3 Mar 2018

உலகின் ஆகச் சிறந்த இசை!

குறளதிகாரம் - 7.6 - விகடபாரதி
உலகின் ஆகச் சிறந்த இசை!
            மூங்கிலில் பூச்சிகள் துளைத்த ஓட்டைகள் வழியே செல்லும் காற்று இசையாகி வரும் ரகசியத்தை மக்கள் கண்டிருக்க வேண்டும். அதே மூங்கிலை உடைத்து தன் மூச்சுக் காற்றை மக்கள் ஊதிப் பார்த்திருக்க வேண்டும். இப்படித்தான் மூச்சுக் காற்று இசையாகும் அதிசயத்தை மக்கள் தரிசித்திருக்க வேண்டும்.
            குழலின் இசை உயிரை மயக்கும் இசை. மூச்சுக் காற்றால் பிறக்கும் இசை அல்லவா!
            தன் காதலை வார்த்தைகள் மூலம் சொல்ல முடியாத ஒருவருக்கு வயலின் மூலம் காதலைச் சொல்வது எளிதாக இருப்பதாக ஒரு மேல்நாட்டுக் கவிதை உண்டு. பிரபஞ்ச ரகசியத்தை தன் சூத்திரத்தின் மூலம் உடைத்த ஐன்ஸ்டீன் வயலின் வாசிப்பதில் மிகுந்த விருப்பமாக இருந்தார்.
            இப்போது எதற்கு வயலின் வியாக்கியானம் என்றால்,
            வயலின், வீணை போன்ற தந்திக் கருவிகளின் அடிப்படையை விஞ்சும் இசைக்கருவி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடம் யாழ் எனும் இசைக்கருவியாக இருந்திருக்கிறது.
            யாழின் இசை கிறக்கம் கொள்ளச் செய்யும் இசை. உயிரின் நரம்பு போன்ற தந்திகளால் ஆன கருவி அல்லவா அது.
            ஆதித் தமிழரின் இசைக்கருவிகள் குழலும் யாழும்.
            ஒன்று வாயால் ஊதப்படுவது.
            மற்றொன்று கைகளால் மீட்டப்படுவது.
            இரண்டுமே உயிரற்றது. உயிருள்ள மக்கள் மீட்டினால் உயிர் பெறும். இசை தரும்.
            வாயால் ஊதப்படும், கைகளால் மீட்டப்படும் இசையை மிஞ்சிய இசை இந்தப் பிரபஞ்சத்தில் வேறொன்று இருக்கிறதா என்ன!
            இருக்கிறது. எந்த இசையாலும் மிஞ்ச முடியாத இசை.
            அதுதான் குழந்தையின் மழலை மொழி. இசையை மிஞ்சும் இசை. வசியத்தை மிஞ்சும் வசியம்.
            குழந்தை உயிருள்ள இசைக் கருவி.
            அந்த இசைக் கருவியை இயக்கும் ஜீவனும் அதுவே.
            இசைக் கருவியாகி, இயக்கும் ஜீவனுமாகி, இசையாகும் குழந்தைக்கு முன் எந்த இசை நிற்க முடியும்?
            ஒரு வேளை மழலை மொழியை விட சிறந்த இசையைக் கேட்டதாகச் சொல்பவர்கள் இருப்பார்களானால் அவர்கள் மழலை மொழியைக் கேட்காதவர்களாகத்தான் இருக்க வேண்டும்.
            கடலைப் பார்க்காதவர்கள் ஏரியைக் கடலென்று சொல்ல வாய்ப்பிருக்கிறது.
            இமயத்தைப் பார்க்காதவர்கள் சிறுமலையை பெருமலை என்று வியக்க வாய்ப்பிருக்கிறது.
            முதன் முதலாக ஒன்று, இரண்டு,... எண்ணக் கற்றுக் கொண்டவர்கள் விண்மீன்களை எண்ண முடியும் என்று இறுமாப்பு கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
            நான்கு வரிக் கவிதை எழுதிப் பார்த்தவர்கள் கம்பரை விஞ்ச முடியும் என்று நெஞ்சு நிமிர்த்த வாய்ப்பிருக்கிறது.
            பாறாங்கல்லை உருட்டிப் பார்த்தவர்கள் இந்தப் பூமியை பந்து போல் உருட்டி விட முடியும் என்று செருக்குக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
            அப்படித்தான் குழந்தையின் மழலை மொழியைக் கேட்காதவர்கள் குழலின் இசையையும், யாழின் இசையையும் சிறந்ததென்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது.
            ஏனென்றால், அறியாமை எங்கும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதை விட அனுபவித்து அறியாத ரசனை எவருக்கும் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
            வள்ளுவர் இதை மிக அழகாகக் காட்சிப்படுத்துகிறார்,
            குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்று!
            அப்படியானால் குழலையும், யாழையும் தவிர மழலை மொழியை விஞ்சும் வேறு சிறந்த இசைக்கருவிகள் இருக்கக் கூடுமோ! குழலும், யாழும் அனைத்து இசைக்கருவிகளுக்கும் முதன்மைப் பிரதிநிதியாய் வந்து மழலை மொழிக்குக் முன் குட்டுப்பட்ட பின் வேறு சிறந்த இசைக் கருவிகள் இருக்கத்தான் கூடுமோ!
            குழல் காற்றுக் கருவிக்கு முதன்மைப் பிரதிநிதி என்பது சரி.
            யாழ் தந்திக் கருவிக்கு முதன்மைப் பிரதிநிதி சரி.
            தோல் கருவிக்கு முதன்மைப் பிரதிநிதியைச் சொல்லாமல் விட்டு விட்டாரோ வள்ளுவர்? அப்படியெல்லாம் விடுபவரா வள்ளுவர்? கொல்லாமையை வலியுறுத்தும் வள்ளுவருக்கு தோல் கருவிகள் மேல் உவப்பு இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லவா!
            அதுசரி! இன்ன பிற வடிவிலான இசைக் கருவிகள் மூலம் பிறக்கும் இசை வகைகள் இருந்தால்தான் என்ன! மழலைச் சொல்லுக்கு முன் மண்டியிடத்தான் வேண்டும் இசை!

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...