5 Mar 2018

விஞ்சும் அறிவே இனிது!


குறளதிகாரம் - 7.8 - விகடபாரதி
விஞ்சும் அறிவே இனிது!
            குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது டார்வினின் பரிணாமக் கோட்பாடு. ஒன்றிலிருந்து இன்னொன்று மேம்பட்டுத் தோன்றுவது இக்கோட்பாட்டின் அடிப்படை.
            உடல், மனம், அறிவு என்பதில் ஒவ்வொரு தலைமுறையும் முன்பிருந்து தலைமுறையை விஞ்சுகிறது. பரிணாமத்தில் மேம்படுகிறது.
            அதில் உடல், மனம் என்பதை அறிவு விஞ்சிய வேகம் அபாரமானது. எப்படி இது அப்படிச் சாத்தியமானது?
            மன்னர் காலத்தில் வேகமாகச் சென்ற குதிரை பூட்டிய தேர்கள் இன்றில்லை. அதை விட வேகமாகச் செல்லக் கூடிய வாகனங்கள் வந்து விட்டன. இன்று கண்டம் விட்டு கண்டம் ஜெட் விமானத்தில் பயணிக்கும் தலைவர்கள் அதிகம்.
            மனித அறிவு வளர்ச்சி விஞ்ஞான வளர்ச்சியாய், மருத்துவ வளர்ச்சியாய், பொறியியல் வளர்ச்சியாய், தொழில் நுட்ப வளர்ச்சியாய், தகவல் தொடர்பு வளர்ச்சியாய்,... பல்துறை வளர்ச்சியாய் பல திசைகளிலும் வெளிப்பட்டு நிற்கிறது.
            மாவரைக்கும் ஆட்டுக்கல் கிரைண்டர் ஆனது,
            சட்டினி அரைக்கும் அம்மிக்கல் மிக்ஸி ஆனது,
            சோற்றுக் குண்டான் குக்கர் ஆனது,
            கைகளால் துவைக்கும் துணிகளை வெளுக்க வாஷிங் மெஷின் வந்தது,
            தொலைபேசி இருந்த இடத்தில் ஓடிப் போய் பேசிய நிலை போய் இருந்த இடத்திலிருந்து பேசக் கூடிய செல்பேசி வந்தது,
            செயற்கை இதயம், செயற்கை நுண்ணறிவு வரை வந்தாகி விட்டது,
            கணிப்பான் எனும் கால்குலேட்டர், கணினி எனும் கம்யூட்டர், இணையம் எனும் இன்டர்நெட், தொலைக்காட்சி எனும் டி.வி.,  எல்லாம் கைக்கு அடக்கமான திறன்பேசிகள் எனும் ஸ்மார்ட் போன்களாய் சுருண்டு விட்டன.
            சென்ற தலைமுறையை விட இந்தத் தலைமுறையின் அறிவு வளர்ச்சி மிக பிரமாண்டமாக இருக்கிறது. இந்தத் தலைமுறையை விட அடுத்தத்  தலைமுறையின் அறிவு வளர்ச்சி இன்னும் பிரமாண்டமாக இருக்கப் போகிறது.
            தாத்தாவுக்குப் பேரன் திறன்பேசிகளின் ஆப்களைப் பயன்படுத்திக் காட்டி மகிழ்விக்கிறான்.
            அப்பாவுக்குப் பையன் கணினியை இயக்கக் கற்றுத் தருகிறான்.
            நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க, இணைய வழிப் பணபரிமாற்றம் செய்ய இருபது வயதுக்கு உட்பட்ட இளைஞர் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
            ஒவ்வொரு தலைமுறையும் முன்னர் இருந்த தலைமுறையை அறிவால் விஞ்சுகிறது.
            நூறாண்டுகளுக்கு முன், பல நாட்கள் ஒவ்வொரு பக்கமாய் அச்சக் கோர்க்கப்பட்ட புத்தகங்கள் இன்று ஒரே நாளில் வடிவமைக்கப்பட்டு அச்சாகின்றன.
