6 Mar 2018

ஒரு தாயின் தவம்!


குறளதிகாரம் - 7.9 - விகடபாரதி
ஒரு தாயின் தவம்!
            உயிர்கள் ஒரு முறை பிறக்கின்றன, ஒரு முறை இறக்கின்றன.
            மனிதர் இரு முறை பிறக்கிறார்.
            முதலில் இந்த பூமியில் ஓர் உயிராகப் பிறக்கிறார்.
            இரண்டாவது ஒரு சான்றோராகப் பிறக்கிறார்.
            உலகத்து வலிகளை எல்லாம் விஞ்சக் கூடியது பிரசவ வலி. அந்த வலியைப் பொறுத்துக் கொண்டு தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். தம் குழந்தை முகம் பார்த்ததும் அத்தனை வலிகளையும் மறந்து போகிறாள். மனம் உவக்கிறாள்.
            குழந்தையின் பிறப்பு தாயின் மனம் உவக்கச் செய்கிறது.
            இதுதான் தாய்க்குப் பெரிதான உவப்பா என்றால் இதுவும் ஒரு உவப்பு அவ்வளவே.
            ஒரு தாய்க்கு பெரிதான உவப்பு தம் குழந்தைச் சான்றோராகும் இரண்டாம் பிறப்பை அடைவதைப் பார்க்கும் போதுதான் நிகழ்கிறது.
            தந்தைக்கு தம் பிள்ளை அறிவாளியாக இருப்பதில் மகிழ்ச்சி உண்டாகும், தம் பிள்ளை பணக்காரராக இருப்பதில் மகிழ்ச்சி உண்டாகும், தம் பிள்ளை சாதனையாராக இருப்பதில் மகிழ்ச்சி உண்டாகும், தம் பிள்ளை வீரராக இருப்பதில் மகிழ்ச்சி உண்டாகும், தம் பிள்ளை தலைவராக இருப்பதில் மகிழ்ச்சி உண்டாகும்.
            தாய்க்கு மட்டுமே தம் பிள்ளை நல்லவர் என்று சொல்வதில் தந்தையை விடவும் அதிக மகிழ்ச்சி உண்டாகும்.
            அவையத்து முந்தியிருக்கச் செய்யும் தந்தை தம் பிள்ளை அறிவுடையவராக இருப்பதில் தனி மகிழ்ச்சி கொள்வார் என்றால், தாயானவள் தம் பிள்ளை அறிவோடு பண்பும் நிறைந்தவராக இருந்தால் மட்டும் மகிழ்ச்சிக் கொள்வாள்.
            அறிவும், பண்பும் நிறைந்த அத்தன்மையையே வள்ளுவர் சான்றாண்மை என்கிறார். அப்பண்பு நிரம்பப் பெற்றோரே சான்றோர் எனப்படுகிறார்.
            தம் பிள்ளை அறிவுடையோராக இருந்து, பண்பற்றவராக இருப்பதை எந்தத் தாயும் விரும்புவதில்லை.
            ஆண்மையின் எதிர்பார்ப்பு வீரம் என்றால், பெண்மையின் எதிர்பார்ப்பு வீரத்தோடு கூடிய பண்பும் இணைந்ததாக இருக்கிறது.
            இந்த இடத்தில்தான் ஒரு தந்தையின் மகிழ்வு மற்றும் எதிர்பார்ப்பிலிருந்து தாய் வேறுபடுகிறாள்.
            தந்தைக்கு அறிவான, வீரமான பிள்ளைகள் என்றால், தாய்க்குப் பண்பான பிள்ளைகளே உவப்பாக இருக்கிறது.
            தம் பிள்ளைகள் மூலம் பலமான சமுதாயத்தை உருவாக்கத் தந்தை விளைந்தால், பண்புகள் நிறைந்த நலமான சமுதாயத்தை உருவாக்கப்படுவதையே தாய் விழைகிறாள்.
            ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டத் தாய் என்கிறார் வள்ளுவர்.
            மகனைச் சான்றோன் எனக் கேட்கத்தான் தாய் விரும்புவாளா? மகளை அப்படிக் கேட்க விரும்ப மாட்டாளா என்ன?
            இதிலும் நுட்பமான ஒரு விவரம் அடங்கி இருக்கவே செய்கிறது.
            பெண்மை என்பதே பண்புகளோடு பொருந்தியதாக இருக்கிறது. பெண் என்பவள் பிறக்கும் போதே சான்றோர் ஆகி விடுகிறாள். மரபிலே பொருந்தி இருக்கும் பெண்மைக்கு உரிய அன்பும், பண்பும் அவளைச் சான்றோராகவே பிறக்கச் செய்கிறது. ஆண்மைக்குத்தான் அந்த வாய்ப்பு இல்லாமல் போகிறது.
            ஆண்மை என்பது பண்புகளைப் புறக்கணித்து தன் அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் நிலைநாட்டவே விரும்புகிறது.
            அப்படிப்பட்ட ஆண்மை வெறும் முரட்டுத்தனமான வீரம் நிறைந்ததாக இல்லாமல் பண்பு நிறைந்த வீரமாக, ஆளுமையாக இருப்பதையே தாய் விரும்புகிறாள்.
            ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பிறந்த ஆண், பெண்ணின் வயிற்றையே எட்டி உதைத்தால் எப்படியிருக்கும்? பெண்களுக்கு எதிரான ஆண்களின் வன்கொடுமைகள் இப்படித்தான் உலகம் எங்கும் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. அதுவும் இன்றைய காலக் கட்டத்தில் நடந்தேறிக் கொண்டிருக்கும் அறிவார்ந்த வன்கொடுமைகள் சொல்லும் கணக்கில் சேர்வதில்லை.
            ஆண்மைக்கே உரிய வீரம் இருந்த போதும், அறிவால் நிரம்பி அவையத்து முந்தி இருந்த போதும், வீரம் மற்றும் அறிவுக்குரிய அதே அளவுக்குப் பண்புகளோடு இருக்கும் சான்றாண்மையே தம் மகனிடம் ஒரு தாய் பெரிது உவக்கும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
            அந்த எதிர்பார்ப்பு மற்றவர்கள் சான்றோன் எனச் சொல்ல தம் காதுகளால் கேட்கும் போது தம் மகனைப் பெற்றதற்காகப் பெரிதும் மகிழ்கிறாள். மகனைப் பெற்றெடுத்ததை விட இப்போதும் இன்னும் மகிழ்கிறாள்.
            தாம் தந்த விதை பழுதற்ற விதை என்ற மரத்தின் மகிழ்ச்சியைப் போன்றது அது. தாம் பெற்ற மகன் இந்தப் பூமி பந்தின் நேசகன் என்பதால் ஒரு தாய்க்கு ஏற்படும் மகிழ்ச்சி அது.
            ஒரு பெண் குழந்தையைப் பெற்றாலே தாயாகி விடுவாள்.
            ஓர் ஆணுக்கு?
            அவன் சான்றோன் எனச் சொல்லப்படும் போதுதான் தாய்மை அடைகிறான். அதாவது காக்கும் தன்மை அடைகிறான். தம் வீரத்தால், தம் அறிவால் மனிதக் குலத்தைக் காத்தல் செய்யும் அத்தாய்மைத் தன்மைதான் சான்றாண்மை.
            அதை தம் மகன் பெற வேண்டும் என்பதே ஒரு தாயின் கனவாக இருக்கிறது.
            அத்தன்மையை தம் மகன் அடைய வேண்டும் என்பதே ஒரு தாயின் தவமாக இருக்கிறது.
            அத்தாயின் தவத்திற்குக் கிடைக்கும் வரம்தான் சான்றோன் எனக் கேட்கும் அச்சொல்.
            தம் மகன் பிறப்பதற்காக பத்து மாதம் சுமந்து காத்திருக்கும் தாய், அதன் பின் தம் மகன் சான்றோன் எனச் சொல்லக் கேட்கும் சொல்லுக்காகக் காத்திருக்கிறாள்.
            அந்தக் காத்திருப்பு கனியும் போதுதான் தன் தாய்மையை மெச்சிக் கொள்கிறாள், பெரிது உவக்கிறாள். தான் இச்சமூகத்துக்கு நல்ல வித்தையேத் தந்திருப்பதாக நிறைவு கொள்கிறாள்.
            ஒரு தாயின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை மகனுக்கு இருக்கிறது.
            தமக்குப் பிள்ளைகள் பிறப்பதை விட, பிறந்தப் பிள்ளைகள் சான்றோராகச் சிறப்பதையே ஒரு தாய் விரும்புகிறாள்.
            இதன் மூலம் அறியப்படுவது யாதென்றால்,
            ஒரு நற்சமூகம் உருவாக வேண்டும் என்ற உள்ளக் கிடக்கையில் ஓர் ஆணை விட ஒரு பெண்ணே அதிக அக்கறை கொண்டவளாக இருக்கிறாள்.
            வெறும் சாதனையாளராக அல்லாமல்,
            வெறும் வீரராக அல்லாமல்,
            வெறும் அறிவாளியாக அல்லாமல்,
            வெறும் பணக்காரராக அல்லாமல்,
            வெறும் தலைவராக அல்லாமல்
            தம் பிள்ளைகளைச் சான்றோராக அழகு பார்க்க நினைக்கும் தாயின் கனவினால்தான் இந்தப் பூமியின் ஒவ்வொரு விடியலும் அழகாக விடிகிறது. இன்னும் இந்த உலகம் அழிந்து படாமல் அழகாக சிறக்கிறது.
            சான்றோன் எனச் சொல்லக் கேட்கும் சொல்லே ஒரு தாய்க்கு பெரிதும் மகிழ்ச்சி. மற்றதெல்லாம் அவளுக்கும் வெற்றுப் புகழ்ச்சி.
            ஒரு தாயின் நுண்ணுணர்வை யாரும் ஏமாற்றி விட முடியாது. அவளின் நுண்ணுணர்வு தம் மகன் சான்றோன் எனக் கேட்பதையே விரும்புகிறது.
            தந்தை கனவுதான் காண்கிறார். தாய் தவமே இருக்கிறாள். பெண்மையை ஆண்மை வெல்ல முடியாது. அதுவும் தாய்மையை...?!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...