15 Mar 2018

அன்பென்ற மரத்திலே அகிலங்கள் அடையட்டும்!


குறளதிகாரம் - 8.8 - விகடபாரதி
அன்பென்ற மரத்திலே அகிலங்கள் அடையட்டும்!
            நல்ல நிலத்தில் முளை விடும் விதையே செடியாகிறது.
            செடியாகும் அது கிடைக்கும் நீர் வளத்தைப் பொருத்தே மரமாக செழிக்கிறது.
            அம்மரம் வற்றல் மரமாகி நிழல் தராமல் போவதும், வளமையான மரமாகி நிழல் தந்து தழைப்பதும் முளை விட்ட நிலத்தின் நீர் ஆதாரத்தைப் பொருத்தது.
            வாழ்க்கையும் ஒரு விதை போலத்தான் தொடங்குகிறது.
            எந்த நிலத்தில் விழுகிறதோ அந்த நிலத்துக்கு ஏற்பவே விதை வளர்கிறது. எந்தக் குடும்பத்தில் பிறக்கிறமோ, எந்தச் சமூகத்தில் வளர்கிறோமோ அதற்கு ஏற்பவே வாழ்க்கையும் அமைகிறது.
            விதை பாறையில் விழுந்தாலும் முளைக்கிறது.
            கோபுரத்தில் விழுந்தாலும் முளைக்கிறது.
            காங்கிரீட்டில் விழும் விதையும் முளைக்கிறது.
            பாலை நிலத்திலும் விதை முளைக்கவே செய்கிறது.
            பாலை நிலத்துக்கு உரிய செடிகளும், மரங்களும் இருக்கவே செய்கின்றன.
            எப்படியோ விதை முளைத்து விடும். முளைத்த விதை தழைப்பது நிலத்துக்கு நிலம் மாறுபடும்.
            வளமான நிலத்தில் விழுந்த விதை முளைப்பதற்கும், பாறை நிலத்தில் விழுந்த விதை முளைப்பதற்கும் வேறுபாடு இல்லையென்றாலும் தழைப்பதில் வேறுபாடு இருக்கவே செய்யும்.
            விதை முளைக்க நிலம் போலவே, வாழ்க்கை நல்ல விதமாக முளை விட குடும்பமும் சமூகமும். எப்படிப்பட்ட குடும்பத்தில், எப்படிப்பட்ட சமூகத்தில் வளர்கிறோமே அதற்கேற்பவே வாழ்க்கை தழைக்கிறது.
            பிறப்பதில் எவ்வித வேறுபாடு இல்லையென்றாலும் குடும்பம் மற்றும் சமூகத்தின் தன்மைகளால் வேறுபாடுகள் உருவாகவே செய்யும்.
            நிலமும் பாறை நிலமாகி, நீர் கிடைக்காமல் மரமும் வற்றல் மரமாகி இருந்தால் பிறகு அம்மரம் தளிர்க்குமா என்ன?
            ஒன்று - நீர் கிடைக்காத போது வேர்கள் அடியாழம் வரைச் சென்று நீர் தேடுவதற்கு ஏற்ப நிலம் மென்னிலமாக இருக்க வேண்டும். பாறை போன்ற வன்னிலமாக இருக்கக் கூடாது.
            இரண்டு - நீர் கிடைக்கவில்லையா? அது கிடைக்கும் காலம் வரும் வரை பட்டுப் போகாத அளவுக்கு மரம் தழைத்து அதாவது செழிப்பாக இருக்க வேண்டும்.
            இந்த இரண்டும் இல்லையென்றால் அம்மரம் பட்டுப் போவது தவிர்க்க முடியாது.
            வாழ்க்கையும் அப்படித்தான்.
            ஒன்று - சுற்றியிருப்பவர்கள், சூழ்ந்திருப்பவர்கள் அன்புடையவர்களாக இருக்க வேண்டும்.
            இரண்டு - அப்படி இல்லை என்றால் அன்பு காட்டாத அவர்களிடம் நாமாவது அன்பாக இருக்க வேண்டும்.
            இரண்டு இல்லையென்றால், சந்தேகமில்லாமல் அந்த வாழ்க்கை பாறை நிலத்தில் பட்டுப் போக இருக்கும் மரம் தளிர்ப்பதைப் போலத்தான்.
            சுற்றிச் சூழ்ந்து இருப்பவர்களும் அன்பாக இருந்து, நாமும் அன்பாக இருந்து விட்டால் சொல்லவே வேண்டாம், அந்த வாழ்க்கை வளமான நிலத்தில், நலமான நீர் வளத்தோடு தழைத்து வளரும் மரம் போன்றதாக செழிக்கும்.
