25 Mar 2018

பத்திரிகைகளில் பிரசுரம் ஆகும் வகையில் கவிதைகள் எழுதுவது எப்படி?


பத்திரிகைகளில் பிரசுரம் ஆகும் வகையில் கவிதைகள் எழுதுவது எப்படி?
            ஓர் இதழில் பிரசுரம் ஆவதற்கானக் கவிதையை எழுதுவது எப்படி? என்ற கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
            ஒரு சிறுகதைப் பிரசுரம் ஆவது குறித்தும் இப்படிப்பட்ட கேள்வி இருக்கிறது.
            ஒவ்வொரு இதழுக்கும் ஓர் அணுகுமுறை வைத்திருக்கிறார்கள். தேர்ந்தெடுப்பதற்கான ஆசிரியர் குழு வைத்து இருக்கிறார்கள்.
            அவ்விதழின் அணுகுமுறையோடு ஒத்துப் போவதும், ஆசிரியர் குழுவால் விரும்பப்படுதும் ஆன படைப்புகள் அது கவிதையோ, சிறுகதையோ பிரசுரமாகிறது. இதைத் தவிர வேறு கம்ப சூத்திரங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை. இருப்பின் அது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். படைப்பாளர்கள் பலருக்கு பயன் கிடைக்கலாம்.
            அஞ்சல் வாயிலாக அனுப்பினால் பிரசுரம் செய்ய மாட்டார்களோ? மின்னஞ்சலில்தான் அனுப்ப வேண்டுமா? என்று கேட்கும் படைப்பாளர்கள் இருக்கிறார்கள்.
            அந்த இதழுக்கு மின்னஞ்சல் ஒத்து வராது, அஞ்சல் வழியாக அனுப்பினால்தான் பிரசுரமாகும் என்று அனுபவப்பட்ட படைப்பாளர்கள் சொல்லும் இதழ்களும் இருக்கின்றன.
            எந்த இதழ் எப்படி என்பது தெரிந்து கொள்வது இதில் முக்கியம்.
            இதற்கு என்று புலனக் குழுக்கள் எனும் வாட்ஸப் குழுக்களும் இருக்கின்றன. அவைகளில் இணைந்து கொள்வது நல்ல பயன் தரும். எப்படி எழுதினால் பிரசுரமாகும் என்பதை அக்கு வேர் ஆணி வேராக அதில் அலசுகிறார்கள்.
            முக நூல் நட்புகளும் நல்ல பயன் தரும். முகம் தெரியாதவர்கள் கூட நல்ல நல்ல அறிவுரைகளை வழங்கிக் கொண்டு இருப்பார்கள்.
            பிரசுரம் ஆவதைப் பொருத்த வரையில்... கவிதை இதில் விசேஷம். சிறுகதை என்றால் இன்னும் விஷேசம்.
            அது எப்படி பிரசுரமாகிறது?
            எழுதி அனுப்பினால் மட்டும் போதுமா? இதழ் அலுவலகத்தில் யாரையேனும் தொடர்பு கொள்ள வேண்டுமா? மின்னஞ்சலில் எந்த நாளில், எந்த நேரத்தில் அனுப்ப வேண்டும்? என்று ஏகப்பட்ட ஐயப்பாடுகள் ஏற்படலாம்.
            எழுதி அனுப்பினால் மட்டும் போதும். பரிசு கூப்பனுக்குப் பரிசு விழுவது போல என்றாவது ஒரு நாள் பிரசுரம் ஆகலாம்.
            அப்புறம் இதழ் அலுவலகத்துக்குச் சென்று பார்த்து, அதுவரைப் பிரசுரம் ஆகிக் கொண்டிருந்த படைப்புகள் அதற்குப் பின்னால் பிரசுரம் ஆகாத துர்பாக்கியத்தை அனுபவித்தப் படைப்பாளர்கள் இருக்கிறார்கள்.
            மின்னஞ்சலில் அனுப்புவதன் நாள், நேரம் பார்ப்பது குறித்து பஞ்சாங்கம் பார்ப்பதால் பலன் உண்டா என்பதை அனுபவப்பட்டவர்கள்தான் சொல்ல வேண்டும்.
            ஒரு பிரசுரமாகும் படைப்பு அதன் பிரசுரமாவதற்கானத் தகுதியாக அதன் உள்ளடக்கத்தைக் கேட்கிறதா? நாள், நட்சத்திரம், நேரம் பார்க்கிறதா? என்பது ஒரு நல்ல கேள்வி.
            தொடர்ச்சியாக சில நேரங்களில் கவிதைகள் பிரசுரம் ஆவதுண்டு. அது நிலைமையை இன்னும் சிக்கலாக்கி விடலாம். திடீரென்று ஏன் இப்படி கவிதைகள் தொடர்ந்து பிரசுரமாகின்றன? அடிக்கடி பூகம்பம் ஏற்படுவது போல. அக்கவிதைகளை எழுதிய படைப்பாளரே அதிர்ச்சிக்கு உள்ளாகும் நேரங்கள் அவைகள்.
            அப்புறம் பல நாட்கள் எதுவும் பிரசுரம் ஆகாமல் இருக்கும் போதுதான் தொடர்ச்சியாக கவிதைகள் பிரசுரம் ஆவதில் எந்தச் சூத்திரமும் இல்லை என்பதைப் பிறருக்கு அவரால் விளக்க முடியும். அதுவரை ஏதோ ஒரு சூத்திரம் வைத்து இருப்பதாக சக படைப்பாளர்கள் முன் வைக்கும் கருத்துக்கு எந்தப் பதிலும் பொருத்தமாக இருக்க முடியாது.
            சில பத்தாண்டுகள் எழுதி முடித்துத் திரும்பிப் பார்க்கும் போது பிரசுரம் ஆவதற்கானக் கவிதைகளை, சிறுகதைகளை ஏன் இப்படி எழுதித் தீர்த்தோம் என்று நினைக்கத் தோன்றும் தருணங்கள் இருக்கிறதே! சும்மாவே இருந்திருக்கலாம்! சும்மா இருப்பதே சுகம் என்று தெரியாமலா சொன்னார்கள் நம் முன்னோர்கள்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...