10 Mar 2018

உடலும் உயிரும் காதலர்கள்!


குறளதிகாரம் - 8.3 - விகடபாரதி
உடலும் உயிரும் காதலர்கள்!
            உயிர் எப்படி உடலோடு பொருந்தியிருக்கிறது தெரியுமா?
            அது தெரிந்தால் மருத்துவ விஞ்ஞானம் செயலற்றுப் போய் விடும்.
            உடலை விட்டு உயிர் போய் விடுமோ என்ற அச்சந்தானே மருத்துவ விஞ்ஞானத்தை எலிகளையும், மனிதக் குரங்குகளையும், அதன் உச்சகட்டமாக விளிம்பு நிலை மனிதர்களையே சோதனைச் சாலைகளாக்கி மென்மேலும் வளர்த்துக் கொண்டு இருக்கிறது.
            புராணத்தில் யயாதிக்கு அப்படி ஓர் ஆசை, மூப்பே அடையக் கூடாதென்று. மூப்பு இறப்பைக் கொண்டு வந்து விடுமே. இறப்பு உடம்போடு ஒட்டியிருக்கும் உயிரைப் பிரித்து விடுமே. யயாதி தன் மூப்பை மகனுக்குக் கொடுத்து விட்டு மகனின் இளமையைப் பெற்றுக் கொள்கிறான். மகனின் இளமையைப் பெற்றுக் கொண்டு முதுமையால் அனுபவிக்க முடியாத இளமையால் அனுபவிக்க முடிகின்ற அனைத்தையும் அனுபவிக்கிறான்.
            தான் கேட்டாலன்றி தனக்கு மரணம் வரக் கூடாது என்ற வரம் பெற்றிருந்த ஆபிரஹாமும் நம் நினைவுக்கு வருகிறார். மரணம் வந்தால் உடலோடு ஒட்டியிருக்கின்ற உயிர் பிரிந்து விடுமே.
            இன்னும் சாகா வரம் கேட்டவர்களின் பட்டியல்கள் உலகெங்கும் உள்ள புராணங்களிலும், கதைகளிலும் கொட்டிக் கிடக்கின்றன.
            சாவதற்கு யாருக்குப் பிடிக்கும்? வாழ்வதற்கே எவருக்கும் பிடிக்கும்! அப்படியும் சொல்வதற்கில்லை. அப்படிச் சொன்னால் தற்கொலை செய்து கொள்வர்களை எந்த வகைபாட்டில் சேர்ப்பது?
            ஆக இங்குதான் அந்த முடிச்சு விழுகிறது. அவிழ்க்க வேண்டிய முடிச்சு அது. உயிர் உடம்போடு ஒட்டியிருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?
            மருத்துவம் அந்தக் காரணத்தைத் தேடிக் கொண்டே இருக்க,
            அறிவியல் அந்த காரணத்தை விளக்கிக் கொண்டே இருக்க,
            வள்ளுவம் என்ன சொல்கிறது என்றால்...
            உயிர் உடம்போடு ஒட்டியிருப்பதற்குக் காரணம் அன்புதான்.
            அது என்ன அன்பு? காதல் என்றும் சொல்லலாம். உடல் மீது உயிருக்கு காதல். உயிர் மீது உடலுக்குக் காதல். இணைபிரியாத அந்தக் காதல்தான் உடலும் உயிரும் ஆகிய இருவரும் இணைந்திருக்கக் காரணம். காதல் கொண்ட அன்றில் பறவைகள் பிரியுமோ என்ன!
            அப்புறம் எப்படி உடலை விட்டு உயிர் பிரிகிறது? அன்பு குறையும் போது உடலை விட்டு உயிர் பிரிகிறது.
            உயிர் எவ்வளவு பெரியது? அதையே துச்சமென நினைத்து உயிரைப் போக்கிக் கொள்ள விழைவதற்கு அன்பின் குறைவே காரணமாகிறது. தற்கொலை புரிந்து கொள்ளும் ஒவ்வொரு மனிதப் பின்னணிக்கும் அன்பு குறைவு இருக்கவே செய்கிறது.
