25 Mar 2018

விருந்தோம்பல் எனும் வேள்வி இல்லையேல் தோல்வி!


குறளதிகாரம் - 9.8 - விகடபாரதி
விருந்தோம்பல் எனும் வேள்வி இல்லையேல் தோல்வி!
            கோழியா? முட்டையா? எது முதலில் என்றால் முட்டைதான் என்போர் உளர். கோழியிலிருந்து முட்டை வரும், முட்டையிலிருந்து கோழி குஞ்சுதான் வரும், கோழி வராது என்பது அவர்தம் விளக்கம்.
            இல்லறமா? துவறமா? என்றால் வள்ளுவர் இல்லறத்தைத்தான் முதன்மை என்பார். இல்லறம் நிகழ்ந்தால்தான் அன்றோ துறவறத்துக்கு ஒருவர் உருவாக முடியும்.
            குறள் அமைப்பிலும் இல்லறவியலுக்கு அடுத்தபடியாகவே துறவறவியல் இடம் பெற்று இருக்கிறது.
            மேலும்,
            அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன் என்று கேட்பவர் வள்ளுவர்.
            ‍அத்தோடு விடாது, மென்மேலும்,
            ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து என்று இல்லறத்தைத் துறவறத்தின்று உயர்வாக்குவார் வள்ளுவர்.
            துறவறத்தை இல்லறத்தார் பழித்தாலும், இல்லறத்தைத் துறவறத்தார் பழிக்க முடியாது. துறவறத்துக்கானத் துறவிகள் உருவாக இல்லறம் நடந்தாக வேண்டும். துறவிகளுக்கு உணவிட இல்லறம் இருந்தாக வேண்டும்.
            இல்லறத்தின் ஆகப் பெரும் சிறப்பே உணவிடும் அத்தகைய விருந்தோம்பல்தான். இல்லறத்தார் விருந்தோம்புவது தம்மைப் போன்ற இல்லறத்தார்களை மட்டுமல்லாது துறவறத்தாரையும் எனும் போது அதன் சிறப்பு இன்னும் பல மடங்கு ஆகிறது.
            இத்தகைய உணவிடும் சிறப்பை இருப்பவர்தான் செய்ய முடியும். துறந்து விட்டவர் எப்படிச் செய்ய முடியும்? ஒருவேளை துறந்தவர் செய்தாலும் அது இன்னொருவரிடமிருந்து பெற்றுச் செய்ததாக இருக்க முடியுமே தவிர, அவரது இருப்பிலிருந்து செய்ய முடியாது. அப்படி இருப்பிலிருந்து செய்தார் என்றால் அவர் எதைத் துறந்தார் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வார்?
            அப்படிப்பட்ட விருந்தோம்பும் சிறப்பு துறவறத்திற்கோ, அதில் இருக்கும் துறவிகளுக்கோ கிடையாது. அச்சிறப்பு இல்லறத்துக்கும், இல்லறத்தில் இருக்கும் இல்லறத்தார்க்கு மட்டுமே உடையது.
            அப்படி விருந்தோம்பி விருந்தோம்பல் எனும் வேள்வி செய்யத் தலைப்படாதவர்களே பரிந்தோம்பி பற்றுகளை விட்டு விட்டோம் என்று துறவறத்தை நோக்கி ஓடுவார்களாம்.
            எவ்வளவு பற்று கொண்டு பொருள் சேர்த்தாலும் விருந்தோம்பல் செய்து அதன் மூலம் பற்றுகளை விட்டு விட்ட துறவறத்தின் சிறப்பை பெற இயலும்.
            பற்றுகளை விட்டு விட்டு துறவறத்தின் மூலம்தான் துறவின் பெருமையை அடைய முடியும் என்றில்லை. இல்லறத்தில் விருந்தோம்புவதன் மூலமும் அதை அடைய முடியும்.
            துறவிகள் விருந்தோம்பும் சிறப்பு பெற முடியாது, சரி! இல்லறத்தில் இருந்து கொண்டும் விருந்தோம்பல் செய்யாதவர்கள் இருக்கிறார்களே உலோபியாய்!
            ஆம்!
            நிச்சயமாக, அதுவாறு,
            மற்றும் சிலர் இல்லறத்தில் இருக்கிறார்கள், பற்று கொண்டு பொருள் சேர்த்து விருந்தோம்பல் செய்யாமல். அவர்கள் பொருள் இழப்பைச் சந்திக்கும் போது பொருள் மீது தமக்கு பற்று இல்லை என்று கூறுவார்களாம் துறவிகள் போல. விருந்தோம்பல் செய்யாதவர்கள் தம் பொருள் பற்றை மறைக்க வேறு என்னதான் சொல்ல முடியும் சொல்லுங்கள்!
            கருமி ஒருவர் புதைத்து வைத்து, தினம் ரகசியமாகப் பார்த்து வந்த தங்கத்தைத் திருடன் கொண்டு போன கதை ஒன்று உண்டு அல்லவா! தங்கத்தை இழந்த அவர் புலம்பலைப் பார்த்த கிராமத்தவர்கள் ஒரு செங்கல்லைத் தங்கத்தைப் போல புதைத்து வைத்து தினம் பார்த்து வா என்று ஆறுதல் கூறி விட்டுச் செல்வார்கள் அல்லவா! அது போல விருந்தோம்பல் செய்யாத பொருள் பற்று உள்ளவர்கள் பொருள் இழப்பைச் சந்திக்கும் போது தம் புலம்பலுக்கு யாரும் ஆறுதல் சொல்லி விடுவார்களோ என முந்திக் கொண்டு தாம் பொருட்பற்று அற்றவர் என்று கூறுவார்களாம்.
            ஆக,
            விருந்தோம்பல் எனும் வேள்வி சிறப்பை இல்லறத்தில் இருந்த அறிய முடியாத துறவிகளும்,
            இல்லறத்தில் இருந்தும் விருந்தோம்பலின் உவப்பை அறிய விரும்பாத பொருட்பற்றில் உழலும் உலோபியான இல்லறத்தார்களும் மட்டுமே,
            பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர்.
            துறவிகள் கடுமையான தவ முறைகளை பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்று சொன்னால்,
            விருந்தோம்பல் செய்யாத உலோபிகள் பரிந்து ஓம்பிய பொருட்களை இழந்ததால் தமக்கு ஒன்றுமில்லை, தாம் பொருள் பற்று அற்றேம் என்பார்களாம்.
            வள்ளுவர் இதை,
            பரிந்து ஓம்பி அற்றேம் என்பர் விருந்து ஓம்பி வேள்வி தலைப் படாதார் என்கிறார்.
            விருந்தோம்பலின் உவப்பை உணர்ந்தவர் அதைச் செய்யாமல் இருக்க முடியுமா? அதன் உவப்பை உணர முடியாதவர் அதைச் செய்யாமல் இருப்பதைப் பொருட்படுத்தத்தான் முடியுமா?
            விருந்தோம்பல் எனும் வேள்வி இல்லையேல் அந்த வாழ்க்கை ஒரு தோல்வி!
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...