குறளதிகாரம் - 9.3 - விகடபாரதி
செல்வம் பெருக
வழி!
உலகில் நம்மை
விரும்புபவர்கள் உண்டு. விரும்பாதவர்களும் உண்டு.
நம்மை விரும்புபவர்களால்தான்
நம் முன்னேற்றமும், வளமும் சாத்தியப்படுகிறது.
நம்மை விரும்பாதவர்களால்
முட்டுக்கட்டைகளையும், தடைகளையும், எதிர்கொள்ள நேரிடுகிறது.
நம்மை விரும்பாதவர்கள்
நமக்குச் சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குபவர்களாக இருப்பார்கள்.
விரும்பாதவர்களையும்
விரும்பச் செய்வதில்தான் இருக்கிறது வளம் பெறுவதன் சூட்சமம். அதாவது செல்வம் பெருகச்
செய்வதன் சூட்சமம்.
தீராதப் பிரச்சனைகள்
கூட சம்பந்தப்பட்டவருடன் தனிமையில் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டு பேசும் போது தீர்கின்றன
என்கின்றன சமீபத்திய செய்திகள். அதை தேநீர் விருந்து என்கிறார்கள். எளிமையான, வலிமையான,
உண்மையான விருந்தோம்பல் அது.
நாடாளுமன்றத்தைச்
சுமூகமாக நடத்த முடியாத சூழ்நிலையில் ஒரு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.
மனம் திறந்து தேநீரோடு, பிரச்சனைகளும் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.
யாரையும்
வெறுப்பவர்களாக மாற்றி விடக் கூடாது. ஒருவேளை சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் அப்படி ஒரு
நிலை ஏற்பட்டாலும் அதையும் மாற்றிக் கொள்ள வழியிருக்கிறது. ஒரு விருந்தோம்பல் அதை
மாற்றி விடும்.
இத்தகைய விருந்தோம்பலைப்
பிரச்சனைகள், சிக்கல்கள், வெறுப்புணர்வு ஏற்பட்ட பிறகுதான் செய்ய வேண்டுமா என்ன?
இயல்பாக விருந்தோம்பல்
செய்வதை ஒரு வழக்கமாகக் கொண்டால், பிரச்சனைகள், சிக்கல்கள், வெறுப்புணர்வு ஏற்பட வழியில்லை.
விருந்தோம்பலை
ஏற்றுக் கொண்டவர்கள் விருப்பத்தோடு இருக்கவே விரும்புவார்கள். நட்புணர்வை நன்றியுணர்வை
வெளிப்படுத்தக் காலம் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஒரு நல்வாய்ப்பு வரும் போது
அதில் ஆற்றுப்படுத்தி வளம் பெருகச் செய்வதைத்
தம் கடப்பாடாகச் செய்ய முனைவார்கள். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற பழமொழி
அவ்வாறு ஏற்பட்டதுதான். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யக் கூடாது என்ற பழமொழியும்
அப்படி ஏற்பட்டதுதான்.
நாட்டில்
நடைபெறும் விருந்துகளின் நோக்கமே ஓர் இணக்கமான சூழலை உருவாக்கத்தான். இணக்கமான சூழல்
உருவாகி விட்டால் வாய்ப்புகள் தெரிவதற்கான, வளம் உண்டாவதற்கான சாத்தியங்கள் உண்டாகின்றன.
எதிர்ப்பானச்
சூழ்நிலைகள் கூட விருந்தோம்பலால் மாற்றம் பெறுகிறது. விருந்தோம்பலே நம் வழக்கமாக
இருந்தால் எதிர்ப்பானச் சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்பே இல்லை.
எதிர்ப்பவர்கள்
இல்லாத உலகில் யார் செல்வத்தை யார் சூறையாடப் போகிறார்கள்? யார் செல்வத்தை யார் குறைக்க
நினைக்கப் போகிறார்கள்? விருந்தோம்பிய அன்புக்காக உயிரையும் தருபவர்கள் இருக்கிறார்கள்.
