குறளதிகாரம் - 8.9 - விகடபாரதி
ஒரே நொடியில்
அழகாவது எப்படி?
அழகான கண்கள்,
அழகான மூக்கு,
அழகான உதடுகள்,
அழகான காதுகள்,
அழகான முகம்,
அழகான கைகள்,
அழகான கால்கள், அழகான தோல்,
மொத்தத்தில்
அழகான உடல்,
அழகான இவைகள்
இல்லாவிட்டாலும் மேக் அப் எனும் ஒப்பனை செய்து அழகாக்கிக் கொள்ளலாம். அப்படியும் திருப்தி
இல்லையா? அறுவை சிகிச்சை மூலம் அழகாக மாற்றிக் கொள்ளலாம்.
பொக்கை வாயோடு
காந்தியார் தன் முகத்தை எப்படி அழகாக்கிக் கொண்டார்?
முகச் சுருக்கங்களோடு
அன்னை தெரசா தன் முகத்தை எப்படி அழகாக்கிக் கொண்டார்?
தாடியும்,
முடியுமாக கார்ல் மார்க்ஸ் தன் முகத்தை எப்படி அழகாக்கிக் கொண்டார்?
தாடியும்,
கருஞ்சட்டையும், கைலியுமாய் தன்னை எப்படி பெரியார் அழகாக்கிக் கொண்டார்?
முகச்சவரம்
செய்யாத முடி நீட்டிக் கொண்டிருக்கும் முகத்தோடு கசங்கிய துண்டைத் தோளில் போட்டவாறு
எவ்வாறு தன்னை அழகுபடுத்திக் கொண்டார் அண்ணா?
அம்மை வடுக்களோடு
அழகு நிறைந்த முகமாக எப்படிக் காட்சியளித்தார் லிங்கன்?
அழகு என்பது
அழகில் இல்லை. அகத்தில் இருக்கும் அன்பில் இருக்கிறது.
அகம் அழகானால்
முகம் அழகாகிறது.
உள்ளம் அழகானால்
உடல் அழகாகிறது.
உள்ளம் அழகானால்
உலகமே அழகாகிறது.
எளிய மக்கள்
மேல் கொண்ட அன்புதான் காந்தியாரின் பொக்கை வாயை அழகாக்குகிறது.
தொடவே அருவருக்கும்
தொழுநோயாளிகளையும் தொட்டுத் தூக்கிய அரவணைப்புத்தான் அன்னை தெரசாவின் முகச் சுருக்கங்களை
மீறிய அழகைப் பொழிகிறது.
ஆலைக் கரும்பாய்
பிழியப்பட்ட உலகத் தொழிலாளிகள் மேல் காட்டிய அன்புதான் தாடியும், முடியும் நிறைந்த
கார்ல் மார்க்ஸை அழகாக்குகிறது.
சாதிக்குச்
சவுக்கடி கொடுத்து, சக மனிதர்கள் யாவரும் சமம் என்று காட்டிய சமத்துவ அன்புதான் பெரியாரின்
தாடிக்கும், கருஞ்சட்டைக்கும் அழகைக் கொடுக்கிறது.
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் ஏழை மக்கள் மேல் கொண்ட அன்புதான் முகச்சவரம் செய்யாத
அவரது முகத்தையும் அழகாக்குகிறது.
அடிமைத்தனத்தை
எதிர்த்து அனைவரும் சமம் என்ற அன்பானச் சமூகத்தை உருவாக்க அவமானங்களைத் தாங்கிக் கொண்ட
லிங்கனின் சக மனித அன்புதான் அம்மை வடுக்கள் நிறைந்த அவர் முகத்தை அழகாக்குகிறது.
அன்பு உருவாக்கும்
அழகு ஒப்பனைகளால் உருவாகும் அழகன்று.
அன்பு உருவாக்கும்
அழகு அறுவை சிசிக்சையால் உருவாகும் அழகான்று.
ஒப்பனைகளால்
உருவாக்கும் அழகு கலைந்து விடும்.
அறுவை சிகிச்சையால்
உருவாக்கும் அழகு அழிந்து விடும்.
இயற்கையாக
அமைந்த அழகும் முதுமையில் மறைந்து விடும்.
அன்பு உருவாக்கும்
அழகு கலையாதது, அழியாதது, மறையாதது.
அன்பால் உருவாகும்
அழகே நிரந்தரம்.
