28 Mar 2018

அன்பே செம்பொருள்!


குறளதிகாரம் - 10.1 - விகடபாரதி
அன்பே செம்பொருள்!
            நெஞ்சிலே வஞ்சம் வைத்து, வஞ்சத்திலே நெஞ்சம் வைத்து வாழ்வோரும் இருக்கிறார்களே!
            உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும் என்று பாடுகிறார் வள்ளலார். எவ்வுயிரையும் தம்முயிர் போல் நேசித்த வள்ளலாரே அப்படிப்பட்டவர் உறவு வேண்டாம் என வெறுக்கிறார்.
            இதயத்தைப் போல அழகான இடம் ஏது? இதயத்தைப் போல அழகானப் பொருள்தான் ஏது? இதயம் மலர் போன்றது. மலரால் பூசிக்கத் தக்கது. நேசிக்கத் தக்கவைகள் மட்டுமே வைக்க வல்லது.
            அப்படிப்பட்ட இதயம் எனும் நெஞ்சத்திலா வஞ்சம் வைப்பது, போற்றும் பொன்னை வைக்கும் பெட்டியில் சேற்று மண்ணை வைப்பது போல!
            ஏன் நெஞ்சத்தில் வஞ்சம் வைக்கக் கூடாதா? என்றால்...
            நெஞ்சத்தில் எதை வைக்கிறோமோ, அதுதானே வார்த்தையில் வெளிப்படும். அதுதானே செயலாகப் புறப்படும். பாரதி பாடுவாரே உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம் என்று. உள்ளத்தில் எது நிகழ்கிறதோ அது வாக்கினிலும் நிகழும்.
            உள்ளத்தில் அன்பை வைத்தால் வார்த்தைகளில் அன்பாய் அது வழிந்தோடும். உள்ளத்தில் வஞ்சம் வைத்தால் வார்த்தைகளில் வஞ்சமாய் அது அழித்தோடும்.
            அன்பு கலந்த வஞ்சம் கலவாத சொற்கள் செம்மையானப் பொருளைத் தரக் கூடியவை. அதாவது தூய்மை கலந்த கலப்படம் கலவாத பொருட்கள் போன்றவை.
            சொல்லில்,
            செயலில்,
            மனதில் செம்மையானப் பொருளை உணர்ந்தவர்கள் அன்பு கலந்த சொற்களுக்கே நீர் வார்க்கிறார்கள். வஞ்சகம் கலந்த சொற்களின் வேர் அறுக்கிறார்கள்.
            அன்பை மட்டும் பேச, வஞ்சத்தைத் தூக்கி வீச சொற்களின் செம்மையானப் பொருளைக் காண வேண்டும்.
            சொற்களைக் காணுதல் என்பதில் அதன் உண்மையானப் பொருள் அடங்கியிருக்கிறது. அது வெறுமனே காகிதத்தில் எழுதிக் காணுதலா? மனத்தில் காணுதல்.
            ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு செம்மையானப் பொருள் - சக்திமிக்கப் பொருள் - ஆற்றல் மிக்கப் பொருள் அடங்கியிருக்கிறது. அதனாலேயே ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும் என்ற வழக்கே உருவானது.
            சொற்களின் செம்மையைக் காண உள்ளத்தில் அன்பு வேண்டும். அன்பு கொண்டு காணும் சொற்களே செம்மையானப் பொருளைத் தரக் கூடியவை. அன்பு நிறைய உடையோர் மேலோர் என்று பாரதியைப் பாடச் செய்தது அத்தகைய செம்பொருள் கண்ட அன்பு கலந்த உணர்வுதான்.
            சொற்களாலே, அதன் செம்மையானப் பொருளாலே தமிழ்நாட்டையே தம்பியர்களின் கோட்டையாய் மாற்ற முடியும், கோட்டையையும் பிடிக்க முடியும் என்பதை அண்ணா நிரூபித்தாரே.
            போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும் என்று மாற்றான் வீட்டுத் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு மாற்றாரையும் சொற்களால் அண்ணா வசியம் செய்தாரே.
            தன் மரணத்தில் கூட எதிரிகளையும் கண்ணீர் விட்டுக் கதறச் செய்த அன்பையும், பண்பையும் தன் இன்சொற்களாலே அண்ணா உண்டாக்கினாரே.
            சமயம் வளர்த்த தமிழ்நாட்டில், சமயத்துக்கு எதிராக களம் அமைத்து, சமயத்தவர்களும் விரும்பும் வண்ணம் இன்சொலால் அண்ணா அரவணைத்தாரே. அதுதான் இன்சொலின் ஆற்றல்.
            இன்சொல்லில் அன்பு இருக்கிறது. வம்பு இல்லை.
            இன்சொல்லில் நேசமான நெஞ்சம் இருக்கிறது. மோசமான வஞ்சம் இல்லை.
            இன்சொல்லில் செம்மையானப் பொருள் இருக்கிறது. வெம்மையானப் பொருள் இல்லை.
            இன்சொல்லில் அரவணைப்பு இருக்கிறது. புறக்கணிப்பு இல்லை.
            இன்சொல்லில் ஆக்கம் இருக்கிறது. அழிவு இல்லை.
            இன்சொல்லில் ஏற்றம் இருக்கிறது. ஏமாற்றம் இல்லை.
            இன்சொல் வாழ்வைத் தருகிறது. வீழ்வைத் தருவதில்லை.
            இப்படி இன்சொல் என்பது அன்பு கலந்ததாக, வஞ்சம் கலவாததாக இருக்கும் நெஞ்சிலிருந்து புறப்பட்டு, செம்மையானப் பொருள் தருவதாக அமையும் வாய்ச் சொற்களாக அமைகிறது.
            இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச் சொல் என்று இன்சொல்லை சிலாகித்து உச்சி முகர்கிறார் வள்ளுவர்.
            அன்பே செம்பொருள். செம்பொருளே அன்பு. அன்பும், செம்பொருளும் கலந்த சொற்களே இன்சொற்கள்.
            அன்பும் செம்பொருளும் ஒன்றெனக் கண்டோர் வாய்ச் சொற்கள் இன்சொற்கள் அன்றி வெறென்ன பேசும்? அஃது அன்பெனும், பண்பெனும், நேசமெனும், பாசமெனும் பூங்காற்றாய் வீசும்!
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...