விருந்தோம்பல்
மனதை நெகிழச் செய்கிறது. இறுகிய மனதை இளகச் செய்கிறது. வருந்திய மனதை மகிழச் செய்கிறது.
விருந்தோம்பிய அந்த அன்புக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற உணர்வைச் செய்கிறது.
எதுவும் செய்ய இயலாவிட்டாலும் உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்ற நன்றியுணர்வோடு இருக்க
வேண்டும் என்ற நல்லுணர்வைச் செய்கிறது. அதனால் இனியெல்லாம் சுகமே, வாழ்வெல்லாம் வளமே
என்ற நிலை ஏற்படுகிறது.
மாற்ற முடியாததையும்
விருந்தோம்பல் மாற்றும். செல்வ ஏணியில் ஏற்றும்.
நம் செல்வ
வளர்ச்சியை பொறாமைக் கண் கொண்டு பார்ப்பவர்களையும் விருந்தோம்பல் மாற்றும். நாம்
விருந்தோம்பும் அன்பைக் கண்டு இன்னும் இது போல் நாம் விருந்தோம்ப நம் செல்வ வளம்
பெருக வேண்டும் என்று அவர்களை நினைக்கத் தோன்றும்.
இவைகளெல்லாம்
உண்மையா என்றால்... உண்மையான விருந்தோம்பலுக்கு இதுவே மாபெரும் உண்மை. அப்படியானால்
உண்மையற்ற விருந்தோம்பல்களும் உண்டா என்றால்... உண்டு. ஆடம்பர விருந்தோம்பல்களும்,
வறட்டுக் கெளரவத்துக்கான விருந்தோம்பல்களும் அந்த வகையைச் சார்ந்தது. அவைகள் பொறாமைகளையும்,
பகைகளையும் உருவாக்க வல்லவை என்பதோடு இருக்கின்ற செல்வத்தையும் இழக்கச் செய்பவை.
எதிலும் நோக்கம்
உண்மையாக இருந்தால் விளைவு நன்மையாக இருக்கும்.
நோக்கம்
நேர்மையற்று இருந்தால் விளைவு கொடுமையாகவே இருக்கும். இது எதற்கும் பொருந்தும், விருந்தோம்பலுக்கும்
பொருந்தும்.
எளிமையான,
உண்மையான, அன்பான விருந்தோம்பல் போதும் எவர் மனதையும் மாற்ற, அவர் நம்மை முன்னேற்ற
ஏணியில் ஏற்ற.
விருந்தோம்புபவர்கள்
விரும்பிய செல்வங்களைப் பெறுகிறார்கள். விருந்தோம்பலின் உண்மையான அன்பு அதைக் கொண்டு
வந்து சேர்க்கிறது.
செல்வம் பெருக
வேண்டுமா விருந்தோம்புங்கள். விருந்தோம்பினால் செல்வங்கள் பெருகும்.
வள்ளுவர்
இதை,
அகன் அமர்ந்து
செய்யாள் உரையும் முகன் அமர்ந்து நல் விருந்து ஓம்புவான் இல் என்கிறார்.
அதாகப்பட்டது,
நல் விருந்து
ஓம்புபவர் இல்லம், செல்வக் கடவுள் என்று கற்பிக்கப்படும் திருமகள் உறையும் இடமாக அமையுமாம்.
ஆக, திருமகள்
உறைவதாகவும் விண்ணில் உள்ளதாகவும் கற்பிக்கப்படும் பாற்கடலையும் மண்ணில் உருவாக்க முடியும்
விருந்தோம்புவதால் என்கிறார் வள்ளுவர்.
ஆக, கற்பிக்கப்பட்டது
எல்லாம் மண்ணில் மனிதர் உருவாக்கியதுதான். எவ்வளவு உயர்ந்த கற்பனையும் மண்ணில் சாத்தியந்தான்.
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் என்பாரே வள்ளுவர்.
*****
No comments:
Post a Comment