            தழைத்து வளர்ந்த மரத்தை நாடி பறவைகள் வரும். அதன் நிழலைத் தேடி மனிதர்கள் உட்பட ஆடுகள், மாடுகள் என்று விலங்குகள் எல்லாம் வரும். தழைத்த மரத்தின் சிறப்பு அது.
            பட்டுப் போன மரத்தைத் தேடி யார் வருவார்கள்?
            அது போல அன்பு இல்லாமல் கெட்டுப் போன மனிதரை நாடி யார் வருவார்கள்?
            பட்டுப் போன மரமாவது விறகாகிப் பயன் தரும்?
            அன்பின்றி கெட்டுப் போன மனிதர் என்ன பயன் தருவார்?
            தழைத்துச் செழித்த மரம் போல் வாழ்க்கை தளிர்த்துக் கொண்டே இருக்க அகத்தில் அதாவது மனத்தில் அன்பு இருந்தால் போதும். வாழ்க்கை தழைக்கும், செழிக்கும், எப்போதும் துளிர்க்கும்.
            அது சரி, இப்போது ஒரு கேள்வி எழக் கூடும்!
            சுற்றிச் சூழ்ந்திருப்பவர்கள் நம்மோடு அன்பாக இருக்க வேண்டுமா? சுற்றிச் சூழ்ந்து இருப்பவர்களோடு நாம் அன்பாக இருக்க வேண்டுமா?
            அவர்கள் நம்மோடு அன்பாக இருக்க வேண்டும், நாமும் அவர்களோடு அன்பாக இருக்க வேண்டும். இதில் முதன்மை எதுவென்றால், நாம் அவர்களோடு அன்பாக இருக்க வேண்டும்.
            அன்பை யார் முதலில் கொடுப்பது என்று போட்டி இருக்க வேண்டுமே தவிர, முதலில் அவர்கள்தான் அன்பை கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது.
            அன்பைக் கொடுக்கும் போதுதான் அன்பு உருவாகிறது.
            முதலில் கொடுக்கப்படுவது நமது அன்பாகவே இருக்கட்டும், முதலில் வணக்கம் சொல்வபவரே முதன்மையான வணக்கத்துக்கு உரியவர் என்பது போல.
            தீக்குச்சி நெருப்பைக் கொடுத்தால்தான் விறகு எரிய முடியும். விறகு எரியத் தொடங்கினால் நான் நெருப்பைக் கொடுப்பேன் என்று ஒரு தீக்குச்சி சொன்னால் எப்படி இருக்கும்?
            மற்றவர்கள் அன்போடு இருந்தால் நானும் அன்பாக இருப்பேன் என்று சொல்வது அப்படி ஒரு வாதம்தான். நாம் அன்போடு இருந்தால் மற்றவர்களும அன்பாக இருப்பார்கள்.
            முதலில் கொடுக்கப்பட வேண்டியது நமது அன்பே.
            அப்படி கொடுப்பதற்கு நிறைந்த அன்பு அகத்தில் அதாவது மனத்தில் எப்போது இருக்கட்டும். அதனால் உயிர் வாழ்க்கை தழைக்கட்டும்.
            மாறாக அன்பு அகத்தில் அதாவது மனத்தில் இல்லாமல் போனால் வாழ்க்கை தழைக்காது. ஆம்! பட்ட மரம் ஒரு போதும் துளிர்க்காது.
            அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வான்பாற் கண் வற்றல் மரம் தளிர்த்து அற்று.
            பட்ட மரம் தளிர்க்காது. அன்பற்ற மனம் செழிக்காது.
            மற்றவர்களின் அன்பற்ற தன்மையைக் காட்டி நாமும் அன்பற்றவர்களாய் இருப்பது ஒரு வகை அயோக்கியத் தனமே.
            அன்பற்று இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அன்போடு இருப்பதற்கு ஒரு காரணம் மட்டுமே, அது அன்போடு இருப்பது மட்டுமே.
            கொடுப்பதற்கு நிறைய அன்பு மனத்தில் இருந்தால் வாழ்க்கையில் எதுவும் கிடைக்கும், எல்லாமும் கிடைக்கும். அன்பற்ற மனதுக்கு எதுவும் கிடைப்பதில்லை. அதனால் சுற்றியிருப்பவர்களுக்கும் பெரிய தொல்லை. அன்பே அகிலத்தின் எல்லை.
            ஓர் அன்பான மனம் ஓராயிரம் உயிர்களை செழிக்கச் செய்யும், ஒரு மழை ஓராயிரம் பயிர்களைத் தழைக்கச் செய்வது போல.
            நிழல் தரும் மரத்திலே பறவைகள் அடைவதைப் போல, அன்பென்ற மரத்திலே அகிலங்கள் அடையட்டும். அன்பென்ற மரமே வானமாய் விரியட்டும். அதில் மகிழ்ச்சி என்ற நட்சத்திரங்களே பிரகாசமாய் தெரியட்டும்.
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...