6 Mar 2018

பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி இடும் முறை!


பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி இடும் முறை!
            எதையும் மாற்ற முடியவில்லை என்று நினைக்கலாம். எதற்கு மாற்ற வேண்டும்? ஏன் மாற்ற வேண்டும்? இங்கு யாரும் அவரவர் மனநிலையை விட்டு மாற விரும்புவதில்லை. யாரும் அவரவர் மனநிலையிலிருந்து மாறி வர மாட்டார்கள் எனும் போது எப்படி மாற்றத்தை உருவாக்குவது?
            இயன்றதை, முடிந்ததைச் செய்து கொண்டு இருப்பது ஒரு வழி. மாறுகின்ற அளவு மாறியே தீரும். இதில் எதிர்பார்ப்புகளை நுழைத்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்கிறான் எஸ்.கே. இன்னும் நிறைய மாறும் என்று எதிர்பார்த்து தளர்ந்து விடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறான் எஸ்.கே. நிறைவேறவில்லையே என்று அதிகபட்சமான அளவை எடுத்துக் கொள்வது எபோதும் சிக்கலுக்கே வழி வகுக்கும்.
            இவர்கள் இப்படி மாற்றத்துக்கு உட்படாமல் அப்படியே இருக்கிறார்களே என்று ஆராய்ந்து குழம்பிப் போக வேண்டாம் என்பது எஸ்.கே.வின் வேண்டுகோள். அவர்கள் அதற்கு மாறாக நடந்து கொண்டால்தானே ஆச்சர்யப்பட வேண்டும். அவர்கள் அப்படித்தானே நடந்து கொள்வார்கள். இதில் எஸ்.கே. செய்ய என்ன இருக்கிறது?
            நீங்கள் சில முடிவுகளுக்கு எப்படி ஒத்துக் கொள்கிறீர்கள்? நீங்கள் ஒத்துக் கொள்ளும் முடிவுகளே உங்கள் பிரச்சனை. அதை ஏற்றுக் கொண்டதே உங்கள் தலையாயச் சிக்கல். எஸ்.கே. தன் போக்குக்கு எந்த முடிவுக்கும் வராது இருந்த வரை அவனுக்கு எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை. மற்றவர்கள் முடிவுகளை சுமந்த போதுதான் எஸ்.கே. பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்கிறான்.
            அவர்களின் முடிவுகளை அவர்கள் எஸ்.கே. மேல் சுமத்தியிருக்கிறார்கள். எஸ்.கே.வை நிர்பந்தித்திருக்கிறார்கள். எதையாவது செய்து கொள்ளட்டும்! எஸ்.கே.வை ஏன் இதில் இழுக்கிறார்கள்? பலியாடு ஆக்குகிறார்கள்? சரியாக நடந்தால் சந்தோசப்படவும், தவறாக நடந்தால் கவலைப்படவும் கூடிய ஜீவனான எஸ்.கே. இதிலெல்லாம் இழுக்கப்பட்டு சின்னா பின்னமாக ஆகக் கூடாதுதான்.
            இப்படியெல்லாம் செய்ய வேண்டும், இவைகள் எல்லாம் நம் கடமைகள் என்று நினைப்பதில் எந்தத் தவறும் இல்லைதான். அவைகளை எல்லாம் உறுதியோடு நின்று சாதிக்கும் மனோதிடம் எஸ்.கே.விடம் இருக்கிறதா? இல்லை என்றால் அதுதான் பிரச்சனையின் ஆணிவேர்.
            அதனால்தான் எஸ்.கே. எதிலும் கருத்துக் கூற வேண்டியதில்லை, எதையும் சமாதானப்படுத்த வேண்டியதில்லை என்று அறிவுறுத்தப்படுகிறான். எஸ்.கே.வின் இடம் எதுவோ அதில் இயல்பாக எஸ்.கே.வின் கருத்துகள் வெளிப்படும். இதற்காக யாரும் எஸ்.கே.வைக் கட்டாயப்படுத்தி, அதன் மூலம் வருத்திக் கொள்ள வேண்டியதில்லை.
            இதிலிருந்து எல்லாம் எஸ்.கே. சொல்ல வருவது என்னவென்றால்,
            ஒருவர் சொல்லும் முடிவு ஒத்து வராது என்றால் மிகப் பணிவாக, மிக நாகரிகமாக மறுத்து விடுவது நல்லது. அதை ஏற்றுக் கொண்டு தலைவலியாக சுமப்பதில் என்னவாகப் போகிறது?
            உங்களுடைய பிரச்சனைகள் என்பது வேறு. இதை மற்றவர்களோடோ, மற்றவைகளோடோ இணைத்துக் கொண்டு குழப்பிக் கொள்வதால் பிரச்சனை சம்பந்தம் இல்லாமல் விஸ்வரூபம் எடுக்குமே தவிர தீர்வை நோக்கிச் செல்லாது. சமயங்களில் சாதாரணப் பிரச்சனைகளே சம்பந்தம் இல்லாமல் சிக்கல் ஆவதால், உங்களது தனிப்பட்டப் பிரச்சனைகள் இடியாப்பமே ஆகி விடும். உங்களுடைய பிரச்சனைகளைச் சாவகாசமாக மெதுவாகத் தீர்த்துக் கொள்ளலாம். அதை வேறு எதனோடும் தொடர்புபடுத்திக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
            நீங்கள் சொல்வதையெல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள் என்பதால் அநாவசியமாகக் கருத்துச் சொல்லிக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. இதனால் அவர்களும் சந்தோசமாக இருப்பார்கள். நீங்களும் சந்தோசமாக இருப்பீர்கள்.
            லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்பார்களே அது போல,
            எப்போதும் சாதாரணமாக இருந்தால், எல்லாமே சாதாரணமாகவே இருக்கும்!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...