இழப்பு
சுட்டிக் காட்டியிருக்கிறது."
ஒரு மாடாவது இயற்கை வேளாண்மைக்கு அவசியம்
தேவைப்படுகிறது. அதன் மூலம் பஞ்சகவ்வியா தயாரிக்க வேண்டியதாக இருக்கிறது. பூச்சித்
தடுப்புக்கும், பயிர் பாதுகாப்புக்கும் அது அவசியம் தேவைப்படுவதாகிறது.
உணர்வு வேகத்தில் எடுக்கும் முடிவுகள்
வெற்றியைத் தராது. உணர்வுப்பூர்வமாக எடுத்த முடிவைச் செயலுக்குக் கொண்டு வரும் முயற்சிதான்
வெற்றியைத் தேடித் தரும். ஓர் உணர்வுப் பூர்வமான முடிவுக்கு நிறைய தடைகளைத் தாண்ட வேண்டி
வரும். அதற்கு வெறுமனே பேசிக் கொண்டு இருந்தால் மட்டும் போதாது. களத்தில் இறங்கிக்
செயலாற்ற வேண்டும். எப்போதும் பேனா பிடித்துக் கொண்டிருந்தால் அது வேலைக்காகாது.
எஸ்.கே.வைக் கூடிய விரைவில் மீண்டு வந்த
மறுபடியுமான ஓர் இயற்கை விவசாயியாக நீங்கள் பார்க்கக் கூடும். அதற்குக் கொஞ்சம் காலங்கள்
தேவைப்படக் கூடும், அத்துடன் அனுபவங்களும்.
*****
No comments:
Post a Comment