அன்பு உருவாக்கும்
அழகே அழிவற்றது.
அத்தகைய அன்பு
அகம் என்று சொல்லப்படும் உள்ளத்தில் இருந்தால்தான் உல் உறுப்புகள் அழகாக ஆகிறது. அழகாக
ஆகும் அந்த உடல் உறுப்புகளால் உலகுக்குப் பயன் உண்டாகிறது.
அன்பு இல்லாத
உள்ளம் கொண்ட உடலின் கண்கள் கண்ணோட்டம் கொள்ளுமா என்ன?
அன்பு இல்லாத
உள்ளம் கொண்ட உடலின் செவிகளுக்கு பசியால் ஏங்கும் அழுகுரல் கேட்குமா என்ன?
அன்பு இல்லாத
உள்ளம் கொண்ட உடலின் வாய்க்கு ஆறுதல் மொழி சொல்லத் தோன்றுமா என்ன?
அன்பு இல்லாத
உள்ளம் கொண்ட உடலின் கைகள் தவிப்பவர்களுக்கு உதவி செய்ய நீளுமா என்ன?
அன்பு இல்லாத
உள்ளம் கொண்ட உடலின் கால்கள் உயிருக்காகப் போராடுபவருக்காக உயிர் காக்க ஓடுமா என்ன?
அன்பு இல்லாத
உள்ளத்தின் உடல் உறுப்புகள் பிறருக்காக சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடுவதில்லை.
அன்பு கொண்ட
உள்ளமோ தன்னையே அள்ளித் தருகிறது.
அன்பு என்பது
உள்ளத்தில் இருந்தால்தான் உடல் உறுப்புகளால் இந்த உலகுக்கு ஏதாவது பயன் தரும் வகையில்
அவைகளால் இயங்க முடிகிறது.
அன்பு என்பது
உள்ளத்தில் இல்லாவிட்டால் உடல் உறுப்புகளால் இந்த உலகுக்கு எந்தப் பயனையும் செய்ய முடியாமல்
போய் விடுகிறது.
இதைத்தான்...
புறத்து உறுப்பு
எல்லாம் எவன் செய்யும்? யாக்கை அகத்து உறுப்பு அன்பிலவர்க்கு என்கிறார் வள்ளுவர்.
கைகளும்,
கால்களும் இருந்தாலும் அதன் பயன் உலகுக்குக்குக் கிடைக்க உள்ளத்தில் அன்பு இருக்க வேண்டும்.
கைகள் இல்லாவிட்டாலும்,
கால்கள் மட்டும் இருக்கும் கால்நடைகள் கூட உலகுக்குப் பயன் தரும் வகையில் இருப்பது
அவைகள் உள்ளத்தில் இருக்கும் அன்பால்தான்.
கால்களோடு
கைகள் இருந்தும் மனிதர்களில் சிலர் யாருக்கும் எந்தப் பயனும் தராத வகையில் இருப்பது
அவர்கள் உள்ளத்தில் இருக்கும் அன்பின்மையால்தான்.
அன்பு கொண்ட
உள்ளம் உள்ளது அது மிருகம் ஆயினும் பயன் தருகிறது.
அன்பு இல்லாத
உள்ளம் கொண்டவர் அவர் மனிதர் ஆயினும் பயன் தராமல் போகிறார்.
அன்பு ஆக்குகிறது.
அன்பின்மைப் போக்குகிறது.
இப்படித்தான்
அன்பு கொண்ட மிருகம் மனிதர்களை விட அழகாகிறது. அன்பு இல்லாத மனிதம் மிருகத்தை விட
அசிங்கமாகிறது.
மனிதர்கள்
நாம் நினைத்தால் ஒரே நொடியில்,
ஒப்பனைகள்
இல்லாமல்,
அழகு சேர்க்கும்
அறுவைச் சிகிச்சைகள் இல்லாமல் அடுத்த மைக்ரோ செகண்டே அழகாக முடியும்,
உள்ளத்தில்
அன்பைக் கொண்டு வந்தால், அன்பு உலக மகா அழகைக் கொண்டு வந்து விடுகிறது.
அம்மா அழகோ?
இல்லையோ? அன்பு அவளை எவ்வளவு அழகாகக் காட்டுகிறது! ஆக அன்பே அழகு! இதை விடவும் வேறு
சாட்சியம் வேண்டுமா என்ன?!
*****
No comments:
Post a Comment