            அமெரிக்காவில் வெளியாகும் திரைப்படங்கள் ஆண்டுகள் கழித்து இங்கு திரையரங்கில் பார்த்த நிலை மாறி வெளியாகும் அந்த நொடியே பார்க்கும் வாய்ப்புகள் இன்று உருவாகி விட்டன.
            அறிவின் வளர்ச்சி தடுக்க முடியாதது. அறிவே வலிமையாக இருப்பதுதான் அதற்குக் காரணம்.
            அது மட்டுமா காரணம்?
            தம்மை விட தம் குழந்தைகள் அறிவில் விஞ்சியவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்களின் பேரன்பும், பேரவாவும் அல்லவா காரணம்.
            கல்லாதத் தாய் தந்தையரும் தம் பிள்ளைகளைக் கல்வி கற்கச் செய்யவே விரும்புவர்.
            கற்றத் தாய் தந்தையர் தம்மை விட தம் மக்கள் ஒரு அங்குலமேனும் கூடுதலாகக் கல்கி கற்க வேண்டும் என்பதையே விரும்புவர்.
            மருத்துவமோ, பொறியியலோ, சட்டமோ, இசையோ, நடனமோ, விஞ்ஞானமோ, விளையாட்டோ ஒரு குறிப்பிட்டத் துறையில் நிபுணத்துவம் பெற்றப் பெற்றோர்களும், தம் பிள்ளைகள் அத்துறைக்கு வரும் போது அவர்கள் தம்மை விட மேம்பட்ட நிபுணத்துவம் உடையவர்களாக இருப்பதையே விரும்புவர்.
            உலகத்தில் எந்த நாட்டிலும், எந்த ஊரிலும்... அதாவது இந்த மாநிலத்தில் அதுவே உயிர்களின் இயற்கை. மனிதர் மட்டும் அல்லாமல் உலகத்து உயிர்கள் ஒவ்வொன்றும் அதையே விரும்புகின்றன. தம்மை விட தம் தலைமுறை அறிவில் மேம்படுவது உயிர்களின் உள்ளார்ந்த விருப்பமும், இதயத்தின் இனிமையும் ஆகும்.
            இதுவே உலக உயிர்களின் நோக்கு.
            தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது என்பது வள்ளுவர் வாக்கு.
            இப்படித்தான் அறிவு வளர்ச்சி பிற எல்லா வளர்ச்சியையும் விட விஞ்சியது சாத்தியமானது.
            தாம் படைத்த திருக்குறளையும் விஞ்சிய இலக்கியம் உருவானால் அதனால் மிக அக மகிழ்பவர் திருவள்ளுவர் அன்றோ!
            அப்படித்தானே குறளை விட இன்னும் சுருக்கமாக ஆத்திசூடியைச் செய்தாள் ஒளவை.
            பாவேந்தரை மேலும் தூக்கிப் பிடித்தார் பாரதி.
            குழலினிது, யாழினிது என்று இருந்தவர்களுக்கு மழலை மொழி அதை விட இனிதாகிறது. அம்மழலைகள் தம்மை விட அறிவுடைமை பெறுவது அதை விட இன்னும் இனிதாகிறது.
            மழலையின் பிஞ்சுக் கரங்கள் அளாவிய கூழில் இனிமை கண்டவர்கள் அம்மழலை அறிவால் விஞ்சி நிற்கும் போது அவ்வறிவைக் கொஞ்சி அதிலும் இனிமை காண்கிறார்கள்.
            ஆம்! அறிவு இனிது. அறிவே இனிது.
            அது சரி!
            வெறும் அறிவு மட்டுமே இனிதா? அது மட்டுமே பெரிதும் நெஞ்சு உவக்கப் போதுமானதா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அறிவார்ந்த அயோக்கியர்களும் வாழும் உலகமாக அல்லவா இது இருக்கிறது! அதற்கான விளக்கத்தை உடனே  அடுத்தக் குறளில் வைக்கிறார் வள்ளுவர். அதை நாளை பார்ப்போமே.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...