            எங்கு அன்பு குறைந்தாலும் அதை உயிர் ஏற்காது. அன்பு குறைந்த இடத்தில் உடலோடு ஒட்டியிருக்க உயிர் சம்மதிக்காது. அன்பு குறைந்த இடத்தில் உடலோடு ஒட்டி வாழ்வதை உயிர் கெளரவக் குறைச்சலாகவே நினைக்கிறது. இப்படித்தான் மனிதரிடமிருந்து மானம் பிறக்கிறது.
            மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் என்று அதையும் வள்ளுவரே சொல்கிறார்.
            ரொட்டிக்காக ஏங்குபவனை விட அன்புக்காக ஏங்குபவனின் நிலைமையே பரிதாபமானது என்பார் அன்னை தெரசா.
            அன்புதான் உயிரை உடலோடு ஒட்டி வைத்திருக்கிறது என்ற விளக்கம் மருத்துவத்துக்குப் புதிராக இருக்கலாம்.
            காசுக்காக சுகப் பிரசவத்தை அறுவைப் பிரவசமாக மாற்றும் மருத்துவத்துக்கு,
            காசுக்காக இல்லாத நோய்க்கும் சேர்த்து இருக்கின்ற அனைத்துப் பரிசோதனைகளையும் செய்யும் மருத்துவத்துக்கு,
            கிருமியை உருவாக்கி பரப்பி விட்டு விட்டு, அதற்கு காசு கொடுத்து மருந்து வாங்க வைக்கும் மருத்துவத்துக்கு,
            அதிக மருந்துகளை எழுதித் தந்து, அதிக காசு பார்க்க வழி செய்தால் வெளிநாடுகளுக்கு விலையில்லா சுற்றுலாவை ஏற்பாடு செய்து தரும் மருத்துவத்துக்கு,
            உள் உறுப்புகளை, திசுக்களை, தோல் உட்பட பண்ட பரிமாற்றம் செய்து காசு பார்க்கும் மருத்துவத்துக்கு
                        நிச்சயம் அது புதிராகவே இருக்கும்.
            மேலும், விஞ்ஞானம் இந்த விளக்கத்தைப் புறம் தள்ளலாம்.
            அணுகுண்டுகளைப் போட்டு அழிக்கும்,
            இரசாயன ஆயுதங்களை வீசி இனங்களைக் கொத்துக் கொத்தாக அழிக்கும்,
             பெட்ரோலுக்காக ஒரு நாட்டையே அழிக்கும்,
            ஹைட்ரோ கார்பனுக்காக ஒரு பழம் பண்பாட்டையே அழிக்கும்
                        விஞ்ஞானமும் அதைப் புறம் தள்ளவே செய்யும்.
            அன்பற்ற இடத்தில் நாய்கள் கூட வாழச் சம்மதிக்காது. நாய்கள் கூட வாழச் சம்மதிக்காத அன்பற்ற இடத்தில் மனிதர்கள் வாழச் சம்மதிப்பரா? மனிதர்கள் கூட வாழச் சம்மதிக்காக அன்பற்ற இடத்தில் இருக்க உயிர் எப்படிச் சம்மதிக்கும்? அது உடலை விட்டுப் போய்க் கொண்டே இருக்கும்.
            அப்படித்தான் முதியவர்கள் போய்க் கொண்டு இருக்கிறார்கள், அனாதைகள் போய்க் கொண்டு இருக்கிறார்கள், திக்கற்றவர்கள், ஆதரவற்றவர்கள், அகதிகள் போய்க் கொண்டே இருக்கிறார்கள்.
            அன்பின்மை அழித்துக் கொண்டு இருக்கிறது.
