10 Mar 2018

செங்காந்தள் அறிவுத் திருவிழா - 1


செங்காந்தள் அறிவுத் திருவிழா - 1
            புத்தகக் கண்காட்சியை நோக்கி மாணவர்களைக் கொண்டு செல்வது ஒரு வகை என்றால், மாணவர்களை நோக்கி புத்தகக் கண்காட்சியைக் கொண்டு செல்வது இன்னொரு வகை.
            அப்படி மாணவர்களை நோக்கிய புத்தகக் கண்காட்சியாய் உருவாக்கப்பட்டதே அறிவுத் திருவிழா எனும் முயற்சியாகும்.
            ஒரு லட்சம் புத்தகங்களை மாணவர்களின் கைகளில் கொண்டு சேர்ப்பதே இவ்வறிவுத் திருவிழாவின் முக்கிய இலக்காகும். அவ்வகையில் இவ்வறிவுத் திருவிழா மாணவர்களுக்கானப் புத்தக இயக்கமாகும்.
            இம்முயற்சியின் படி பள்ளிகள் தோறும் புத்தகக் கண்காட்சியைக் கொண்டு செல்லும் நோக்கில் அணுகிய போது, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், பாண்டுக்குடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இத்திருவிழாவைத் தோள்களில் தாங்கிப் பெருவிழாவாக எடுத்து 08.03.2018 (வியாழன்) அன்று கொண்டாடித் தீர்த்தது.
            யாரும் எதிர்பாராத வகையில் ஐந்துக்கும் மேற்பட்ட கல்வித் துறை அதிகாரிகள், பத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ இயக்க ஆர்வலர்கள், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள், நூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குழுமி இத்திருவிழாவைப் பெருமை செய்து விட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கி தங்கள் அறிவுப் பசியைத் தீர்த்துக் கொண்டு விட்டனர்.
            பாமரர்களாகத் தோற்றம் அளித்தவர்களும் முந்நூறுக்கும், நானூறுக்கும் புத்தகம் வாங்கி உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்ற குறட்பாவைச் சாட்டையால் அடித்தபடி பாடம் சொல்லிச் சென்று இருக்கின்றனர் இத்திருவிழாவில்.
            எத்தனை நூற்றாண்டு அறிவுப் பசியோ! அதற்கு தினை அளவேனும் உண்டி படைத்த மகிழ்வு தந்தது இவ்வறிவுத் திருவிழா!
            ஊர் கூடி இழுப்பதுதானே தேர்.
            ஊர் கூடி கொண்டாடுவதுதானே திருவிழா.
            அவ்வகையில் ஓர் ஊர் போல திரண்டு இத்திருவிழாக் கொண்டாட துணை நின்ற அனைவர்க்கும் அறிவுத் திருவிழா தன் நன்றிகளைத் தலைமுறைகளைத் தாண்டியும் தெரிவித்து மகிழ்கிறது. தலைமுறைகளைத் தாண்டி நன்றிகள் சொல்வதற்குக் காரணம் இந்த நூற்றாண்டின் புத்தகக் கண்காட்சி என்பது அடுத்த நூற்றாண்டு அறிவுக்கான விதை அல்லவா!
            அவ்வகையில் அறிவுத் திருவிழாவின் இலக்கான ஒரு லட்சம் புத்தகம் என்பதில் 1024 அடைவு பெற்று இருக்கிறது.
            ஒரு லட்சம் என்ற அடைவை நோக்கிச் செல்ல 1,00,000 - 1024 = 98,976 புத்தகங்களை மாணவர்களின் கரங்களில் கொண்டு சேர்க்க வேண்டி இருக்கிறது.
            கரம் கோர்ப்போம்! பிஞ்சுக் கரங்களுக்குப் புத்தகங்களைக் கொண்டு சேர்ப்போம்! புது உலகம் வார்ப்போம்!
*****

No comments:

Post a Comment