            அன்பின்மையால் உலகை அழித்துக் கொண்டு, அய்யோ பாவம் மரணித்து விட்டாரே என்று அழும் விசித்திர உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
            அன்பால் மட்டுமே உயிர்கள் வாழும். சரிதானே! உயிர்கள் வாழும். அதாவது உயிர்களில் உயிர் வாழும். இல்லையேல் உயிர்களில் உயிர் வாழாது. அந்த உயிர்களின் உடலை விட்டு உயிர் போய்க் கொண்டே இருக்கும்.
            நாம் எப்படி வாழப் போகிறோம்? அன்போடு உயிரை உடலோடு வாழ வைத்தா? அன்பற்று உடலை விட்டு உயிரை வீழ வைத்தா?
            இதைப் புரிந்து கொண்டால் உடலை விட்டு எந்த உயிரும் போகாது. உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளும் தேவைப்படாது.
            அடுத்த முறை,
            சாலையில் அடிபட்டு ஓர் உடல் உயிருக்குப் போராடும் போது,
            விளைவித்து விளைவித்து பசியாற்ற முடியாமல் விதைத்த உடல் தன்னை மண்ணில் புதைத்துக் கொள்ள நினைக்கும் போது,
            கால் வயிற்றுக் கூழுக்கு வழியில்லாமல் பசையற்ற உழைத்த உடலிலிருந்து நசையற்று உயிர் போக எத்தனிக்கும் போது,
            இனி எதற்காக வாழ வேண்டும் என்று தற்கொலைச் சிகரமேறி ஓர் உடல் வீழ நினைக்கும் போது,
            காசுக்காக வாங்கிய தண்ணீரை விக்குபவருக்குக் கொடுப்பதா என்று மனம் சிக்கிக் தவிக்கும் போது
            கொஞ்சம் அன்பைக் கொடுங்கள்.
            அந்த அன்பு அப்படியே விட்டு விட்டு ஓடாமல் விபத்தில் அடிபட்டவருக்கான உயிர் காக்கும் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்யும்.
            அந்த அன்பு விதைத்தவர் பசியார விளைவித்தமைக்கு உரிய விலை கொடுக்கச் செய்யும்.
            அந்த அன்பு பசையற்ற உழைத்த உடலுக்கு விருந்து செய்து புது விசை கொடுக்கும்.
            அந்த அன்பு தவிப்பவருக்குத் தண்ணீர் திறந்து விடும். விலையில்லா தொலைகாட்சிகளையும், விலையில்லா மிக்ஸி கிரைண்டர்களையும் கடாசச் சொல்லி விட்டு காசுக்கா தண்ணீர் என்று கொதித்தெழுந்து விலையில்லா தண்ணீர் தரும்.
            அன்பே அனைத்தும் தரும். ஆக, ஆகச் சிறந்த அன்பே உடலை நேசித்து உயிரை அதனோடு வாழ வைக்கிறது.
            அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு என்று சொல்ல வள்ளவர் எவ்வளவு ஆராய்ந்திருக்க வேண்டும்!
            உலகில் உயிர்கள் அழிந்து விடாமல் இருக்கவும் அன்புதான் காரணம். உடலோடு உயிர் ஒட்டி இருக்கவும் அன்புதான் காரணம்.
            நம் உடலோ, பிறர் உடலோ அந்த உடலோடு உயிர் ஒட்டியிருக்க அன்பு செய்வோம்.
            அன்பு செய்யாத, அன்பு இல்லாத உடலில், உலகத்தில் உயிர் இருக்கச் சம்மதிக்காது.
            உயிர் மேல் கொண்ட ஆசைக்காகவேனும் அன்பு செய்யலாம் அல்லவா!
            அல்லது
            உயிர் போய் விடுமோ என்ற பயத்துகாகவேனும் அன்பு செய்யலாம் அல்லவா!
            எப்படியோ,
            அன்பு செய்தால் உயிர் பிழைக்கும். உலகம் தழைக்கும்.
*****

No comments:

Post a Comment